(கடந்த பல்லாண்டுகளாக மலேசிய பாரதி தமிழ் மன்றம் முத்தமிழ் சான்றோர்கள் என்ற நிகழ்ச்சி மூலம் வரிசையாக பல மலேசியத் தமிழ் சான்றோர்களை அழைத்து அவர்களுக்குச் சிறப்பு செய்து, அவர்கள் கடந்து வந்த வாழ்க்கைப் பயணம் குறித்த முக்கியத் தருணங்களையும், தகவல்களையும் பகிர்ந்து கொண்டு வந்துள்ளது. அந்த வரிசையில் 60-வது நிகழ்ச்சியாக 22 நவம்பர் 2025-ஆம் நாள் சனிக்கிழமை காலை, மலேசிய பாரதி தமிழ் மன்றம், தலைநகர் உமாராணி உணவகம், ஜாலான் ஈப்போ, கோலாலம்பூர் என்னும் இடத்தில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பிரபல மலேசியக் கணிஞர் முத்து நெடுமாறன் உரையாற்றினார். ‘முரசு அஞ்சல்’ தமிழ் மென்பொருளை 1985-இல் முதன் முதலாக உருவாக்கிய வரலாற்றையும், கணினி, கைப்பேசிகளில் எழுத்துருவியல் குறித்த விவரங்கள் குறித்தும், தன் வாழ்க்கைப் பயணம் பற்றியும் விரிவானதோர் உரையை முத்து நெடுமாறன் நிகழ்த்தினார். அந்த உரையின் சில முக்கியப் பகுதிகள்:)
இந்த நிகழ்ச்சிக்கு தம்பி இளவரசுதான் என்னை அழைத்து விவரங்கள் சொன்னார். நான் ஏற்றுக்கொண்டதற்கு முக்கியக் காரணம், இதுபோன்ற முயற்சிகளைப் பலர் மேற்கொண்டிருக்கிறார்கள். என்னுடைய அருமை நண்பர் அருண் மகிழ்னன் சிங்கப்பூரில் ‘சிங்கப்பூர் தமிழர் களஞ்சியம்’ என்ற தளத்தை உருவாக்குறதுக்கு எவ்வளவு சிரமப்படுறாங்கன்னு எனக்குத் தெரியும். அதனால இந்த மாதிரி கருத்து திரட்டல் – வரலாறு திரட்டல் – தனிநபர்களை அடையாளம் கண்டுபிடித்து, அவர்களுடைய பின்னணியை ஆராய்ந்து, அவர்களுடைய செயல்பாடுகளை ஆவணப்படுத்துவது மிகப்பெரிய ஒரு பணி. அவர்களே வந்து கேட்கும்போது அதற்கு உதவி செய்ய வேண்டும் நாமும் நமது பங்களிப்பை வழங்கவேண்டும். அந்த தரவுகளை வழங்க வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சிக்கு நான் ஒப்புக்கொண்டேன்.
என்னை அழைத்ததற்காக நன்றி. நான் சொல்ல வேண்டிய கதைகள் எல்லாம் ‘உரு’ என்ற என் நூலில் இருக்கிறது. சிலர் படிச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன். இந்த நூலை இன்றைக்கு அனைவருக்கும் இலவசமாகக் கொடுக்கப் போகிறோம்.
உரு நூல் உருவான விதம்
சென்னையில் இருந்து வெளிவரும் ‘மெட்ராஸ் பேப்பர்’ பத்திரிகையை நடத்துபவர் திரு.ராகவன். அவர் என்னை நெடுநாளாகப் பின்தொடர்பவர்.விசிறின்னு கூட சொல்லலாம். அவர் ஒரு 30, 40 ஆண்டுகளாக என்னைப் பார்க்கிறதுக்கு முயற்சி பண்ணி இருக்கிறார். கடந்த ஆண்டுதான் அவரைச் சந்திக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது.
அவர் வந்து சந்திப்பதற்கு முதல் நாளே அவர் பத்திரிகையில வேலை செய்ற எல்லாரையும் கூப்பிட்டு, “நான் முத்துவை நாளைக்குப் பார்க்கப் போறேன். முத்துவை நாளைக்குப் பார்க்கப் போறேன்”னு ஒரு பெரிய கொண்டாட்டமே நடந்திருக்கிறதா பிறகுதான் எனக்கு தெரிய வந்தது. அவரோடு வேலை செய்கின்ற கோகிலா என்ற எழுத்தாளர். அவங்களும் வந்து எனது கதையில் ஆர்வம் காட்டி ஒரு 12 வாரமா எழுதினாங்க. தொடர் கதையா எழுதினாங்க அந்த பத்திரிகையில. பின்னர் அதைத் தொகுத்து நூலாப் போட்டாங்க. காலச்சுவடு பப்ளிகேஷன்தான் அதைப் பதிப்பிச்சு இருக்காங்க. அதுல கூட கூடுமானவரை தனிப்பட்ட கருத்துக்களை, பர்சனல் இன்ஃபர்மேஷனைத் தவிர்த்துட்டு செயல்பாடுகளை மட்டும் அதிகமாக கவனம் செலுத்தும்படி சொல்லி இருக்கேன். அதனால பலர் படிச்சிட்டு இது பயனுள்ளதா இருக்கு. இவ்வளவு செய்திகள் இருக்கிறது எங்களுக்குத் தெரியாது. அதுவும் தொழில்நுட்பம் சார்ந்த ஒரு ஆவண நூலை வந்து இவ்வளவு எளிமையா எழுதி இருக்காங்க அப்படின்னு சொல்லி சொல்லி இருக்காங்க. நீங்க படிச்சிட்டு கருத்துக்களை சொல்லுங்க.
எனக்கும் சிறுவயதுக் இருக்கு. நான் சின்ன குழந்தையா இருக்கும்பொழுது எங்களுக்கு சாக்லேட்னா ரொம்ப பிடிக்கும். நான் அந்த சாக்லேட்டை பேக் பண்றவன் எவ்வளவு கொடுத்து வச்சவனா இருப்பான்னு நானு நினைச்சேன். அப்ப என்னோட ஒரு ஆம்பிஷன் வந்து சாக்லேட்டைய பேக் பண்றவனா இருக்கணும் அப்படின்னு இருந்தது. இதுல வந்து ஒரு இந்த கோ இன்சிடன்ஸ்ன்னு சொல்லுவாங்க ஆங்கிலத்துல. என் மனைவி அவங்களுக்கும் சாக்லேட் ரொம்ப பிடிக்கும். அவங்களும் சின்ன வயசுல இந்த சாக்லேட் பேக் பண்றவனைக் கல்யாணம் பண்ணா, ஒவ்வொரு நாளும் சாக்லேட் சாப்பிடலாமேன்னு அவங்களும் நினைச்சிட்டு இருந்தாங்க. இன்னும் கூட நான் ஒரு முழுமையா முழுமையான வெஜிடேரியனா மாறாததுக்கு காரணமும் சாக்லேட் தான்.
இந்த உரையை எங்க தொடங்கணும் அப்படின்றது ஒரு பெரிய கேள்வியா இருந்தது. நான் எப்பவுமே பேசும்போது உரை எழுத மாட்டேன். இந்த மாதிரி படம் வரைஞ்சுதான் பேசுவேன். இதுக்கு பேரு மைண்ட் மேப்பிங். எனக்கு ரொம்ப பிடிக்கும். அந்த மாதிரி ஒரு படம் போட்டுருக்கேன். எது எது வருதோ அந்த வரிசையில உங்களுக்கு பகிர்ந்து கொள்கிறேன். கேள்விகள் நிறைய வரும்ன்னு எதிர்பார்க்கிறேன். அப்ப உங்களுக்குத் தேவையான கருத்துக்களை நிறைய சொல்வதற்கு – நேரடியாக சொல்வதற்கான வாய்ப்பு இருக்கும்.
என்னோட வேலைகளை வந்து மூன்று முக்கியமான மைல்களாகப் பிரிக்கலாம். மூன்று ஃபேசஸ், மூன்று பாகங்களாகப் பிரிச்சோம்ன்னு சொன்னா, அதாவது வேலை செய்யத் தொடங்குறதுக்கு முன்ன நடந்த ஒரு காலம். அப்புறம் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் வேலை செய்த ஒரு காலம். அப்புறம் அதுக்குப் பிறகு இருக்கிறது. இப்ப நான் வேலை செய்யலன்னு இல்ல. இன்னொருத்தருக்கு வேலை செய்யல. அதனால மூன்றாவது காலம். இவ்வாறு என் வாழ்க்கையை மூன்று கட்டமாப் பிரிக்கலாம்.
முதல் கட்ட வாழ்க்கை – பிறப்பும் வளர்ப்பும் படிப்பும்
முதல் கட்டத்துல என்னப் பெற்றவங்க யாருன்னு உங்களுக்குத் தெரியும். முன்னுக்கு உட்கார்ந்திருக்காரு (முரசு நெடுமாறன்). கேரி தீவுல பிறந்து வளர்ந்ததெல்லாம் -அந்தக் கதையும் இருக்குது ‘உரு’ புத்தகத்துல. எப்படி எங்க குடும்பம் கேரி தீவுக்கு வந்தது அப்படின்ற கதைக்கூட முதல் பகுதியிலேயே இருக்குது. அங்க வந்து இந்த ஆயா கொட்டைகள்லாம் இருக்கும். உங்களுக்குத் தெரியும் இல்லையா? ஆயா கொட்டைகள். அங்கதான் நான் போனேன் முதன் முதல்ல. அதுக்குப் போறதுக்கு முன்னயே வீட்டிலேயே தமிழ் படிச்சேன்.
எல்லாரும் என்னைக் கேட்பாங்க. “நீங்க தமிழ்ப் பள்ளிக்குப் போனீங்களான்னு?” நான் தமிழ்ப் பள்ளிக்குப் போகல. தமிழ்ப் பள்ளியில் பிறந்தேன் அப்படின்னு சொல்வேன். ஆனா ஆறாவது வயதிலேயே நற்றமிழ் துணைவன் ஆறாம் ஆண்டு நூலைக் கொண்டு வந்து அதுக்கான எக்சர்சைஸா, பாடங்கள் எல்லாத்தையும் முடிச்சிருவேன். தமிழ்நேசன் படிப்பேன். திருக்குறள் தெரியும். கொன்றைவேந்தன் ஆத்திச்சூடி எல்லாமே மனப்பாடம். அதுவும் ஆறு வயசுக்குள்ளாரயே. அதனால முதன் முதல்ல என்னை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பும்போது அந்த ஆயா கொட்டையில ஒரு ஆசிரியர் வந்து சொல்லிக் கொடுத்துட்டு இருந்தார். தமிழ் சொல்லிக் கொடுத்துட்டு இருந்தார். அப்ப அவர் ஒரு திருக்குறள் எழுதிப் போட்டாரு போர்டுல. அங்க ஒரு பிழை எழுத்துப் பிழை ஒண்ணு கண்டுபிடிச்சு அவர்கிட்ட கைதூக்கி சொல்லிட்டேன். அஞ்சு, ஆறு வயசுதானே. அப்ப பயமெல்லாம் எங்க இருக்கும்? சொன்ன உடனே அவர் திருத்திட்டு மறு நாள் மாலையிலேயே வீட்டுக்கு வந்துட்டாரு. வீட்டுக்கு வந்து அப்பாகிட்ட சொன்னார், “உம் பையனை வீட்டிலேயே வச்சுக்கோ. இங்க வந்தா எங்க மானத்தை வாங்குறான்.
எங்கப்பா நினைச்சிட்டாரு, இவனைத் தமிழ்ப் பள்ளிக்கு அனுப்புனா எல்லா டீச்சரும் வீட்டுக்கு வர ஆரம்பிச்சிருவாங்க அப்படின்னு சொல்லிட்டு அதனாலதான் முதன்முதல்ல நான் வந்து ஆங்கிலப் பள்ளிக்குதான் போகணும்னு முடிவு செய்தார்.
நாங்க பிறந்து வளர்ந்ததெல்லாம் கேரி தீவுல. கேரி தீவுல அந்த காலத்துல தமிழர்களை மட்டும்தான் பார்த்தோம். வெள்ளைக்காரங்களை ஆண்டுக்கு ஒரு தடவை திருவிழா நடக்குற சமயத்துல பார்ப்போமே தவிர, தமிழர்களை மட்டும்தான் பார்த்தோம். தமிழ் மட்டும்தான் பேசினோம். தமிழ் தான் தெரியும். தமிழ் என்பது ஒரு மொழின்றது எங்களுக்குத் தெரியாது.
நீங்க வந்து பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்ன்னு பார்த்திருப்பீங்க ஆங்கிலப் படம். முதலாம் இரண்டாம் வகுப்பு படிக்கும்போது பள்ளிக்கூடம் முடிஞ்சவுடனே வீட்டுக்கு ஓடுவோம், பிளானட் ஆஃப் தி ஏப்ஸ் பாக்குறதுக்கு. அந்தக் கதை சுருக்கம் என்னன்னா இந்த அஸ்ட்ரோனாட் (விண்வெளி வீரர்கள்) மேல போவாங்க. அவங்க ஒரு பிளாக் ஹோலுக்கு போயிட்டு, திருப்பி வரும்பொழுது மறுபடியும் பூமிக்குத்தான் வராங்க. ஆனா ஒரு பிளாக் ஹோலுக்கு போயிட்டு வர்றதுனால பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வந்து சேர்றாங்க. அப்ப பூமியினுடைய நிலை மாறிப் போயிருது. குரங்குகள் வந்து ஆட்சி புரியுது. மனிதர்களை வந்து கூண்டில அடைச்சு வச்சிருக்கு. அதுதான் கதை. அவங்க வந்து பேசுறதைப் பார்த்த உடனே குரங்குகளுக்கு ஆச்சரியமா போச்சு. எப்படி மனுஷன் பேசுறானேன்னு. புரியுதுங்களா கதை?
