
கோலாலம்பூர்: ஜனவரி 1-ஆம் தேதி முதல் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்திருப்பதைத் தொடர்ந்து அடுத்தடுத்து அவரின் நெருங்கிய சகாக்கள் தங்களின் பதவிகளில் இருந்து விலகத் தொடங்கியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி ஆட்டங்காணத் தொடங்கியுள்ளது. எனினும் பாஸ் தொடர்ந்து அந்தக் கூட்டணியின் தலைமையை ஏற்குமா அல்லது பெர்சாத்து கட்சியே மீண்டும் தலைமையேற்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
முஹிடின் இன்னும் பெர்சாத்து கட்சியின் தலைமையிலிருந்து விலகவில்லை. எனவே, பெர்சாத்து கட்சியின் தலைவராகவும் அவர் தொடர்வாரா அல்லது பெர்சாத்து துணைத் தலைவர் ஹாம்சா சைனுடின் பெர்சாத்து தலைவராகப் பொறுப்பேற்பாரா என்ற ஆரூடங்களும் தொடர்கின்றன.
பேராக் பெரிக்காத்தான் தலைவர் அசுமு, பெரிக்காத்தான் தலைமைச் செயலாளர் அஸ்மின் அலி உள்ளிட்ட பல தலைவர்கள் தங்களின் பெரிக்காத்தான் நேஷனல் பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளனர்.





