
(கடந்த நவம்பர் 29-ஆம் தேதி நடைபெற்ற சபா மாநிலத்திற்கான 17-வது சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்துத் தன் கண்ணோட்டத்தை வழங்குகிறார் இரா.முத்தரசன்)
- போட்டியிட்ட 8 தொகுதிகளிலும் தோல்வி கண்ட ஜசெக!
- 13 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் மட்டும் வென்ற பிகேஆர்!
- 41 தொகுதிகளில் களமிறங்கி 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற அம்னோ!
- ஒரு தொகுதியை வென்று முதன் முதலில் சபாவில் கால்பதிக்கும் பாஸ்!
- 5 ஆண்டுகள் தாக்குப் பிடிக்குமா ஹாஜிஜி நூர் அரசாங்கம்?
சபா சட்டமன்றத் தேர்தலின் முடிவுகளை ஆய்வு செய்யும்போது மிகத் தெளிவாக சபா மக்கள் வழங்கியுள்ள செய்தி – மேற்கு மலேசியக் கட்சிகள் சகவாசமே எங்களுக்கு வேண்டாம் என்பதுதான்! சில அதிர்ச்சி முடிவுகள் அதனையே சுட்டிக் காட்டுகின்றன. இந்த நிலையை எடுத்துக் காட்டும் சில நடப்புகளைப் பார்ப்போம்!
8 தொகுதிகளிலும் தோல்வியடைந்த ஜசெக
கடந்த காலங்களில் சபா சட்டமன்றத் தேர்தல்களில் எவ்வளவு கடுமையானப் போட்டிகள் இருந்தாலும் – கூட்டணியாகப் போட்டியிட்டாலும் – தனித்துப் போட்டியிட்டாலும் – எப்போதுமே ஜசெக சீன வாக்காளர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட – சில சட்டமன்றத் தொகுதிகளிலும் நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெல்வது வழக்கம்.
2020 சட்டமன்றத் தேர்தலில் 6 தொகுதிகளில் வென்ற ஜசெக இந்த முறை பக்காத்தான் ஹாரப்பான் சின்னத்தில் போட்டியிட்ட 8 தொகுதிகளிலும் தோல்வி கண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அண்மையக் காலமாக சீனர்கள் ஜசெகவைப் புறக்கணிக்கத் தொடங்கியுள்ளார்கள் என்ற உறுதியற்ற தகவல்கள் உலவி வந்தன. இந்தத் தோல்வி அதன் பிரதிபலிப்பா அல்லது மேற்கு மலேசியக் கட்சிகளைப் புறக்கணிக்கும் சபா மக்களின் நகர்வுகளின் காரணமா என்பதைக் கணிக்க முடியவில்லை.
ஜசெக தோற்ற தொகுதிகளில் பெரும்பாலும் வாரிசான் சபா உள்ளூர் சீன வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெற்றிருக்கிறது. எனவே, சீன வேட்பாளர்களாக இருந்தாலும் அவர்கள் உள்ளூர் கட்சியைப் பிரதிநிதிக்க வேண்டும் – மாறாக மேற்கு மலேசியக் கட்சியைப் பிரதிநிதிக்கக் கூடாது – என சபா வாக்காளர்கள் தரும் அறிகுறியாகவும் இந்த மாற்றத்தைப் பார்க்கலாம்.
ஜசெக, பக்காத்தான் சின்னத்தைப் பயன்படுத்தாமல், சொந்த சின்னத்தில் போட்டியிட்டிருந்தாலும் இதே நிலைமைதான் ஏற்பட்டிருக்குமா என்பது இன்னொரு கேள்வி. காரணம் அதே பக்காத்தான் சின்னத்தில் போட்டியிட்ட பிகேஆர் கட்சியும் மோசமானத் தோல்விகளைச் சந்தித்துள்ளது.
பிகேஆர் 13 தொகுதிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி
பிரதமர் அன்வாரின் தீவிரப் பிரச்சாரம் – ஆளும் ஜிஆர்எஸ் கட்சியுடன் கூட்டணி – போன்ற சாதகமான அம்சங்கள் இருந்தும் – போட்டியிட்ட 13 தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது பிகேஆர்.
பக்காத்தான் ஹாரப்பான் சின்னத்தில் பிகேஆர், ஜசெக, அமானா கட்சிகள் இணைந்து 22 தொகுதிகளில், ஆளும் ஜிஆர்எஸ் கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்டன. எனினும் ஜசெக, அமானா போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவ, பிகேஆர் மட்டும் ஒரே ஒரு தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறது.
பிகேஆர் வேட்பாளராகப் போட்டியிட்ட சபா ஆளுநர் துன் மூசா அமானின் மகன் யமானி ஹாபிசும் தோல்வியைத் தழுவியிருக்கிறார்.