அப்ப அந்த மனுஷன் வந்து குரங்கைக் கேட்கிறான், “Where did you learn to speak English?” அப்படின்னு. அப்ப அந்த குரங்கு கேட்குது, “What is English?” அது பேசுறது இங்கிலீஷ்தான். ஆனா, “What is English?”னு கேட்குது. அப்படின்னா மற்ற மொழிகள் இருக்கிறதே தெரியல. ஏன்னா பேசுறதே இங்கிலீஷ்தான்.
அதுபோல நாங்க கேரி தீவுல பேசினதே தமிழ்தான். மற்ற மொழிகள் இருப்பது கூட எங்களுக்குத் தெரியாது. இப்ப முதன்முதல்ல ஆங்கிலப் பள்ளிக்கு அனுப்பும் பொழுது அவங்க என்ன பேசுறாங்கன்னே புரியல. ஏன் அவர்களுடைய தோல் வேறு நிறத்தில் இருக்குன்றது கூட ஒரு குழப்பமா இருந்தது. முதலாம் வகுப்பு படிக்கும் பொழுது. அப்ப எங்க ஆசிரியர் பேரும் கூட எனக்கு இன்னும் நினைவு இருக்கு. 1968 முதலாம் வகுப்பு மிஸ் மேரி அன் லியூ. அவங்கதான் எங்களுடைய முதல் ஆசிரியை. அவங்க வந்து கேட்கிறாங்க. புரியல. அவங்க என்னென்னமோ உளறுறாங்க, புரியல. பக்கத்துல இருக்கிற ஒரு பொண்ணு இருந்துச்சு. அதுக்கு தமிழ் தெரியும், ஆங்கிலம் தெரியும். அது கேட்டு எனக்கு மொழிபெயர்த்து சில சமயங்களில் விளையாட்டுத்தனமா பண்ணிருச்சு. அதுக்கான சஸ்பென்ஸ் எல்லாம் புத்தகத்துல இருக்கு. நீங்க படிச்சு புரிஞ்சு கொள்ளுங்கள். அந்த மாதிரியான சூழல்ல வந்தவன்.
ஆனா அந்த தமிழினுடைய அடிப்படை அப்பவே ஆழமாப் பதிஞ்சிருச்சு. இதை ஏன் நான் சொல்ல வரேன்னு சொன்னா இதனுடைய முக்கியத்துவம் நம்ம ரொம்ப பேருக்குத் தெரியாமல் இருக்கு. எந்த ஒரு மொழியை வந்து ஆழமாப் படிச்சாலும், இன்னொரு மொழியைப் படிக்கிறது ரொம்பச் சுலபம் என ஆய்வுகள் நிறைய காட்டுது. அது ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளைப் படிச்சவங்களுடைய சிந்தனைத் திறன், ஆற்றல், அவங்களுடைய உருவாக்கும் கிரியேட்டிவ் எபிலிட்டி, உருவாக்கும் சக்தி வந்து ரொம்ப அதிகமா இருக்குன்றது கூட நல்லா தெரிஞ்சிருச்சு. அதனால மொழியினுடைய ஆழத்தைக் கண்டவர்களுக்கு அவர்கள் சொல்ல விரும்புவதை தெளிவாகச் சொல்வதற்கும் அவங்க இலக்கைத் தேடி அடைவதற்கும் ரொம்ப உதவியா இருக்கும் அப்படின்றது ஆய்வுகள் காட்டுவது மட்டும் அல்ல என்னோட அனுபவமும் கூட.
இடைநிலைப் பள்ளியில படிக்கும் பொழுதெல்லாம் ஆங்கிலப் பள்ளியாக இருந்தாலும் தமிழ் மொழிக் கழகத்தினுடைய தலைவரா இருந்தேன். தமிழ் வகுப்புகள் தமிழ்ப் பள்ளிகள் பெரும்பாலும் போறதுக்கான வாய்ப்பு இல்லாமப் போகும். ஏன்னா நான் அறிவியல் துறையில் இருந்தேன். சயின்ஸ் மீடியம்ல இருக்கும்போது தமிழுக்கான பாடம் வந்து வகுப்பு நேரத்தில் நடக்காது. தனியாதான் பிஓஎல் நேரத்தில் நடக்கும். அந்த நேரத்துல வேற ஏதாவது ஆக்டிவிட்டி வரும். அதனால எனக்கு அது ஒரு இழப்பும் இல்லை. வீட்டிலேயே தமிழ் படிச்சுக்கிட்டேன். நாங்க வந்து எம்சிஇ. எம்சிஇ காலத்துல தமிழ்த் தேர்வுக்கு முதல் நாள்தான் அப்பாகிட்ட உட்கார்ந்து இந்தத் தேர்வுத்தாள் எப்படி இருக்கும்ன்னு பார்த்தேன். எம்சிஇ தமிழ்ப் பேப்பர் அதுதான் கடைசியில் வரும்.
எல்லா பேப்பரையும் முடிச்சிட்டு கடைசியில் வரும் தமிழ்ப் பேப்பர். எல்லா பேப்பரையும் முடிச்சிட்டு கடைசி நாளில முதல் நாள், ரெண்டு நாள் முன்னுக்கு உட்கார்ந்து அப்பாகிட்ட கேட்கிறேன். இந்த எம்சிஇ தமிழ்ப் பேப்பர் எப்படி வரும்? அப்பதான் உட்கார்ந்து பழைய பேப்பர் எல்லாம் எடுத்துப் பார்த்து, எழுதி முடிச்சிட்டு பாஸ் பண்ணி கிரெடிட் வாங்கிட்டு வந்துட்டேன் தமிழ்லயும். தமிழ் எழுதுனதுனால நான் விரும்பின ஒரு துறைக்குப் போக முடியாமல் போச்சு. நான் விரும்பினது ஆர்க்கிடெக்சர் கட்டிடக்கலை. அதை வந்து ரொம்ப விரும்பிப் பண்ணிட்டு இருந்தேன். ஆனா அந்தக் கட்டிடக்கலை எனக்கு படிப்பதற்கு வாய்ப்பு இல்லை. ஏன்னா நான் ஆர்ட் எடுக்கல. கலை, ஓவியக்கலை எடுக்கல. கட்டடக்கலைக்கு அப்ளிகேஷன்லயே நீங்க வரைஞ்ச சில ஆர்ட் அனுப்பணும். உங்களோட ஆர்ட் ரிசல்ட்ஸை காண்பிக்கணும். எதுவுமே என்கிட்ட இல்லாமப் போச்சு.
சிவில் இன்ஜினியரிங் முதல் சாய்ஸையும் அது கிடைக்கலைன்னா எதுவும் வேணாம்ன்னு சொல்லி எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் இரண்டாவது சாய்ஸ் போட்டேன். இரண்டாவது சாய்ஸ் தான் கிடைச்சது. இப்ப இங்க இருந்து பேசிட்டு இருக்கிறதெல்லாம் இந்த இரண்டாவது சாய்ஸ் பண்ண வேலைதான். ஆனா இரண்டாவது சாய்ஸா இருந்தாலும் அதை வந்து முதல் நிலையில வந்து கொண்டு வந்து நிறுத்தி இருக்கேன். இதுதான் முன்னுக்குள்ள பேக்ரவுண்ட்.
வேலைக்குச் சேர்ந்த அனுபவம்
நான் முதன் முதல்ல வேலைக்கு சேர்ந்தது பெட்டாலிங் ஜெயாவிலதான். அங்க வந்து கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ் அட்வைசர்ஸ் அப்படின்னு சொல்லிட்டு குப்பு என்பவர் வந்தார். அவர்தான் என் முதல் பாஸ்ன்னு கூட சொல்லலாம். 1985-இல் ரிசஷன் என்னும் பொருளாதார வீக்கம். யாருக்குமே வேலை இல்லாத சூழல்தான் எல்லாருக்குமே. அப்ப சிலாங்கூர் மாநிலத்தின் உபகாரச்சம்பளம் (ஸ்காலர்ஷிப்) கிடைத்துப் படிச்சேன். அப்ப டத்தோ வி.எல்.காந்தன் இருந்தாரு. அவருடைய தயவுனால எனக்கு சிலாங்கூர் மாநில ஸ்காலர்ஷிப் கிடைச்சது.
படித்து முடித்ததும் சிலாங்கூர் மாநில அரசாங்கம் எனக்கு கடிதம் எழுதி கொடுத்துட்டாங்க. “உனக்கு எங்களால் வேலை கொடுக்க முடியாது. நீயே பார்த்துக்கோ” என்று.
இல்லையென்றால் 10 வருடம் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தில் வேலை செஞ்சிருக்கணும். அப்ப இந்த கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ் நிறுவனத்தில் ஒரு ட்ரெய்னி இன்ஜினியராப் போய் சேர்ந்தேன். 300 ரிங்கிட்தான் சம்பளம் 1985-ல. சம்பளம்ன்னு கூட சொல்லல. அது அலவன்ஸ். அப்பாயின்மென்ட் ஆர்டர் கூட கிடையாது. இபிஎஃப் எதுவுமே கிடையாது. யூ ஆர் அ ட்ரெய்னி. திஸ் இஸ் யுவர் அலவன்ஸ்ன்னு 300 வெள்ளி கொடுத்தாங்க.
ஸ்டீவ் ஜாப்ஸ் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். ஆப்பிள் நிறுவனர். அவர்தான் எனக்கு மெண்டோர்-வழிகாட்டி. அவர் பேச்சை அமெரிக்காவுக்கு நேரடியாகப் போய் கேட்பேன். ஒவ்வொரு ஆண்டும் யுஎஸ்ல போய் ஆப்பிளுடைய வேர்ல்டுவைட் டெவலப்பர் கான்பரன்ஸ்ல அவர் பேச்சைக் கேட்பேன். அவர் உரை ஒன்னு ஸ்டான்போர்ட் யுனிவர்சிட்டியுடைய கமெம்மரேட்டிவ் ஸ்பீச் அப்படின்னு சொல்லிட்டு யூடியூப்ல இருக்கு. நீங்க தாராளமாக தயவு செய்து கேளுங்கள். அது ரொம்ப ரொம்ப உருக்கமான ஒரு பேச்சு. அதுல அவர் தனது கதையைச் சொல்லி முடிச்சிட்டு கடைசியில சொல்லுவாரு, “You can only connect the dots backwards.”
ஒவ்வொரு வாழ்க்கையில அந்த புள்ளிகளை வந்து ஒரு காலகட்டத்திலிருந்து பின்னாடிதான் நம்ம இணைக்க முடியும். இது நடந்ததுனாலதான் இது நடந்தது. இது நடந்ததுனாலதான் இது நடந்தது. இதுக்காகத்தான் இப்படி நடந்திருக்கு. பின்னால் நம்ம கனெக்ட் பண்ணும்போது, இணைக்கும்போது அதுல ஒரு கதை தெரியும் நமக்கு. ரொம்ப அழகான ஒரு கதை தெரியும். ஆனா முன்னுக்கு நம்மளால இணைக்க முடியாதுன்னு சொல்லுவாரு. அந்த மாதிரி இந்த கதைகள் எல்லாம் நான் சொல்றதெல்லாம் ஒண்ணுக்கு ஒண்ணு தொடர்பு இருக்கு. இப்போ இருக்கிற நிலைக்கு வந்தடைந்ததற்கு இதற்கெல்லாம் இதெல்லாம் வந்து பின்னணியா இருந்திருக்கு.
அப்போ ரீசர்ச் அண்ட் டெவலப்மென்ட் இன்ஜினியரா இருக்கும்போது அது முழுமையான முறையான வேலை கிடையாது. ஒரு மாணவன் செய்கின்ற வேலைதான். ஒரு படித்துக் கொண்டிருக்கும்போது பகுதி நேரமாப் போய் வேலை செய்றாங்க இல்லையா அந்த மாதிரியான ஒரு வேலைதான். ஒரு ஆய்வுக் கூடத்துல உட்கார்ந்து சில்லுகள் எல்லாம் உட்கார்ந்து சோல்டர் பண்ணனும். ரொம்ப நுணுக்கமான வேலைகள் அதெல்லாம்.
அப்போ ரிங்கோ லோ என்ற பெயர் கொண்ட என்னோட முதல் பாஸ். அவருக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கேன். இப்போ வந்து நான் இவ்வளவு தூரம் தமிழுக்கு இந்த எழுத்துரு அதெல்லாம் பண்றேன்னு சொன்னா அதுக்கு அடிப்படை அவர்தான். எனக்கு பெரும்பாலும் என்னோட வாழ்க்கையில எனக்கு உதவி செய்தவர்கள் தமிழர் அல்லாத நண்பர்கள்தான் நிறைய.
நேற்றுக் கூட ஒருத்தர்கிட்ட பேசிட்டு இருந்தேன். அவர் நியூ டெல்லியில இருக்காரு. அவர் எனக்கு ஒரு ப்ராஜெக்ட்டுக்கு உதவி செய்துட்டு இருக்காரு. அவர் ஒரு தமிழர் அல்லாதவர்தான். அதுக்கு ஏன் காரணம்ன்னு தெரியல.
அப்போ அங்க உட்கார்ந்து பல நுணுக்கமான வேலைகளை செய்துட்டு இருந்தோம். அங்கதான் உட்கார்ந்து எங்க பார்த்தாலும் இங்க எந்த துறையா இருந்தாலும் சரி, எந்த ஒரு ஒரு சைன்போர்ட்ல ஒரு டிஸ்ப்ளே எங்க பார்த்தாலும் சரி, இங்க ஏன் தமிழ் இல்லை? இப்படித்தான் ஓடும் என்னோட மைண்ட்ல. என்னோட எண்ணத்துல ஏன் இங்க வந்து தமிழ் இல்லை? நான் பேசுறது 1985. இப்ப இருக்கிற காலம் இல்லை. இப்ப வந்து நமக்கு கம்ப்யூட்டர் எல்லாம் மேசையில வந்திருச்சு. அப்ப எல்லாம் இன்னும் வரல.
அப்பவே எந்தத் திரையில எங்க மினுக்குற லைட் போட்ட திரையா இருந்தாலும் இந்த ரன்னிங் லைட்ஸ் இருக்கும். தெரியுங்களா? வெல்கம். அங்க கூட பார்ப்பேன். இங்க ஏன் தமிழ்ல போட முடியல? ஏன் இங்கிலீஷ் எழுத்துக்கள்தான் இருக்கு? சீனத்துல வரும். தாய்லாந்துக்குப் போனா தாய் மொழியில வரும். தாய் மொழின்னா தாய்லாந்துகாரங்களுடைய மொழி. நம்ம தாய் மொழி இல்ல. தாய் மொழியில வரும். ஆனா தமிழ்ல வராது. ஏன் வராது அப்படின்ற மாதிரி சிந்தனை ஓடிட்டே இருந்தது. இதுதான் என்னுடைய முதல் வேலைக்கு வித்திட்டது. இந்த கம்ப்யூட்டர்ல இங்கிலீஷ் ஆங்கில எழுத்துக்கள் எப்படி வருதோ, அது எப்படி வருதுன்னு கண்டுபிடிச்சு, அந்த மாதிரி தமிழ் எழுத்துக்களைக் கொண்டு வரணும் அப்படின்றதுதான் முதல் இலக்கு.
1985-ல அப்போ வந்து இணையம் கிடையாது. கூகுள் கிடையாது. செல்ஃபோன் கிடையாது. ஃபேக்ஸ் மெஷின் தான் இருக்கும். ஒன்னைக் கண்டுபிடிச்சீங்கன்னா இன்னொருகிட்ட அனுப்புறதுக்கு ஃபேக்ஸ். ஃபேக்ஸ்ன்றதே ஒரு மிகப்பெரிய ஒரு லக்ஸுரி ஐட்டம் அப்போ. ஓ உங்களுக்கு ஃபேக்ஸ் இருக்கா? அப்படின்னு சொல்லுவாங்க. நானும் அவங்ககிட்டதான் போய் அலைவேன் கட கடையா. என்னன்னா புத்தகக் கடைகளுக்குப் போவோம். எங்க அசெம்பிளி லாங்குவேஜ் ப்ரோக்ராமிங் புக்ஸ் இருக்கு. அந்த மேகசின் இருக்கு. பைட்ன்னு சொல்லிட்டு மாதத்துக்கு ஒரு தடவை இவ்வளவு மொத்தமான ஒரு மேகசின் வரும். அதுல பார்த்தீங்கன்னா அதுல ரெண்டு பக்கம் தான் வந்து எனக்குத் தேவையான பக்கமா இருக்கும். அதுக்காக அந்த மேகசீனையே வாங்கி ஆகணும். சோ, இதுதான் வந்து எங்களுக்குக் கிடைத்த தரவுகள். அதுல வச்சு நான் வேற எந்த ஆய்வும் பண்ணல. வேலையை வந்து செய்வேன். ஒழுங்காகச் செய்து முடிச்சிடுவேன்.
நான் உட்கார்ந்து வரைஞ்சு கொடுத்து கொடுத்து எல்லாம் முடிச்சிட்டு 5 மணி ஆன பிறகு நம்மளோட ரீசர்ச் வேலை. அதுக்கப்புறம் க்ளோஸ் ஷாப். வேற எது வந்தாலும் எடுத்துக் கொள்வது இல்லை. நம்மளோட ரீசர்ச் வேலை. உட்கார்ந்து நோண்டி, நோண்டி, நோண்டி ஒண்ணு ஒண்ணா ஒவ்வொரு சிப்பா. அது ஒரு பெரிய கதை. அதுவும் நீங்க அந்த உரு நூலில் படிச்சுப் பார்க்கலாம். படிச்சுப் போட்டுப் பார்த்து ஆங்கில எழுத்துக்கள் வர அந்தத் திரையில அப்ப விண்டோஸ் எல்லாம் கிடையாது. ஒரு திரைக்குள்ளார 80 எழுத்துக்கள்தான் இருக்கும் ஒரு ஒரு வரியில. ஏ பி சி டி-ன்னு போடுறீங்க இல்லையா? அது மாதிரி 80 எழுத்துக்கள்தான் இருக்கும் ஒரு வரியில. 25 வரிகள்தான் இருக்கும் ஒரு திரையில. அவ்வளவுதான். மௌஸ் எல்லாம் எதுவுமே கிடையாது.
கணினியில் தமிழைக் கொண்டு வந்த கதை
அந்தக் கட்டத்துக்குள்ளார தமிழைப் போய் அடக்கணும். அதுதான் நான் செய்த முதல் வேலை. முதன்முதல்ல அந்த ‘அ’ என்ற சொல்லை தமிழ்ல திரையில பார்க்கும்போது கிடைத்த ஒரு மகிழ்ச்சி, அளவிட முடியாது. அவ்வளவு மகிழ்ச்சி. அந்த ‘அ’ என்ற எழுத்தைப் பார்க்கிறதுக்காக செய்த முயற்சி ஏறக்குறைய ஒரு ஆண்டு பிடித்திருக்கும். ஏன்னா ஒவ்வொரு சிப் இருக்கு இல்லையா, அதை வாங்கி அந்த சிப்லதான் இந்த எழுத்து இப்படி வரணும்னு சொல்லி அந்தக் கட்டளைகளை அந்த சிப்புக்குள்ளதான் போடணும்.
அதெல்லாம் போட்டு முடிச்சிட்டு, சில சமயம் கை வந்து லேசா அந்த சிப் மேல பட்டுச்சுன்னு சொன்னா, எரிஞ்சு போயிரும். அதனால முதல்ல நமக்கு இந்த ரிஸ்ட்ல ஒரு ராப் போட்டு, நம்ம உடம்புல இருக்கிற மின்சாரத்தை மண்ணுக்கு அனுப்பி, அப்புறம்தான் அந்த சிப்பத் தொட முடியும். மறந்துட்டோம்ன்னு சொன்னா, எரிஞ்சு போயிரும். எரிஞ்சு போச்சுன்னு சொன்னா, இன்னொரு சிப்ப வாங்குறதுக்கு 35 வெள்ளி. அம்மா எனக்கு ஒரு நாளைக்கு ஒரு வெள்ளிதான் கொடுப்பாங்க. அப்ப 35 நாள் ரொட்டி சானாவை சேக்ரிஃபைஸ் பண்ணிட்டு, அந்தக் கதையெல்லாம் இருக்கு உரு நூலில். ஒரு நாளைக்கு ஒரு ரொட்டி சானாவை சேக்ரிஃபைஸ் பண்ணனும்ன்னா 35 நாள்ல ஒரு சிப் வாங்கலாம். அடுத்த சிப் வாங்குற வரைக்கும் காத்திட்டு இருக்கணும். அதனால ஒரு ஆண்டுக்கு மேல பிடிச்சது அந்த முதல் ‘அ’ பார்க்கிறதுக்கு. அதுதான் தொடக்கம்.
இந்த ருசி கண்ட பூனை மாதிரி அவ்வளவு முயற்சி செய்து அந்த வெற்றி கிடைச்சது தெரியுங்களா? அந்த முதல் வெற்றி, அதுதான் என்னுடைய உந்துதல். எதையுமே செய்துடலாம். There is nothing that you cannot do. யாரும் வந்து எங்ககிட்ட, “No, we don’t support it. We can’t do this”ன்னு சொன்னா, எனக்குக் கொஞ்சம் கூட பிடிக்காது. “No, we can’t solve this. இதை ஃபிக்ஸ் பண்ண முடியாது”ன்னு யார் சொன்னாலும், அப்ப ஏறுன வீரியம் இதுதான் வந்து இன்னும் என்னை இயக்கிக்கிட்டு இருக்கிறது. எதையுமே வந்து முடியாது, செய்யலாம். நாள் ஆகும் பரவாயில்லை. It may take time. That’s okay. Don’t say cannot. Don’t say impossibleன்னு சொல்லி. இந்த மாதிரி நிறைய நிறுவனங்கள் கூட சண்டை போட்டுருக்கேன்.
ஆதரவு தந்த மயில் பத்திரிக்கையின் டத்தோ ஆ.சோதிநாதன்
அப்போ அதே காலகட்டத்துல முதன்முதல்ல இது வந்து முழுமையா கொண்டுவந்து செய்யணும் அப்படின்ற ஒரு எண்ணத்தோட திரு. சோதி ஐயாவை (உமா பதிப்பகம், டத்தோ ஆ.சோதிநாதன்) நான் சந்தித்தேன். அவருக்கு நான் ரொம்ப கடமைப்பட்டிருக்கேன். அவர் மயில் பத்திரிகை நடத்திக் கொண்டிருந்தார்.
‘நீங்க பண்ண கணினியிலதான் நான் மயில் பத்திரிக்கை வெளியிடணும். முதன்முதல்ல இந்தப் பத்திரிகையிலதான் உங்க கணினியோட வேலை வரணும்” அப்படின்றதுக்காக கணினி எல்லாம் வாங்கிப் போட்டுட்டு உட்கார்ந்து இருப்பார். ஒவ்வொரு நாளும் வேலை முடிஞ்சு அவரோட ஆபீசுக்கு போவோம். அவர் உட்கார்ந்து காத்திட்டு இருப்பார். “வாங்க, வாங்க, வாங்க. எழில்”னுதான் கூப்பிடுவாரு. அதுதான் என்னோட வீட்டுப் பேரு. “வாங்க எழில், வாங்க, வாங்க, வாங்க”ன்னு காத்திட்டு இருப்பார்.
செய்து முடிச்சிட்டு, பேஜ்மேக்கர்ல போட்டோம் நாங்க. இப்ப கூட சில பேர் பேஜ்மேக்கர் பயன்படுத்துறாங்கன்னு நினைக்கிறேன். பேஜ்மேக்கர்ல வந்து தமிழ் வராது. இந்த பேஜ்மேக்கருடைய நிறுவனத்தினுடைய பெயர் இப்ப வந்து அடோபி. அப்போ அந்த நிறுவனத்தினுடைய பெயர் வந்து ஆல்சிஸ். அதுதான் அந்த நிறுவனம். இந்த பேஜ்மேக்கர் என்ற அந்த செயலி, அந்த சாஃப்ட்வேர் தயாரிச்ச நிறுவனத்தினுடைய பெயர் ஆல்சிஸ். அவங்க வந்து ஒரு பெரிய கருத்தரங்கம் ஒண்ணு ஏற்பாடு பண்ணி இருந்தாங்க இங்க கோலாலம்பூர்ல.
அப்ப அங்க நான் போயிருந்தேன். எங்க நேரத்தை எடுத்து ஆபீஸ்ல இருந்து நேரத்தை விடுப்பு வாங்கிப் போய் அந்த கருத்தரங்கத்துக்குப் போய் பேசி எல்லாம் முடிச்சிட்ட பிறகு எனக்கு அவங்க பேசுறதெல்லாம் எதுவுமே காதுல. அவங்ககிட்டப் பார்த்து ஒரு கேள்வி கேட்கணும். அது மட்டும்தான் என்னோட நோக்கம். கடைசி நிகழ்ச்சி முடிஞ்ச உடனே அந்தப் பேச்சாளர்ட்ட போய் நான் கேட்டேன், “See, look I’m trying to do this. இது வந்து தமிழ்ல போட முடியல”ன்னு. “Oh, no, no, we don’t support தமிழ்” அப்படின்னு சொன்னாங்க. எவ்வளவு கடுப்பு வந்திருக்கும்.
“We don’t know, let me find out” என்று அவர்கள் ஏதாவது சொல்லி சமாளிச்சிருக்கலாம். “We don’t support தமிழ்”ன்னு சொல்லும்போது என்னால் ஏற்றுக் கொள்ள முடியல. இன்னைக்கு அப்படி யாரும் சொல்லவும் முடியாது. அதுக்கான வழியை நாங்க கொடுக்கிறது இல்லை இப்போ. ஆனா அப்போ சொன்ன அந்த வலி இன்னுமும் இருக்கு.
“No, you don’t say that”ன்னு சொன்னேன். “You don’t say that. Then you don’t come and talk here”. அந்த மாதிரி நேரா சொல்லிட்டேன் அவங்ககிட்ட. “You don’t come and talk. You don’t come and tell me you don’t support my language. You say your software is faulty”. அப்படின்னு.
தமிழால் வோல்வோ காரை வாங்க மறுத்த கதை
இதே மாதிரி ஒரு 15, 20 ஆண்டுகளுக்கு முன்பு கார் வண்டி வாங்கப் போனேன். வால்வோ. இந்தக் கதையும் இருக்கு இந்த நூல்ல.
வால்வோ வண்டி வாங்கப் போனேன். என்னோட பையனுக்கு அருள்மொழி என்று பெயர். அவனுக்கு கார்னா அந்த சேல்ஸ்காரனை விட இவனுக்கு எல்லாம் தெரியும். அந்த வண்டியைப் பத்திய நுணுக்கங்கள்லாம். எல்லாம் கண்டுபிடிச்சிட்டு, “அப்பா இந்தக் கார்தான் நல்லா இருக்கு. இது போய் பார்க்கலாம். நம்ம போய் ஒரு டெஸ்ட் டிரைவ் போகலாம்”ன்னு. சரி போனோம். டெஸ்ட் டிரைவ் எல்லாம் சரியா வந்துருச்சு. உடனே என்னோட ஃபோன் எடுத்து மனைவியோட திரைக்கு வந்து இணைப்பு கொடுத்து – என் குடும்பத்தினுடைய பெயர் எல்லாம் தமிழ்லதான் இருக்கும் – அப்ப அவங்க எனக்கு ஃபோன் பண்ணாலும் தமிழ்லதான் அவங்க பேர் தோணும். அதே மாதிரி அருள்மொழி, அருள்மதி இதெல்லாம் இவங்க பேர் எல்லாம் தமிழ்லதான் இருக்கும்.