பிகேஆரை சபா வாக்காளர்கள் நிராகரித்திருப்பதும் மேற்கு மலேசியக் கட்சிகளைப் புறக்கணிக்கும் சபா வாக்காளர்களின் மனோநிலையைக் காட்டும் இன்னோர் உதாரணமாகும்.
45 தொகுதிகளில் போட்டியிட்டு
6-இல் மட்டுமே வென்ற தேசிய முன்னணி
பக்காத்தான் ஹாரப்பானை விட சற்றே மேம்பட்ட வெற்றிகளை தேசிய முன்னணி பெற்றிருப்பது ஓர் ஆச்சரியம். 6 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. எனினும் 45 தொகுதிகளில் போட்டியிட்டு, 6 தொகுதிகளில் மட்டுமே வென்றிருக்கும் தேசிய முன்னணி ஒரு காலத்தில் 3 தவணைகளாக சபாவை ஆண்டது என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது.
அதைவைத்துப் பார்க்கும்போது இதுவும் தேசிய முன்னணிக்கு மோசமான தோல்விதான். சபா வாக்காளர்களின் புறக்கணிப்புதான்.
அம்னோ வேட்பாளர்கள் 41 தொகுதிகளில் களம் கண்டனர். ஆனால் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றனர். மசீச போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது. தேசிய முன்னணியின் உள்ளூர் உறுப்பியக் கட்சியான பிபிஆர்எஸ் 2 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.
ஆக, தேசிய முன்னணி 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. சர்ச்சைக்குரிய அதன் சபா மாநிலத் தலைவர் புங் மொக்தாரும் லாமாக் தொகுதியில் வெற்றி பெற்றிருப்பது தேசிய முன்னணிக்கான ஆறுதல்.
பாஸ் மட்டுமே விதிவிலக்கு – ஒரு தொகுதியைக் கைப்பற்றியது
மேற்கு மலேசியாவைத் தலைமையகமாகக் கொண்ட பெரிக்காத்தான் நேஷனலும் மோசமான தோல்விகளைச் சந்தித்திருக்கிறது. ஒரே விதிவிலக்கு பாஸ். காராம்பூனாய் தொகுதியில் யாரும் எதிர்பாரா வண்ணம் வெற்றி பெற்று சபா மாநிலத்தில் தன் முதல் சட்டமன்றத் தொகுதியைப் பெற்றுக் கால்பதித்திருக்கிறது.
ஆனால் இதனை பாஸ் கட்சியின் வெற்றியாகப் பார்க்க முடியாது. மாறாக, பாஸ் கட்சி, பெரிக்காத்தான் சின்னத்தில்தான் போட்டியிட்டது என்பதால் பெரிக்காத்தானின் வெற்றியாகத்தான் பார்க்க வேண்டும் என்ற கருத்தும் நிலவுகிறது. மேலும் வெற்றி பெற்ற பாஸ் வேட்பாளர் உள்ளூரில் பிரபலமானவர், பல அரசு சாரா இயக்கங்களுடன் இணைந்து பணியாற்றியவர் என்ற பார்வையையும் அரசியல் ஆய்வாளர்கள் முன்வைக்கின்றனர்.
பெரிக்காத்தான் கூட்டணி 42 தொகுதிகளில் போட்டியிட்டது. பெர்சாத்து 33 தொகுதிகளைக் குறிவைக்க, பாஸ் 6 தொகுதிகளில் களமிறங்க, கெராக்கான் 3 தொகுதிகளில் போட்டியிட்டது.
அனைத்திலும் தோல்வி – பாஸ் பெற்ற ஒரே ஒரு தொகுதியைத் தவிர!
இதுவும் மேற்கு மலேசியக் கட்சிகளைப் புறக்கணிக்கும் சபா வாக்காளர்களின் அணுகுமுறையாகப் பார்க்கப்படுகிறது.
5 தொகுதிகளைக் கைப்பற்றிய சுயேட்சைகள்
சபாவைப் பொறுத்தவரை சில உள்ளூர் தொகுதிகளில் பிரபலமான சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெறுவது வழக்கம். அதே போல இந்த முறை பல்முனைப் போட்டி நடந்த 5 தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி கண்டுள்ளனர்.
இந்த சுயேட்சைகளை நிறுத்தி, வாக்குகளைப் பிளவுபடுத்தியதே ஜிஆர்எஸ் கூட்டணிதான் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
அன்வார் அமைச்சரவையில் அமைச்சராக இருந்து, சபாவின் 40 விழுக்காடு வருமானப் பகிர்வு விவகாரத்தினால் பதவி விலகியதோடு, பக்காத்தான் கூட்டணியில் இருந்தும் விலகிய உப்கோ கட்சியின் தலைவர் எவோன் பெனடிக்ட் வெற்றி பெற்றவர்களில் ஒருவர். அவரின் கட்சி 3 தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கிறது. ஹாஜிஜி நூர் ஆட்சி அமைக்க அவர் ஆதரவு தந்திருக்கிறார்.