அப்ப மனைவியை ஃபோன் பண்ணச் சொன்னேன். ஃபோன் பண்ணும்போது அந்த வண்டியில உள்ள திரையில கட்டம் கட்டமா வந்துச்சு. தமிழ் பேர் அந்த திரை வண்டியில இருக்கிற திரையில வந்து கட்டம் கட்டமா வந்துச்சு. அப்ப அவங்ககிட்ட கேட்டேன், “Why is this?”ன்னு. “Oh, show me your phone?” என்றார் விற்பனையாளர்.
“I’m sorry sir, we don’t support தமிழ்” என பதிலளித்தார் விற்பனையாளர்.
“Then I don’t need your car” என்று கூறிவிட்டேன். செக் புக் எல்லாம் ரெடியா இருக்கு சைன் பண்றதுக்கு. டெபாசிட் கொடுக்கிறதுக்கு எல்லாம் பேசியாச்சு. நான் சொன்னேன், “I’m sorry sir, we don’t support தமிழ்” என்று கூறினீர்கள். “Okay, that’s the case I don’t need your car. I’m putting this checkbook back” என்று கூறிவிட்டேன்.
ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கையர் அல்லா தவர்க்கு.
அந்த குறள் மாதிரி அவன் கண்ணை உடையிற மாதிரி குத்தினால்தான் அவங்க வந்து கேட்பாங்க. அது புரிய மாட்டது அவங்களுக்கு. மொழி வந்து நமக்கு எவ்வளவு முக்கியம். அதை எப்படி நம்ம உயிரா மதிக்கணும். தமிழ்ன்றது நம்ம மொழி மட்டும் இல்ல, நம்ம வாழ்க்கை. அது பண்பாடு, நம்முடைய பாரம்பரியம், நம்முடைய எவ்வளவு பெரிய வரலாறு. அது அவங்களுக்குப் புரியாது.
“It could be life threatening. So, your car can be a life threat. Something is wrong with it, you fix your car’s problem, then you come and talk to me”ன்னு சொன்னேன். அப்புறம் போய் அவங்க கேட்டு, ஒரு ரோட் மேப் பார்த்துட்டு, “Oh yes sir, we have plans. We will expedite this” அப்படின்னு சொன்ன பிறகுதான் அதை வாங்கினேன். இப்போ அந்த வண்டியில எல்லாத்துலயுமே தமிழ் இருக்கு. அது நான் பண்ண எழுத்துருவுல இருக்கு. அது இன்னும் பெரிய மகிழ்ச்சி.
தமிழ் தட்டச்சு முதல் கணினித் தமிழ் வரை…
மீண்டும் 1985 கணினித் தமிழுக்கு வருவோம். கணினியில தமிழ் வரணும் அப்படின்னு போட்ட அந்த முதல் முயற்சி அந்தக் காலகட்டத்துக்குத் தேவையான ஒரு தேவையைத்தான் நிறைவேற்றியது. எத்தனை பேர் தமிழ் டைப் ரைட்டர் பயன்படுத்தி இருக்கீங்க? நானும் பயன்படுத்தி இருக்கேன். நானும் நிறைய தமிழ்ல டைப் பண்ணி இருக்கேன். நான் தமிழ் டைப் பண்ணுவேன்னு தெரிஞ்ச பிறகு அப்பா இன்னும் கூட வந்து கொடுப்பார். நம்ம வேலை மட்டும் இல்லாம மற்ற இயக்கங்க வேலை எல்லாம் நான்தான் உட்கார்ந்து டைப் பண்ணிட்டு இருப்பேன். ஒரு காட்டிலே சில பூச்சிகள் என ஒரு நாடகம் நடத்தினோம். அந்த நாடகத்தினுடைய படி முழுக்க டைப் பண்ணி முடிச்சோம்.
அந்த காலகட்டத்துக்கு அதுதான் தேவையா இருந்தது. ஏன்னா தமிழ்ல வந்து ஏதாவது அச்சில கோத்து வரணும்ன்னு சொன்னா, ஒண்ணு நம்ம டைப் பண்ணனும், அல்லது எழுதி ஏதாவது ஒரு அச்சகத்துக்கு கொடுக்கணும். அவங்க வந்து அச்சு கோத்து கொடுப்பாங்க. அச்சு கோத்து கொடுக்கும்போது அதுல இருக்கிற பிழைகளை நம்மளால திருத்த முடியாது. திருத்தணும்ன்னு சொன்னா, அவங்களுக்காக காத்திட்டு இருக்கணும், அல்லது எல்லாத்தையும் கலைச்சிட்டு மறுபடியும் அவங்க அச்சு கோக்கணும். இது நான் சும்மா ஒரு மேலோட்டமா சொல்றேன். இது மிகப்பெரிய ஒரு சிக்கலா இருந்தது தமிழ்ல அச்சு கோக்குறதுக்கு. நாங்க எல்லாம் மாணவர் பண்பாட்டு விழா நிகழ்ச்சிகளை நடத்துவோம். அப்ப அங்க வெளியிடப்படுகின்ற அந்த இதழ்கள்ல ஆங்கிலத்திலும் தமிழ்லயும் மலாய்லயும் கட்டுரைகளைப் போடுவோம். ஆங்கிலப் பக்கத்துக்கும் மலாய் பக்கத்துக்கும் ஏழு ரிங்கிட்தான் ஒரு பக்கத்துக்கு. தமிழுக்கு 35 ரிங்கிட். அதிலேயும் திருத்த முடியாது. ஒரு தடவை அச்சு கோத்து கொடுத்தாங்கன்னா பிழையாப் போச்சுன்னா பிழைதான். இதைத் தீர்க்கிறதுக்காகதான் இந்த சிக்கலை வந்து கலைக்கிறதுக்காகதான் முதன்முதல்ல கணினியில தமிழ் உருவாக்கினது. எனக்கு எப்பவுமே ரெண்டு நோக்கம் இருக்கும். முதல் நோக்கம் அப்போதைய தேவையை நிறைவேற்றுவது. அப்பத்தான் வந்து கேட்பாங்க. ஏன்னா எந்த ஒரு தீர்வை கொண்டு போய் கொடுக்கும் பொழுதும் அதைப் பயன்படுத்துறவங்க வந்து அந்தத் தீர்வை அவங்களுடைய சிக்கலுக்கு இணைக்க முடியணும். They must be able to relate the problem to their’s. இல்லைன்னு சொன்னா அது அவங்களுக்குப் புரியாது.
அதனால என்னுடைய எண்ணம், என்னுடைய ஃபோகஸ் அதுல இருந்தாலும் திட்டம் வந்து மிக தூர நோக்குத் திட்டமா இருந்துச்சு. இதை வந்து முழுமையாக ஒரு கணினியா ஆக்கணும். வீட்டில் அவங்களுடைய கணக்குகளைத் தமிழ்ல எழுதணும். அவங்களுடைய பட்டியல்களை வந்து தமிழ்ல போட முடியணும். அவங்களுடைய அறிக்கைகளை தமிழ்ல ஆட்டோமேட்டிக்கா பண்ண முடியணும். இந்த மாதிரியான அதுக்கான சில வாய்ப்புகளும் இருந்தது.
வீட்டிலேயே உட்கார்ந்து இங்க டைப் செட் பண்ணி உங்க மேகசீனை முழுக்க முழுக்க தயாரிச்சு கொண்டு போய் பிரிண்ட்ல கொண்டு வந்துரலாம். அந்தத் துணிச்சலை உருவாக்கியது முரசு மென்பொருள்.
முரசு அஞ்சல் பத்திரிக்கைத் துறையில வந்ததற்கு பெரும் ஆதரவாக இருந்தவர் மறைந்த பத்திரிக்கையாளர் இராஜகுமாரன். அவர் நெருங்கிய நண்பர். மிக நெருங்கிய நண்பர். இந்த வளர்ச்சிக்கு ரொம்ப உளமாற உழைச்சவர். அவர்தான் முதன் முதல்ல தமிழ் ஓசையை ஆதி குமணன் நடத்திட்டு இருந்தபோது அதற்கான முயற்சியை எடுத்தவர்.
தமிழ் ஓசையுடைய போர்ட் மீட்டிங் நடக்குது. அங்க போய் பிரசென்ட் பண்ணச் சொல்றாரு இராஜகுமாரன். “நீங்க போய் பேசுங்க. தமிழ் ஓசை நாளிதழையே அந்தக் கணினியில நடத்தணும்”னு சொல்லிட்டார்.
எனக்குத் தொடை, குடல் எல்லாம் மேலேயும் கீழேயுமா ஓடுது. முக்கியமானவங்கள அந்தக் கூட்டத்தில இருந்தாங்க. ஆதி குமணன் இருந்தாரு. பாலகிருஷ்ணன் ஐயா இருக்காரு. அதாவது ரேடியோ பாலா ஐயா. அவங்க எல்லாம் உட்கார்ந்து இருந்தாங்க. நான் கொஞ்சம் கொஞ்சம் பிரசென்டேஷன் பண்ணுவேன் அப்போ. உட்கார்ந்து இது பண்ணலாம் – எனக்குத் துணிச்சலா தோணுச்சோ, ஒரு கான்பிடென்ஸ் இருந்துச்சோ, அந்த மாதிரி சொல்லி இந்த மாதிரி பண்ணலாம், இந்த மாதிரி பண்ணலாம்னு சொன்னேன். அப்புறம் ரேடியோ பாலா ஐயா பார்த்தாரு, பார்த்துட்டு அவருக்கு “சரி தம்பி இதெல்லாம் ஓகே. எவ்வளவு நாள் ஆகும்? எவ்வளவு தேவைப்படும்? What is the cost and how long will this take?” என்றார்.
“We are going to buy your software.” நாங்கள் முடிவெடுத்துட்டோம். “எவ்வளவு நாள் ஆகும்? எவ்வளவு தேவைப்படும்?” எனக்கு ஒண்ணுமே சொல்லத் தெரியல. அப்புறம் நான் சொன்னேன், “நீங்க கணினி எல்லாம் நீங்க வாங்கி இருங்க. இதை நான் பண்ணிடுறேன்”னு. என்னமோ அரேஞ்ச் பண்ணி முடிச்சிட்டு, “சரி. அடுத்த வாரமே வாங்கிப் போட்டுருங்க. நீங்க வந்து போட்டுருங்க சாஃப்ட்வேரை”ன்னு பாலா சொல்லிட்டார்.
என்னால அன்றைக்கு தூங்க முடியல. கம்பெனில லீவு போட்டுட்டு – அப்ப நான் இன்னொரு கம்பெனில வேலை – ரெண்டு மூணு நாள் லீவு போட்டுட்டு, தமிழ் ஓசை ஆபீஸ்லேயே உட்கார்ந்து ஒவ்வொரு நாளும் வேலை செய்தோம். அங்கேயும் அச்சு கோக்குறவங்க எல்லாம் வந்து என்னை முறைச்சுப் பார்த்தாங்க. ஏன்னா அவங்க வேலை போகப் போகுது. அப்புறம் நான் சொன்னேன், “நீங்களே வந்து படிச்சுக்கலாம் சார். நான் சொல்லிக் கொடுக்கிறேன் உங்களுக்கு”ன்னு சொன்னா யாரும் கேட்கல.
இந்த மாதிரி ஒவ்வொரு கட்டத்திலேயும் பார்த்திருக்கேன். என்னை முறைச்சுப் பார்க்கிறது. எத்தனைப் பேர்கிட்ட திட்டு வாங்கி இருப்பேன் நான். முதன்முதல்ல மலேசியாவுல நடத்தப்படுகின்ற ஒரு தமிழ் நாளிதழ் மலேசியாவிலேயே உருவாக்கப்பட்ட ஒரு சாஃப்ட்வேர்ல வெளியே வர்றதுன்னு சொன்னா அதுதான் முதல் வரலாறு. அதன் பிறகு தமிழ் நேசன் மற்றவங்க எல்லாம் பயன்படுத்தினாங்க. சிங்கப்பூரிலிருந்து தமிழ் முரசு. அவங்களே நேரா அங்க வந்தாங்க. சாரரங்கபாணி ஐயா அவருடைய பிள்ளைங்க எல்லாம் வந்து கேட்டாங்க. நாங்களும் சிங்கப்பூர் போய் செய்து கொடுக்க, தமிழ் முரசும் முரசு அஞ்சல்ல வெளிய வந்துச்சு. இது முதல் காலக்கட்டம்.
இரண்டாவது காலக்கட்டம் வந்தது 90-ஆம் ஆண்டுகளில்! அப்பத்தான் நான் வேலைக்கு சிங்கப்பூருக்குப் போனேன். 90-ஆம் ஆண்டுகளில் இணையம் அறிமுகமாகிறது. இந்தக் கனெக்டிங் தி டாட்ஸ்ன்னு நான் சொன்னேன் பார்த்தீங்களா? இங்கேயும் பாருங்க. நான் போய் வேலை செய்கின்ற கம்பெனியுடைய பெயர் சன் மைக்ரோ சிஸ்டம்ஸ். அவங்கதான் இந்த இணையத்துக்கான முதுகெலும்பு போன்ற இணையத்துக்கான தொடர்புகள், இணையத்துக்கான செயலிகள், இணையத்துக்கான தொழில்நுட்பத்தை எல்லாம் உருவாக்குற மிகப்பெரிய நிறுவனம். அப்போ அவங்களோட டேக் லைனே, “We are the dot in the dot com” என்பதுதான்.
இணையமும் – மின்னஞ்சலும்…
அந்த நிறுவனத்துல அப்போ ஆசியான் வட்டாரத்துக்கான தொழில்நுட்ப விரிவாக்க இயக்குநராகச் சேர்ந்தேன். Director of Technology Marketing for ASEAN வட்டாரத்துக்கு. அப்ப வியட்நாம் மாதிரி நிறைய ஊர்களை சுத்திட்டு இருந்ததுனால தமிழ் சாஃப்ட்வேரை செய்றதுக்கான வாய்ப்புகள் ரொம்ப குறைஞ்சு போச்சு. இருந்தாலும் நிறைய பேர் வந்து ஆங்கிலத்துலதான் உரையாடிட்டு இருந்தாங்க. அப்போ மின்னஞ்சல் இ-மெயில் வந்து ரொம்ப பிரபலமா பயன்படுத்தப்படுகின்ற ஒரு ஒரு தொடர்புக் கருவியா இருந்துச்சு. குழுமங்கள் நிறைய இருந்தது. தமிழ்ன்னு சொல்லி ஒரு குழுமம் இருக்கும். அதுல உலகத்துல இருக்கிற எல்லாத் தமிழர்களும் அங்க இருப்பாங்க. எல்லா நாட்டுல இருந்து தமிழர்களும் அங்க இருப்பாங்க. எல்லாம் ஆங்கிலத்தில்தான் பேசிட்டு இருப்பாங்க. மின்னஞ்சல் குழுமங்கள் இருக்கும். இப்ப நீங்க வாட்ஸ்அப் குரூப்ன்னு சொல்றீங்களா? இது வந்து 90-கள்ல இருந்தது. மின்னஞ்சல் குரூப்ஸ் இருக்கும். எல்லாமே இ-மெயில்ல நடக்கும். அங்கேயும் ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு தமிழ்ல எழுதுவாங்க. எந்தவிதத் தயக்கமும் இல்லாம செய்துட்டு இருந்தாங்க. என்னால தாங்க முடியல.
I can’t. இது என்னால ஏற்றுக் கொள்ள முடியாத ஒண்ணு. அது ஏன் இதைத் தமிழ்ல ஏன் எழுத முடியல அப்படின்ற கேள்வி யாருக்கும் எழல அப்படின்றது எனக்கு மிகப்பெரிய ஒரு குறை. இப்ப கூட இருக்குங்க அது. இப்ப கூட இருக்கு. ஆனா வேற ஒரு பக்குவத்துக்கு வந்துட்டேன் நானு. அந்த மாதிரியான இமோஷனல் பேக்ஸ்லாஷ்லாம் எனக்கு கிடைக்காது. ஆனா இப்ப கூட அதே மாதிரிதான். இதை ஏன் தமிழ்ல எழுத முடியல? தமிழ் எழுத்துக்கள் ஏன் இங்கத் தோணல? அங்க ஆங்கிலத்துலதான் எழுதணும்ன்னு சொன்னா, ஆங்கிலத்தில்தான் எழுதி முடிச்சிடுவாங்க அவங்க வேலையை. யாருமே போய்க் கேட்க மாட்டாங்க.
இன்று சென்னையில கூட செல்லினம் உங்களுக்குத் தெரியும். செல்லினம் என்பது உங்களுடைய ஹேண்ட்ஃபோன்ல தமிழ்ல எழுதுறதுக்கான செயலி. அது நம்மதான் உருவாக்கினது. அதனுடைய அதிகமான பயனர்கள் வந்து இந்தியாலதான் இருக்காங்க. சென்னையிலதான் மிக அதிகமான பயனர்கள். இரண்டாவது மலேசியா, அப்புறம் இலங்கை, அப்புறம் சிங்கப்பூர். சென்னையில நிறைய பேர் இருக்காங்க. நிறைய பேர் அவங்க போய்க் கடையில வாங்கிட்டு வந்துருவாங்க ஃபோனை. அதுல தமிழ் இருக்கா இல்லையான்னு கடைக்காரன்கிட்ட கேட்க மாட்டாங்க. ஆனா செல்லினம் இ-மெயிலுக்கு வந்து இ-மெயில் அனுப்புவாங்க. பெரிய ஒரு முரண்பாடு என்னன்னா ஒரு உரிமையோட. “இந்த ஃபோன்” அது இங்கிலீஷ்ல எழுதுவாங்க. ஏன்னா அவங்க ஃபோன்லதான் தமிழ் இல்லையே. “This phone no தமிழ். Give me தமிழ் now”. அதை ஏன் கடைக்காரன்கிட்ட கேட்கல? “This phone no தமிழ். Give me தமிழ் now” அப்படின்னு எழுதுவாங்க.
பட் இதுதான் சொன்னேன். இந்த பக்குவங்கள் எல்லாம் மாறிப் போச்சு. ஏன்னா நீங்க சொன்ன ஒரு கருத்து. அதுதான் நான் கடைசியா என்னோட சம்மரியில வந்து வச்சிருக்கேன். அந்த ஃபோகஸ்ன்றது ரொம்ப முக்கியம். எந்த ஒரு செயலை நாம செய்தாலும் அந்த ஃபோகஸ்ன்றது இந்தக் கடந்த 25 ஆண்டுகளா இது அனுபவப்பூர்வமா நான் படிச்சிக்கிட்ட ஒண்ணு. இப்ப அவங்ககிட்டப் போய், “நீ ஏன் கடையில போய் கேட்கல?”ன்னு கேட்கப் போனேன்ன்னு சொன்னா அவங்ககிட்ட இருந்து வர்ற பதில் வேறயாப் போகும். The whole conversation mode will change. It’s not going to solve the problem. அவங்க வந்து அவங்களுடைய பின்னடைவை ஏற்றுக் கொள்ளப் போறது கிடையாது. ஆமாம் நான் கேட்டிருக்கலாம்ன்னு ஒத்துக்கப் போறது கிடையாது. ஏன்னா தமிழர்களுடைய பண்பு. I’ve lived enough to know that habit. அதனால அந்த வம்புக்கு எல்லாம் நான் போறது கிடையாது இனிமே. சரி. இந்தக் கேள்வி இனிமே வரக் கூடாது. அதுக்கு என்ன பண்ணனும்? அதுதான் தீர்வு.
முரசு அஞ்சல் உருவான காரணம்…
முதல்ல சொன்னேன் தெரியுங்களா, அந்த இணையத்துல எல்லாம் ஆங்கிலத்துலதான் அவங்ககிட்ட போய் வம்பு இழுக்காம சரி நீங்க ஆங்கிலத்துல எழுதுற மாதிரியே எழுதுங்க. நான் தமிழ் எழுத்துக்களைக் கொடுக்கிறேன் அப்படின்னு உருவாக்கப்பட்டதுதான் அஞ்சல். அந்த அஞ்சல் என்ற சொல்லே வந்து மின்னஞ்சல் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட செயலிக்காகத்தான் அஞ்சல்ன்னு கொடுத்தேன் பெயரை.
என் தந்தையார் முரசு நெடுமாறன் என்ற பெயரோட ரொம்ப பாப்புலர் ஆனதுனால முரசு அஞ்சல்ன்னு ரெண்டு பெயரையும் ஒண்ணா ஆக்கிட்டேன். ஏன்னா ஐ ஆம் எ மார்க்கெட்டிங் கை. சோ, அந்த பிராண்டிங் வந்து எனக்கு ரொம்ப முக்கியம். அந்த பிராண்டிங்கை இழக்கக் கூடாதுன்றதுக்காக ரெண்டும் சேர்த்து முரசு அஞ்சல்ன்னு சொன்னது அதுதான் காரணம். அப்ப நான் என்ன சொன்னேன்னா, “சரி, நீங்க வந்து ஆங்கில எழுத்துக் கொண்டு தமிழ்ல எழுதுறீங்க. அப்படியே எழுதுங்க. ஆனா ஆங்கில எழுத்துக்குப் பதில் தமிழ் வரும்.” அதுக்கப்புறம்தான் அவங்க தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பிச்சாங்க.
அப்ப அமெரிக்கால வந்து 25 ஆண்டுகளுக்கு மேல குடியேறின ஒருத்தர், அவர் பேரு சிவம். தொடர்பு எல்லாம் போயிடுச்சு. அவர் வந்து எனக்கு ஒரு தனிப்பட்ட முறையில ஒரு மின்னஞ்சல் அனுப்புனாரு. அதெல்லாம் பயன்படுத்திப் பார்த்த பிறகு அவர் என்ன சொன்னாருன்னா, “Thank you for helping me recover my own language after 25 years.” என்னுடைய சொந்த மொழியை 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பயன்படுத்த உதவினமைக்கு நன்றி அப்படின்னு சொல்லி எழுதி இருந்தார். இந்த மாதிரி நிறைய வரும்.
ஒரு தடவை அப்படித்தான் டெல்லியில, நியூ டெல்லியில, இது வந்து 2000-ம் அல்லது 2001-ம் ஆண்டு அந்த டைம்ல. நியூ டெல்லியில ஒரு கான்பரன்ஸ்ல நான் கீநோட் ஸ்பீச் கொடுத்துட்டு இருக்கேன். பெரிய ஒரு கான்பரன்ஸ் ஹால். அது வந்து Oracle OpenWorld-ன்னு சொல்லுவாங்க. Oracle OpenWorld-ன்றது வந்து உலகத்துல நடக்கிற மிகப்பெரிய தொழில்நுட்ப மாநாடுகள்ல ஒண்ணு. Oracle OpenWorld, Java One அப்போ நடக்குது. Java One இந்த மாதிரியான மாநாடுகள் எல்லாம் டிக்கெட் கிடையாது. 10,000 பேர் உட்காருவாங்க ஒரு கான்பரன்ஸ் ஹால்ல. டிக்கெட் கிடையாது. அதுல வந்து நான் முதல்ல என்னுடைய கீநோட் பேசி முடிச்சிட்டு என்னுடைய நோட்புக்கை ராப் பண்ணிட்டு, அடுத்த செஷன் போறதுக்கு மூடிக்கிட்டு இருக்கேன். ஒருத்தர் வந்து குடு குடுன்னு மேல ஏறிட்டு வந்து கை கொடுத்துட்டு, “மிஸ்டர் நெடுமாறன். My name is so and so. நான் உங்களுடைய முரசு அஞ்சலைப் பயன்படுத்துறேன். ரொம்ப நன்றி. நான் அடுத்த செஷன் போறேன். பிறகு சந்திப்போம். வணக்கம்” அப்படின்னு போயிட்டாரு. அவர் தமிழ்ப் பேரு மறந்துட்டேன். இது சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.
இன்னொரு தடவை Oracle-ஓட ஹெட் குவாட்டர்ஸ். இது என்னன்னா, ரெட்வுட் ஷோர்ஸ்ன்னு சொல்லிட்டு ஒரு இடம் கலிபோர்னியால. அங்கதான் வந்து Oracle- ஹெட் குவாட்டர்ஸ் இருக்கு. அது ஒரு பெரிய ஒரு டின் கேன் அப்படியே தூக்கி வச்ச மாதிரி இருக்கும். அவ்வளவு பெரிய கட்டிடம். ரொம்ப அழகான வளாகம். அவங்களுடைய கேம்பஸ் அவ்வளவு அழகா இருக்கும். அங்க போய் எனக்கு ஒரு வாரம், ரெண்டு வாரம் வேலை இருந்தது. நான் பாட்டுக்கு என் ஆபீஸ்ல உட்கார்ந்து வேலை செஞ்சிட்டு இருந்தேன். பக்கத்துல இருந்தவர் ஒரு தமிழர். என்னிடம் வந்து, “Are you Mr. Muthu Nedumaran from சிங்கப்பூர்?” அப்ப சிங்கப்பூர்ல இருந்தேன். “Yes,” அப்படின்னேன்.
“இங்க வாங்க. நான் உங்ககிட்ட ஒண்ணு காண்பிக்கிறேன்.” நான் எந்திரிச்சு வந்து அவர் ரூமுக்குப் போறேன். அவர் ரூம்ல போய் அவர் கம்ப்யூட்டரை ஆன் பண்ணிட்டு, “See” அப்படின்னு சொல்லி என்கிட்ட காண்பிக்கிறாரு. “நான் இங்கிலீஷ்ல எழுதுறேன். அங்க தமிழ்ல வருது”ன்னு. என்னுடைய சாஃப்ட்வேர் இங்க வருது. “பார்த்தீங்களா?” அப்படின்னு சொல்லிட்டு. “யா, I know.” என்றேன்.
“How do you know? You are in சிங்கப்பூர்?” “யா, I’m the one who wrote that” அப்படின்னு சொன்னேன். ஆச்சரியப்பட்டார். இந்த மாதிரி நிறைய பார்த்திருக்கேன் நான். அந்த மாதிரி சொல்லிட்டு இருப்பாங்க.
இந்த இரண்டாவது காலக்கட்டம் காலகட்டம் வந்து இணையம், இன்டர்நெட் வந்து மின்னஞ்சல், வெப்சைட் அமைக்கறதுக்கு அதுக்கான தமிழ் தரவுகள் இதெல்லாம் நடந்துட்டு இருந்தது. மூன்றாவது கட்டம், முதல் கட்டம் வந்து பிரிண்ட், இரண்டாவது கட்டம் வந்து இணையம், மூன்றாவது கட்டம் வந்து மொபைல் ஃபோன்ஸ், ஸ்மார்ட் ஃபோன்ஸ்.