தொடர்ந்து சபா அரசியலில் தன் இருப்பைத் தக்க வைத்திருக்கும் இன்னொரு பிரபலம் கடாசான் மக்களின் தலைவராகக் கருதப்படும் ஜெப்ரி கித்திங்கான். அவர் தான் போட்டியிட்ட தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறார். அவரின் ஸ்டார் கட்சி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.
உள்ளூர் கட்சிகளுக்கே வாய்ப்பளித்த சபா வாக்காளர்கள்
சபா சட்டமன்றத் தேர்தலில் கட்சிகள் வெற்றி பெற்ற தொகுதிகளின் இறுதி நிலவரம் இதுதான்:
ஜிஆர்எஸ் – 29
வாரிசான் சபா – 25
தேசிய முன்னணி – 6
பெரிக்காத்தான் நேஷனல் (பாஸ்) – 1
பக்காத்தான் ஹாரப்பான் – 1
ஸ்டார் -2
உப்கோ – 3
கேடிஎம் -1
சுயேட்சை – 5
இந்த முடிவுகளைப் பார்த்தால், பெரும்பாலும் உள்ளூர் கட்சிகளுக்கே சபா மக்கள் வாக்களித்திருப்பது புலப்படும். 90 விழுக்காட்டுக்கும் மேலான வாக்குகளை உள்ளூர் கட்சிகள் பெற்றிருக்கின்றன. 10 விழுக்காட்டு வாக்குகள் மட்டுமே மேற்கு மலேசியக் கட்சிகள் வசம் சென்றிருக்கின்றன.
அம்னோ மூலம் வெற்றி பெற்றவர்கள் கூட – புங் மொக்தார் போல – தங்களின் சொந்தத் தொகுதியில் செல்வாக்கு வாய்ந்தவர்களாக- பணம் செலவழிக்கக்கூடிய வலிமை கொண்டவர்களாக – இருப்பதைக் காணமுடியும்.
ஹாஜிஜி நூர் அரசாங்கம் முழுத் தவணைக்குத் தாக்குப் பிடிக்குமா?
சபாவின் முதலமைச்சராக இரண்டாவது தவணைக்கு ஹாஜிஜி நூர் மீண்டும் பதவியேற்றுக் கொண்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 30) அதிகாலை 3.05 மணியளவில் சபா ஆளுநர் துன் மூசா அமான் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார். வேறு யாரும் உள்ளே நுழைந்து ஆட்டத்தைக் கலைத்து விடலாம் என அஞ்சி, விடியற்காலையாக இருந்தாலும் பதவி ஏற்பது சபா அரசியலின் வழக்கம்.
அவரின் தலைமையிலான ஜிஆர்எஸ் என்னும் காபுங்கான் ராயாட் சபா கூட்டணி 29 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 73 சட்டமன்றத் தொகுதிகளில் 55 தொகுதிகளில் இந்தக் கூட்டணி போட்டியிட்டது.
பெரும்பான்மையைப் பெற 37 தொகுதிகளில் வெற்றி வேண்டும் என்ற நிலையில், 3 தொகுதிகளில் வெற்றி பெற்ற உப்கோ கட்சியும் ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற பெற்ற பக்காத்தான் ஹாரப்பானும், 5 சுயேட்சை வேட்பாளர்களும் ஹாஜிஜி நூர் முதலமைச்சராக ஆதரவு தந்தனர். இதன் மூலம் 38 தொகுதிகளுடன் வெறும் இரண்டு தொகுதிகள் பெரும்பான்மையில் முதலமைச்சராகப் பதவியேற்றிருக்கிறார் ஹாஜிஜி நூர்.
குறுகியப் பெரும்பான்மையில் ஆட்சி அமைத்திருப்பதால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஹாஜிஜி நூர் அரசாங்கம் தாக்குப் பிடிக்குமா என்பது மிகப் பெரிய கேள்விக் குறி.
கற்பனைக்கு ஒரு சாத்தியத்தை ஆராய்வோம்! நாளையே 6 தொகுதிகளைக் கொண்ட தேசிய முன்னணி மனம் மாறி, ஷாபி அப்டாலை ஆதரிக்க முன்வந்தால், வாரிசான் சபாவின் தற்போதைய 25 தொகுதிகளுடன் சேர்ந்து அந்தக் கூட்டணியின் பலம் 31 ஆக உயரும். சுயேட்சை வேட்பாளர்கள் அணி மாறினால் – சில உள்ளூர் கட்சிகள் ஆதரிக்க முன்வந்தால் – ஷாபி அப்டால் பெரும்பான்மை பெற்றுவிடுவார்.
கற்பனைகளையும், நடக்க முடியாதவற்றையும், நிகழ்த்திக் காட்டுவதுதானே அரசியல்!