இந்த ஸ்மார்ட் ஃபோன் இப்ப வந்து ஆண்ட்ராய்டு, ஐஃபோன் வச்சிருக்கோம். இதுக்கு முன்ன இருந்தது வந்து ஃபீச்சர்ட் ஃபோன்ஸ். Nokia, Sony Ericsson பார்த்திருக்கீங்க இல்லையா? இந்த Nokia, Sony Ericsson இதெல்லாம் வந்து அப்பயும் நிறைய ஆங்கில எழுத்துக்களைக் கொண்டுதான் தமிழ் எழுதிட்டு இருக்காங்க. “வணக்கம், எப்போ வர்றீங்க” e p p o வர்றீங்க. அதை கூட சில சமயம் இங்கிலீஷ்லதான் எழுதுவாங்க. ஏன்னா ஆங்கிலத்துல வந்து ஷார்ட்கட் பண்ணலாம். அதனால அது ரொம்ப வேகமா ஆங்கிலமே போயிருமோன்னு நினைச்சிட்டு இருந்தாங்க. பயந்துட்டு இருந்தாங்க அந்தக் காலத்துல. ஏன்னா ஒன்பது கீஸ்தான் இருக்கு. அந்த பட்டனைக்கொண்டு வந்து ஆங்கிலத்துல எழுதணும்ன்னு சொல்லும்போது யாருமே முறையா இலக்கணத்தோட ஆங்கிலத்தை எழுதல. ஆங்கிலமே வந்து பயந்துட்டு இருந்ததுனால, தமிழை எங்கே கொண்டு போய் வைக்கிறது? அந்தக் காலகட்டத்துலதான் முதன்முதல்ல உருவாக்கப்பட்டதுதான் செல்லினம்.
சிங்கப்பூர் வானொலி மூலம் தமிழில் குறுஞ்செய்தி
இது வந்து அதுக்கும் நிறைய கதைகள் இருக்கு. ஒண்ணு ரெண்டு மட்டும் சொல்றேன். அப்போ சிங்கப்பூர்ல இருந்தேன். என்னுடைய நண்பர் பாண்டியன். அவர்தான் ஒலி 96.8-னுடைய வானொலி நிலையத்தினுடைய தலைவரா இருந்தார். அப்ப பாண்டியன்கிட்ட பேசிட்டு இருக்கும்போது ஒரு நாள் இந்த மாதிரி ஒரு சிந்தனை வந்துச்சு. “பாண்டியன், நான் அந்த மாதிரி யோசிச்சிட்டு இருக்கேன். ஃபோன்ல எப்படி தமிழ்ல போடலாம்? எப்படியாவது போட வச்சிரணும், தமிழ்ல எழுத வச்சிரணும். கஷ்டமா இருக்கும், இது அந்த மாதிரி செய்ய முடியும் அப்படின்றதை காண்பிச்சிரணும்”
அப்படின்னு சொல்லிட்டு. “என்ன செய்யலாம் முத்து?”ன்னு சொன்னாரு. அப்புறம் சொன்னேன் இந்த மாதிரி, “சரி, இந்த மாதிரி கண்டுபிடிச்சோம்ன்னு சொன்னா, எனக்கு இப்ப இருக்கிற தொழில்நுட்பத்துக்கு வந்து, ஃபோன்ல இருந்து கணினிக்கு அனுப்பணும். என்னோட சர்வர் இருக்கு இல்லையா? கணினி உங்களுக்கு இணையத்துல இருக்கிற சர்வர் இருக்கு. ஃபோன்ல இருந்து கணினிக்கு அனுப்பற தொழில்நுட்பம் இப்ப ரெடியா இருக்கு. ஃபோன்ல இருந்து இன்னொரு ஃபோனுக்கு அனுப்பற தொழில்நுட்பம் இன்னும் ரெடி ஆகல. அது வர்றதுக்கு இன்னும் ரெண்டு ஆண்டுகள் ஆகும். அவ்வளவு தூரம் காத்திட்டு இருக்க வேணாம்” அப்படின்னு சொன்னேன். “சரி, என்ன செய்யலாம்?”ன்னு சொன்னாரு.
அப்ப நான் சொன்னேன், “நீங்க ரேடியோ ஸ்டேஷன்ல இருக்கீங்க. உங்களுடைய நேயர்களை வந்து, ரேடியோ ஸ்டேஷனுக்கு இப்ப இங்கிலீஷ்ல எல்லாம் அனுப்பிட்டு இருக்காங்க. தமிழ்ல அனுப்ப வைப்போம். அப்ப யாருக்கும் எந்தக் குறையும் வராது. ஏன்னா ரேடியோ ஸ்டேஷனுக்காக உருவாக்கப்பட்டதுதானே இந்த எஸ்எம்எஸ். அப்போ வாட்ஸ்அப் எல்லாம் எதுவுமே கிடையாது. இது வந்து Nokia, Sony Ericsson ஃபோன். ஃபோன்ல இருந்து ரேடியோவுக்கு அனுப்புற வசதியா நம்ம வந்து அறிமுகப்படுத்தினோம்னா நேயர்களுக்குப் பிடிக்கும். அவருக்கு சரியான குஷியாகிடுச்சு.
என்னுடைய ஆஃபிஷியல் வேலையில மற்றவங்களுக்கு வேலை செஞ்சிட்டு இருக்கும்போது கடைசியா செய்த பணி சன் மைக்ரோ சிஸ்டம்ஸுடைய ஜாவா கேள்விப்பட்டு இருப்பீங்க. ஜாவா தொழில்நுட்பத்தினுடைய ஆசியா பசிபிக் வட்டாரத்தினுடைய டைரக்டரா இருந்தேன். அப்போ ஆசியா பசிபிக்ல எந்த நாட்டுல ஜாவா தொடர்பான ஒரு சிக்கல் ஏற்பட்டால் முதல்ல என்கிட்டதான் வரும். அப்புறம்தான் யுஎஸ்ஸுக்குப் போகும். என்னுடைய டைரக்ட் ஆஃபீஸ் யுஎஸ் ஆஃபீஸ். வேலை செஞ்சது சிங்கப்பூர். ஆனா பெரும்பாலும் இருக்கிறது ஃபிளைட்ல. மற்ற மற்ற ஊர்களை சுத்திட்டு இருந்தேன்.
அதுதான் அந்தக் கனெக்டிங் தி டாட்ஸ்ன்னு சொல்றேன் பாருங்க. அதனால இதுக்கூட அப்படித்தான் நடந்தது. “பாண்டியன், நாம குண்டு சட்டியில்ல குதிரை ஓட்ட வேணாம். பெரிய அளவுல செய்வோம்” அப்படின்னு சொல்லிட்டு என்னென்ன செஞ்சோம்ன்னு தெரியுங்களா? Singtel, சிங்கப்பூரினுடைய மொபைல் கம்பெனி. Singtel, M1, StarHub மூணு நிறுவனங்களையும் பங்குபெற வச்சோம். அவங்களுடைய போர்ட்ஸை ஓப்பன் பண்ண சொன்னோம். நான் எஸ்எம்எஸ் அனுப்பும்போது உங்க போர்ட்டுக்கு வரும். இதை நீங்க தடுக்கக் கூடாது. நீங்க அனுமதிக்கணும்னு. அவங்க போய் அனுமதிக்கணும் அதை. பின்னால போய் கான்பிகர் பண்ணனும்.
இரண்டாவது Sony Ericsson. ஏன்னா எப்பவுமே இது மார்க்கெட்டிங் ஸ்ட்ராட்டஜி. என்னுடைய மார்க்கெட்டிங்கை பத்தி இன்னொரு செஷன்ல பேசலாம். இது தமிழ்னால நான் ரொம்ப அடக்கி வாசிக்கிறேன். மார்க்கெட்டிங் ஸ்ட்ராட்டஜி. எப்பவுமே வந்து நம்பர் ஒன் காரன்கிட்டப் போய் நீங்க செஞ்சீங்கன்னா, அவன் வந்து உங்களை கீழே பார்ப்பான். நம்பர் டூ காரன்கிட்டப் போய் செஞ்சீங்கன்னா, அவன் மேலே வர்றதுக்காக உங்களை மேலே பார்ப்பான். அதனால சொன்னேன், “Nokia கிட்ட போக வேணாம். Sony Ericsson-கிட்ட போவோம்”னு.
எங்களைப் பார்த்ததும் சோனி எரிக்சன் அதிகாரி சொன்னார், “முத்து, we are going to release a new phone. It’s blue color, very good for Indians. I’m so glad you’re doing this. We will sponsor the launch.” அந்த லாஞ்ச் முழுக்க அவங்க ஸ்பான்சர் பண்ணாங்க. அதுக்கப்புறம் வர்ற ரேடியோ புரோகிராம்ஸ் இந்த இந்த தமிழ் எஸ்எம்எஸ்-ஐ ப்ரொமோட் பண்ற ரேடியோ புரோகிராம்ஸும் அவங்கதான் ஸ்பான்சர் பண்ணாங்க.
அவ்வளவு பெரிய அளவுல செஞ்சு, 2005-ம் ஆண்டு பொங்கல் அன்னைக்கு அங்க லாஞ்ச் பண்ணோம். பாண்டியன் வைரமுத்துவுடைய மிகப்பெரிய ஃபேன். அவரைத்தான் கூப்பிடணும்னு சொன்னாரு. “கூப்பிடுங்க”ன்னு சொன்னேன். வந்தார். நேரடியாக மேடையிலேயே கவிதை பண்ணாரு. “நேற்றுவரை மூன்று தமிழ், இன்றுமுதல் நான்கு தமிழ், இதோ கைத்தொலைபேசியில் கணினித் தமிழ்” அப்படின்னு சொன்னாரு. எஸ்எம்எஸ் போய் அங்க ஒலி ரேடியோல சேர்ந்துச்சு. அதே நேரத்துல பினாங்கில இருந்தாரு அருமை ஐயா ரெ. கார்த்திகேசு. அவரை ரொம்ப மிஸ் பண்றேன் நான். அவருக்கு ஃபோன் பண்ணி, “நீங்க தமிழ்ல எழுதுங்க”ன்னு சொன்னா, அவரும் தமிழ்ல எழுதி ஒலி ரேடியோவுக்கு அனுப்பினார். அந்த மாதிரி லாஞ்ச் பண்ணோம். அவ்வளவு பெரிய அளவுல லாஞ்ச் பண்ணோம். இது வந்து 2005. இப்ப 2025. 20 ஆண்டுகளுக்கு முன்பு லாஞ்ச் பண்ணது.
அதுக்கப்புறம் ஆப்பிள் கணினிகள்ல வந்தது, ஆப்பிள் ஐஃபோன்ல வந்தது. அப்புறம் நடந்தது எல்லாம் பெரிய விஷயம். இப்ப வந்து செல்லினம் எங்க பார்த்தாலும் இருக்கு. அங்கேயும் ஒரு பெரிய போராட்டம். பெரிய பெரிய நிறுவனங்கள்ல போய் ஸ்மார்ட்ஃபோன்ஸ் எல்லாம் வந்தட்ட பிறகு, “நீங்க ஏன் இதுல தமிழ்ல போடக்கூடாது? தமிழர்கள் இருக்காங்களே” என்று கேட்டோம்.
அதாவது 80-களிலேயே கணினியில ஏன் தமிழ் இல்லை? விண்டோஸ்ல ஏன் தமிழ் போடலைன்னு கேட்கும்போதெல்லாம் அவங்க சொல்ற பதில் வந்து ரொம்ப ஸ்டாண்டர்டான பதில் எல்லாருக்குமே. “If someone can buy a computer,” ஒருத்தர் வந்து கணினி வாங்கக்கூடிய வசதி அவங்ககிட்ட இருந்துச்சுன்னு சொன்னா, “their English is probably better than mine” அப்படின்னுவாங்க.
இந்தியால கூட ஏன் இந்திய மொழிகள் இல்லைன்னு கேட்டோம்ன்னு சொன்னா, இந்தியால ஒருத்தர் கணினி வாங்கினார்ன்னா, அவருடைய ஆங்கிலம் வெள்ளைக்காரனுடைய ஆங்கிலத்தைவிட சிறப்பா இருக்கும். அவனுக்கு ஏன் தமிழ் போட்டுக் கொடுக்கணும்ன்னு கேப்பாங்க. அப்ப நான் சொல்லுவேன், “உண்மைதான். We speak better English than you speak. But we also speak தமிழ். We also read தமிழ். தமிழ் is our mother tongue.” அதை ஒரு இரண்டாவது லாங்குவேஜாவுது நீ போடு அப்படின்னு சொல்லி சொல்லிக் கொடுத்துட்டு இருப்பேன். அங்க அது ஒரு பெரிய போராட்டம் நடந்தது. எப்படி அந்த போராட்டத்தில் வெற்றி பெற்றேன் அப்படின்ற டீடெய்ல்ஸ் இந்த ‘உரு’ நூல்ல இருக்கு.
அதன் பிறகுதான் முதன்முதல்ல ஆப்பிள் போன்களில்தான் தமிழ் வந்தது. இது வந்து கடைசியில நான் சொல்லணும்னு நினைச்சேன். நான் இப்பயே சொல்றேன். இந்த மாதிரி நிறுவனங்ககிட்ட நம்ம போராடும்போது தமிழ் வேணும், என்கிற அந்த போராட்டன்றது வந்து ரெண்டு நிலையில இருக்கு. ஒண்ணு வந்து தரப்படுத்துதல், standardization. எந்த நிறுவனமும் ஒரு மொழியை வந்து ஆதரிக்கணும்ன்னு சொன்னா, அந்த மொழிக்கான தரம் தரப்படுத்தப்பட்டு இருக்க வேணும். ஒரு ஸ்டாண்டர்ட் இருக்கணும். இல்லைன்னா அவங்க ஸ்டைல்ல செஞ்சுட்டு போயிருவாங்க இல்லையா? அதனால யாரும் இப்ப அந்த மாதிரி செய்றது இல்லை. ஒரு ஸ்டாண்டர்ட் இருக்கணும். தமிழுக்கு ஒரு ஸ்டாண்டர்ட் இருக்கு. சில பேர் வந்து இப்படி இருக்கக் கூடாது, இப்படி இருக்கணும்ன்னு சொல்லுவாங்க. சில பேர் இப்படிக்கூட இருக்கக் கூடாது, அப்படி இருக்கணும்ன்னு சொல்லுவாங்க. உங்களுக்கெல்லாம் தெரியும். நான்கு தமிழர்கள் ஒரு மீட்டிங்ல இருந்தாங்கன்னா, ஐந்து கருத்துக்கள் வரும்.
இன்னொரு கதையும் சொல்றேன் உங்களுக்கு. ஆசியா பசிபிக் வட்டார டைரக்டரா இருக்கும்போது சொன்னேன் உங்களுக்கு. அப்ப எல்லா நாடுகளிலும் இருக்கிற டீம்களை நான் தான் மேனேஜ் பண்ணனும். அவங்ககிட்டப் போய் இந்த ப்ரோக்ராம்ஸ் எல்லாம் மார்க்கெட்டிங் ப்ரோக்ராம் எல்லாம் எக்ஸ்பிளைன் பண்ணனும். சில ப்ரோக்ராம்ஸ் ரோல் அவுட் பண்ணும்போது சைனால ஒரு மீட்டிங் நடக்கும். கொரியால ஒரு மீட்டிங் நடக்கும். அதே மாதிரி ஜப்பான்லயும் நடக்கும். சவுத் ஈஸ்ட் ஏசியாவுல சிங்கப்பூர், இந்தியா, மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் என்ற சிம்டிப் நாடுகள்ல ஒவ்வொரு மீட்டிங் நடக்கும். அப்புறம் இந்தியாவிலேயும் நடக்கும். இந்தியால பெரும்பாலும் பம்பாயில நடக்கும், அல்லது டெல்லியில நடக்கும்.
செம்மொழி மாநாட்டு சமயத்தில் வெளியான தமிழ் எழுத்துரு
தமிழ்நாட்டுல நல்ல வேலையா அங்க மதியுரையாளரா இருந்தவர் மறைந்த பேராசிரியர் ஆனந்தகிருஷ்ணன். நான் ரொம்ப மரியாதை வச்சிருக்கிறவர். மிகப்பெரிய மனிதர். அவருக்கு தெரிஞ்சது நல்லா. நான் என்ன சொல்ல வரேன்னு தெரிஞ்சது. ஆனால் சரி fair discussionன்னு சொல்லிட்டு அதைப் பதிவுகள் எல்லாம் அப்படியே இருக்கு. அதை இதையும் இதுல வந்து ஆவணப்படுத்தி இருக்காங்க. அந்த தரப்படுத்துதலை முதல்ல பண்ணிட்ட பிறகு, இப்ப வந்து நீங்க பாருங்க, ஏஐ-யா இருந்தாலும் சரி, மொபைல் ஃபோன்ல புதுப்புது தொழில்நுட்பங்களாக இருந்தாலும் சரி, ஒரு தொழில்நுட்பத்தைப் பண்ணாங்கன்னா எல்லா இந்திய மொழிகளுக்கும் அது பயன்படும்.
நீங்க யோசிச்சுப் பாருங்க. ஒரு ரெஸ்டாரன்ட் வச்சு நடத்துறீங்க. அங்க வந்து சாப்பிட வர்றவங்க பெரும்பாலும் மலாய் இனத்தவர்கள் வர்றாங்கன்னு வச்சுக்கோங்க. அப்ப அவங்ககிட்ட நீங்க போய்ச் சொல்ல முடியுமா, “நான் தோசை மட்டும்தான் விப்பேன். நீ விரும்புனா தோசை சாப்பிடு, இல்லைன்னா வராதே”ன்னு சொன்னா, அவங்க வர மாட்டாங்க. உங்களுக்கு பிசினஸ்ஸும் வராது. அதுபோலத்தான் நிறுவனங்களும். அவங்க வந்து ஒண்ணைச் செய்துட்டு பலருக்குக் கொடுக்கும் பொழுதுதான் அவர்களுடைய செலவினங்கள் குறையும். அவங்களுக்கு வருகின்ற வரவு வந்து அதிகரிக்கும். It’s எல்லாமே வந்து economies of scale அப்படின்னு சொல்லுவாங்க. அப்ப இவ்வளவு பெரிய நிறுவனம்கிட்ட நான் அதுக்கப்புறம் நான் போய்ப் பேசும்பொழுது, “No, you don’t talk about தமிழ் being 80 million. You talk about Indian language being 1 billion.” உடனே, “What are you talking about?” என்பார்கள். நான் சொன்னேன், “அடிப்படைகள் எல்லாம் ஒண்ணுதான். அந்த வடிவங்கள் மட்டும்தான் வேற” அப்படின்னு சொல்லி சொல்லி முடிச்சிட்ட பிறகுதான் செய்வாங்க.
அதுதான் முதன்முதல்ல நான் ஆப்பிளுக்குப் பண்ண அந்த ப்ராஜெக்ட் 2010-ல தான் வெளி வந்தது. செம்மொழி மாநாட்டு சமயத்துல தான் அது வெளி வந்தது. 13 மொழிகளுக்குப் பண்ணேன் நான். ஏன்னா எல்லா அடிப்படை ஒண்ணா ஆக்கிட்டேன். மொழிகளுடைய பேர் சொல்றதா இருந்தா, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், தேவநாகரி. தேவநாகரி சொன்னா, ஹிந்தி, மராட்டி, நேபாளி. மூணுமே ஒரே எழுத்துதான். சான்ஸ்கிரிட் மூணு நாலுமே ஒரே எழுத்துதான். தேவநாகரி, குஜராத்தி, குர்முகி. குர்முகி வந்து பஞ்சாபி. ஒரியா, பெங்காலி, சிங்களம், லாவோ, தாய் நான் பண்ணல. லாவோ, மியான்மர், கெமர், கெம்போடியன் மொழி. இந்த மொழி எல்லாத்துக்கான எழுத்துருவும் முதன்முதல்ல ஆப்பிள்ள வந்தது என்னுடைய எழுத்துருக்கள் தான்.
ஜாவி வந்தது இன்னொரு கதை சொல்லலாம். ஆனா இதை நான் கடைசியா சொல்லணும்னு நினைச்சேன். ஆனா இப்பயே சொல்லுன்னு சொல்லுது எனக்கு. இதுக்கு எல்லாமே அடிப்படையா அமைஞ்சது தமிழ்தான். எனக்குத் தமிழ் தெரிஞ்சதுனால தான் இது எல்லாத்தையும் செய்ய முடிஞ்சது. ஏன்னா அதற்கான அடிப்படை என்னால கண்டுபிடிக்க முடிஞ்சது. அதுக்குப் பிறகு அண்மையில செஞ்சாங்க. கிரந்தம் உங்களுக்குத் தெரியும். கிரந்தத்துக்கான ஆய்வும் நான் தான் பண்ணேன். கிரந்தம் சரி, தமிழி எழுத்துக்கள் உங்களுக்குத் தெரியும். கிரந்தத்துக்கு முன்ன உள்ள கிரந்தத்துக்கு முன்ன உள்ளது வட்டெழுத்து. அதுக்கான தரம் இன்னும் அமையல. வட்டெழுத்துக்கு முன்ன உள்ளது வந்து பிராமி, தமிழி. அதற்கான எழுத்துருவும் நான் தான் பண்ணேன். இப்ப ஐஃபோன்ல வந்து நீங்க தமிழிலையே கூட எழுதலாம்.
ஓகே, நான் ரெண்டு, மூணு கதை மட்டும் சொல்லி முடிச்சிடுறேன். இந்தக் கனெக்டிங் தி டாட்ஸ் பேக்வர்ட்ஸ்ன்னு சொன்னேன் இல்லையா? இந்த புள்ளிகளை நடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கும்பொழுது அதை வந்து ஒரு ஸ்ட்ரக்சர் கொடுத்தோம்ன்னு சொன்னா, நான் பண்ண வேலைகளை வந்து இப்படித்தான் பார்க்க முடியுது என்னால. அதாவது ஒரு தரம் இருந்ததுன்னு சொன்னா, தரம்ன்னு சொன்னா இலக்கணமாகவும் இருக்கலாம், ஒரு ஸ்ட்ரக்சர், ஒரு தரம் இருந்ததுன்னு சொன்னா, அங்க இருக்கிற நம்ம அங்க இருக்கிற சவால்கள் என்னன்னா, அதை எப்படி வந்து அமுல்படுத்துவது? அதை எப்படி வந்து மேம்படுத்துவது? How do we implement and how do we improve? இல்லையா? இப்ப இலக்கணம் இருக்குன்னு சொன்னா, யாப்பிலக்கணமே வச்சுக்குங்களேன். யாப்பிலக்கணம் இருக்குன்னு சொன்னா, யாப்பிலக்கணத்துக்கு ஏற்றவாறு எப்படி இப்ப இருக்கிற இலக்கணத்தை வந்து நம்ம மேம்படுத்துவது, பயன்படுத்துவது அல்லது இப்போது இருக்கிற இலக்கணத்துக்கு ஏற்றவாறு மேம்படுத்துவது? ஏன்னா இப்ப வந்து புதுப்புது சொற்கள் வந்து தமிழ்ல சேர்ந்துருச்சு. தமிழ் அல்லாத சொற்களும் இப்ப தமிழ்ப் பழக்கத்துக்கு வந்துருச்சு. அதை எப்படி வந்து நம்ம அக்காமடேட் பண்றது? எப்படி வந்து ஏற்றுக் கொள்றது? இது இதைப்பற்றிய சிந்தனைகள், இது பற்றிய கலந்துரையாடல்கள், கருத்தாடல்கள்தான் நிறைய இருக்கும். ஏன்னா ஏற்கனவே நமக்கு வந்து தொல்காப்பியம் அல்லது ஒரு இலக்கணம்ன்னு சொல்லிட்டு ஒரு ஸ்ட்ரக்சர் இருக்கிறதுனால.
ஒன்றுமே இல்லாதபொழுது என்ன மாதிரியான கலந்துரையாடல்கள் வரும்?
1985-ல நான் தொடங்கும் பொழுது, தமிழ் மின்உலகத்துக்கு ஒன்றுமே இல்லை. There was nothing. ஒரு பேசிஸ் இல்ல. ஒரு ஃபவுண்டேஷன் இல்ல. ஒரு டாக்குமெண்ட் இல்ல. யார்கிட்டயும் போய் நம்ம போராட முடியாது. யார்கிட்டயும் நம்ம போய்க் கேட்க முடியாது. “can you please add தமிழ்? இதுல தமிழ் சேர்க்க முடியுமா?” “What is தமிழ்?”னு கேட்பாங்க அவங்க. எதுவுமே இல்ல. ஒரு வெற்று நிலம். அங்க பயிரிடத் தொடங்கணும். அதுதான் இந்த வரலாறு. அதனாலதான் மற்ற துறைகளில் எனக்கு ஈடுபடுறதுக்கான நேரம் கிடைக்கல, இல்ல. நானே விரும்பல. ஏன்னா முழுக்க முழுக்க என்னுடைய நேரம் வந்து இதுலதான் செலவிடணும். There was a calling when you connect the dots backwards. இதுக்காகத்தான் நான் இந்தத் துறையில் போய்ச் சேர்ந்தேன். இதுக்காகத்தான் இவர் எனக்கு பாஸா அமைஞ்சாரு. இதுக்காகத்தான் எனக்கு வேலை கிடைக்காமல் இத்தனை ஆண்டுகள் 300 வெள்ளி சம்பளத்தில் வாங்கினேன் அப்படின்றத ஒவ்வொன்றையும் என்னால கனெக்ட் பண்ண முடிஞ்சது. எனவே தொடங்குனது ஒரு வெற்று நிலம். ஆனா இப்போ யாருமே நம்மகிட்ட “No, I don’t support the language”ன்னு சொல்ல முடியாது. சொன்னாங்கன்னா அவங்களுக்குத்தான் இழப்பு
அது மாதிரி நான் செய்த வேலையை வந்து இன்னொருத்தங்க செய்வாங்களா அப்படின்றத வந்து நான் சிந்திக்க வேண்டிய அவசியம் கிடையாது. ஏன்னா இந்த போராட்டம் அவங்களுக்கு இருக்காது. It’s a different challenge. இனி வருகின்ற சவால் என்னன்னா இதை விரிவாக்குவது, பயன்படுத்துவது. பயன்படுத்த பயன்படுத்தத்தான் வந்து அதனுடைய அதனுடைய மேம்பாடு அதிகரிக்கும். அதனுடைய வளர்ச்சி கூடும். இன்னும் அதிகமான வசதிகள் தமிழ்ல வரும். பயன்படுத்தலன்னு சொன்னா அது போயிரும். இப்போ வந்து it’s a business justification. அதுக்காகத்தான் நான் பண்றது எல்லா மொழிகளுக்கும் சேர்ந்து பண்றேன். நான் பேசும்போது இந்தியன் லாங்குவேஜஸ், சவுத் ஈஸ்ட் ஏசியன், சவுத் ஏசியன் லாங்குவேஜஸ் எல்லா மொழிகளைப் பற்றி பேசுறதுக்கான தகுதி என்கிட்ட இருக்கு. ஏன்னா எல்லா மொழிகளுக்கும் தொழில்நுட்பம் பண்ணிருக்கேன். நான் பண்ணிட்டும் இருக்கேன். அது முதல் கதை. ஏன்னா வெற்று நிலத்திலிருந்து தொடங்கினது முதல் கதை. இரண்டாவது கதை வந்து, இப்போது எனக்கு இருக்கிற அந்த ஃபோகஸ் ரெண்டு நிலைதான். ரெண்டு பிரிவு. ஒன்று, தமிழை வந்து மின் கருவிகள்ல எளிமையாக எழுத வைப்பது. அதுக்கு எந்தவித எக்ஸ்க்யூஸ், எந்தவித காரணமும் வந்து அவங்க கொடுக்க, “ஓ தமிழ் is very difficult to write, you know. English is so easy” அப்படின்னு சொல்றதுல பொருள் இருக்கு. There is valid reason. ஏன்னா, தொடக்க காலத்திலிருந்தே தொழில்நுட்பங்கள் ஆங்கில மொழிகளுக்காகவே உருவாக்கப்பட்டு வந்திருக்கின்றன. அதனால, எல்லாமே ஆங்கிலத்துலதான் எளிமையா இருக்கும். It’s given. அங்க போய் நம்ம போராட வேண்டிய, அங்க போய் நம்ம ஆர்க்யூ பண்றதுக்கான எதுவுமே கிடையாது.
ஆனா, சீனத்துக்கு அப்படி இல்ல. ஜப்பானுக்கு அப்படி இல்ல. அவங்க வந்து ஆங்கிலத்தைவிட சீனம்தான் ரொம்ப வேகமா எழுதுவாங்க. ஏன்னா, ஆங்கிலம் வளர்ந்த அதே வேகத்துலதான் அவங்களும் வளர்ந்தாங்க.
இன்னும் சொல்லப் போனா, ஆங்கிலத்தைவிட சீனம் இன்னும் வேகமா வளர்ந்துச்சு. ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்துல ஒரு பேராசிரியர் இருக்காரு. அவர் யூனிகோட் கன்சார்ட்ஸியம் கான்பரன்ஸுக்குப் போகும் போதெல்லாம் அவர் கூட பேசுறதுக்கான வாய்ப்பு ஏற்படும். அவர் ஒரு பெரிய ஒரு ஆய்வுக்கட்டுரையே பண்ணிருக்காரு. எங்கெங்கே சீன மொழி பயன்பாட்டுக்கு சிக்கல் ஏற்படும்போதெல்லாம், சீனர்கள் எழுந்து நின்று அதற்குத் தீர்வுகளைக் கண்டுபிடிச்சிருக்காங்க அப்படின்றதுதான் ஆய்வு காட்டி இருக்காரு. பார்த்துப் படிச்சோம்னு சொன்னா, உள்ளப்படியே சொல்றேன், வெக்கமா இருக்கும். அவ்வளவு முயற்சிகளை அவங்க எடுத்திருக்காங்க.
புதிய முரசு அஞ்சல்
…எங்க போகக் கூடாதுன்றது எனக்குத் தெரியும். எந்தவித எக்ஸ்க்யூஸும் இல்லாம தமிழ்ல எளிமையாக எழுதி வைக்கிறது. ஆங்கிலத்துல சொன்னா, make தமிழ் writing delightful on mobile devices. ஒரு ஒரு மகிழ்ச்சியூட்டும் அனுபவமாக ஏற்படுத்தணும். அதனுடைய முதல் கட்டம்தான் இந்த ஆண்டு நான் வெளியிட்ட முரசு அஞ்சல்னுடைய புதிய உருவாக்கம். நீங்க பயன்படுத்தி இருக்கீங்களோ என்னமோ தெரியல. பயன்படுத்தின எல்லாருமே என்கிட்ட, “ரொம்ப எளிமையா இருக்குங்க சார். ரொம்ப ஃபாஸ்ட்டா, ரொம்ப வேகமா என்னால எழுத்துக்களை எழுத முடியுது. பிழைகள் இல்லாம எழுத முடியுது”ன்னு சொல்லி இருக்காங்க. அடுத்த கட்டமா அதைக் கையடக்கக் கருவிகளுக்கும் கொண்டு போகணும்ன்றதுதான் அடுத்த ஆண்டுக்கான இலக்கு எனக்கு.
முதல் making writing delightful. இரண்டாவது அழகான எழுத்துருக்கள். எழுத்துருக்களுடைய முக்கியத்துவம், தமிழ்நாடு மட்டும் இல்ல, தென்னாட்டுக்காரங்க வந்து ரொம்ப பேர் உணரல. இப்ப மலையாளிகள் முடிச்சிட்டாங்க. அவங்க நிறைய ஆய்வுகள் செய்றாங்க. மலையாளம் கேலிகிராஃபின்னு சொல்லி கேலிஃபாஸ்னு சொல்லி ஆண்டுதோறும் எழுத்துருவியல் துறைக்கான ஒரு விழாவையும் நடத்துறாங்க. கொச்சின்லயும் திருவனந்தபுரத்திலும். ரொம்ப முடிச்சிட்டாங்க. வடநாட்டு எழுத்துக்கள்ல வந்து நிறைய நடக்குது. தேவநாகரி, குஜராத்தி, பெங்காலி இந்த எழுத்துக்கள் எல்லாம் ரொம்ப அழகா வந்து பண்றாங்க.
அதுக்குக் காரணம் என்னன்னா, அது வாயில் மாதிரி நமக்கு. இப்ப ஒரு திருமணத்துக்குப் போகும்போது வாயில்ல பெரிய ஒரு வரவேற்பு அட்டையைப் பார்க்கிறோம் இல்லையா? “வெல்கம்”னு போட்டு எவ்வளவு அழகா போட்டு நம்மளை வரவேற்கிற மாதிரி. முன்னுக்கு அந்த சந்தனம், குங்குமம் எல்லாம் போட்டு தெளிச்சிட்டு வரவேற்பாங்க இல்லையா? நமக்கு எப்படி இருக்கும் உள்ளுக்கு போகும்போது? ஒரு மகிழ்ச்சியா இருக்கும் இல்லையா? நம்மளை வரவேற்கிறாங்கன்னு ஒரு மகிழ்ச்சி. அந்த மாதிரி எழுத்துருவுடைய பணி.
‘உரு’ புத்தகத்தை எடுக்கும் பொழுது இதனுடைய உள்ளடக்கம் கூட எனக்கு நிறைவு இல்லை. ஆனா, வெளிய வரணும் அப்படின்ற ஒரு நோக்கத்துல வெளிய வந்திருச்சு. இப்படிப் பார்க்கும்போதே, “ஏய் நல்லா இருக்கே. படிக்கலாம் போல இருக்கே”ன்னு படிக்கணும். அந்தப் பணியை அந்த எழுத்துரு செய்யணும். படிக்கத் தொடங்கிட்டாங்கன்னா, தொடர்ந்து படிக்க வேண்டியது எழுத்தாளருடைய வேலை. ஆனா, படிக்க ஈர்ப்பது எழுத்துருவுடைய வேலை.
பார்த்த உடனே இதுல ஒரு நம்பகத்தன்மை கொடுக்கணும். பார்க்கும்போது இந்த எழுத்துல ஒரு நம்பகத்தன்மை கொடுக்கணும். லதா எழுத்துருவுல கூட புத்தகம் போட்டுட்டு இருக்காங்க இப்போ. சரி. எழுத்துருவைப் பத்தி பேசினா அது நாலு நாள் பேச சொன்னாலும் என்னால பேச முடியும். அவ்வளவு இருக்கு பேசுறதுக்கு.
அழகான எழுத்துருக்களைக் கொடுக்கணும் அப்படின்றதுதான் ரெண்டு பகுதி. ஒண்ணு வந்து உள்ளீடு முறையை வந்து எளிமைப்படுத்தணும், இனிமைப்படுத்தணும். இரண்டாவது அது வந்து எழுதுறதுக்கு, அடுத்த பக்கம் படிக்கிறதுக்கு வந்து ஆர்வத்தைத் தூண்டணும்.
பல பேர் என்கிட்ட சொல்லி இருக்காங்க, “ஏன் நீங்க இதுல ஆங்கிலத்துல மட்டும்தான் போட்டு இருக்கீங்க? ஏன் தமிழ்ல போடல?”ன்னு சொன்னா, அந்த கிராஃபிக் ஆர்ட்டிஸ்ட்டைக் கேட்டா, அவர் தமிழராதான் இருப்பாரு. என்ன சொல்லுவாருன்னா, “இதுக்கு ஏற்ற மாதிரி தமிழ் எழுத்துரு கிடைக்கல”ன்னு சொல்லுவாரு. ஓரளவுக்கு எனக்கு அவருடைய அவருடைய காரணம் புரியும். ஏன்னா அவ்வளவு அழகான ஒரு போர்ட்டை பண்ணிட்டு, அதுக்கு ஏற்ற எழுத்துரு ஆங்கிலத்துல தேர்ந்தெடுத்துட்டு, அதுக்குக் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாத மாதிரி ஒரு எழுத்தைப் போட்டீங்கன்னு சொன்னா, போர்டு வந்து அசிங்கமாப் போயிரும். அதனால போட மாட்டாங்க.
இப்ப பல திட்டங்களை செய்துகிட்டு இருக்கோம். ரெண்டு திட்டம். ஒண்ணு வந்து ரோஜா முத்தையா ரிசர்ச் லைப்ரரின்னு ஒண்ணு இருக்கு. ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்ன்றது சென்னையில. அவங்க கூட சேர்ந்து ஆண்டுதோறும் இந்த எழுத்துரு அதைப்பத்தி தனியா பேசலாம். நேரம் பத்தாது. கருத்தரங்குகள், எழுத்து எழுத்துருவியல் பட்டறைகள், பயிற்சிகள் இதெல்லாம் நாங்க நடத்திட்டு இருக்கோம். நிறைய பேர் வந்து அந்தத் துறையில வரணும்ன்னு சொல்லிட்டு. மலேசியால எனக்கு போதுமான எண்ணிக்கை இல்லை. இருந்துச்சுன்னு சொன்னா, நடத்துறதுல எந்தவிதச் சிக்கலும் கிடையாது. இது ஒரு ரகசியம் கிடையாது. எல்லாருக்கும் சொல்லிக் கொடுக்கலாம். யார் விரும்பினாலும் சொல்லிக் கொடுக்கலாம். சிக்கலே கிடையாது. எழுதி வைப்பதும் எழுத்துரு அழகு கொடுப்பது. அதுல ரெண்டு சொன்னேன். ஒண்ணு ஒரு ரோஜா முத்தையா.
எழுத்துரு மீதான பிஎச்டி ஆய்வைத் தொடங்கியுள்ளேன்
இரண்டாவது என்னுடைய சொந்த முயற்சி. மூணு மாதத்துக்கு முன்பு இதற்கான பிஎச்டி பட்டம் பண்றதுக்கான முயற்சியில இறங்கி இருக்கேன். யூனிவர்சிட்டி ஆஃப் ரெட்டிங் அதுதான் உலகத்திலேயே எழுத்துருவுக்கு இருக்கின்ற ஒரே பல்கலைக்கழகம். அதாவது ஆங்கிலம் அல்லாத லத்தீன் அல்லாத மற்ற எழுத்துருக்களுக்கு முதுகலை வரைக்கும் பிஎச்டி வரைக்கும் செய்யக்கூடிய ஆய்வு அந்தப் பல்கலைக்கழகத்தில்தான் இருக்கு. இலண்டனுக்குக் கீழே இருக்கு ரெட்டிங் பிரிட்டனில்.
அங்க என்னுடைய பிஎச்டி தொடங்கி இருக்கேன். ரெண்டு எழுத்துருக்கள் தேர்ந்த வரிவடிவங்கள். ஒண்ணு பெங்காலி. எனக்கு ரொம்பப் பிடிச்ச எழுத்துரு அது. இரண்டாவது தமிழ். அதுக்கு முக்கியக் காரணம் என்னன்னா, தமிழ் குறித்த பெரும்பாலான வளங்கள் என்கிட்ட இருக்கு. அதனால நிறைய ஆராய்ச்சி வந்து பெங்காலியில் போடலாம்ன்னு சொல்லி. என்னுடைய ஆய்வு என்னன்னா, இரண்டாம் நிலை எழுத்துருக்கள்.
ஒவ்வொன்னுக்கும் ஒவ்வொரு எழுத்துருவியல் கூறு இருக்கு. அதுதான் இரண்டாம் நிலை எழுத்துரு. இங்க வந்து முதல்ல சொல்லிக்கிட்டே வர்றேன். நிறுத்திட்டு இங்க ஒரு கவிதையைப் போடுறேன் அல்லது ஒரு மேற்கோள் காட்டுறேன். யார் சொன்னதை எழுதிப் போடுறேன். அதை வந்து வேற எழுத்துருவுல காண்பிக்கணும். அதற்கான கோட்பாடு ஆங்கிலத்துல நிறைய இருக்கு. இட்டாலிக்ஸ் தமிழ்ல இல்லை. அதை கண்டுபிடிக்கறதுக்காக கண்டுபிடிக்கிறதுதான் என்னுடைய பிஎச்டி ஆய்வு.
எனக்கு மூன்றே மூன்றுதான். முதலாவது ஃபோகஸ். அது நான் சொல்லிட்டேன் ஏற்கனவே. ஒரு துறையை நம்ம தேர்ந்தெடுக்கும் பொழுது, குறிப்பா அதுல ஒரு கொடி நாட்டணும் அப்படின்னு நினைக்கும் பொழுது, ஒரு மாற்றத்தை ஏற்படுத்தணும் அப்படின்னு சொல்லும் பொழுது, ஸ்டீவ் ஜாப்ஸ் வந்து எனக்கு மிகப்பெரிய என்னுடைய மென்டோர் மாதிரி. அவர் சொல்லுவாரு, “I want to create a dent in the universe”. இந்த பரவெளியில ஒரு ஒரு பள்ளத்தை உருவாக்கணும். ஒரு ஹேமர் எடுத்து ஒரு ஒரு பெரிய பேங் உருவாக்கணும் அப்படின்னு. அதான் என்னுடைய நோக்கம்.
என்னுடைய நோக்கம் என்னன்னா, இந்திய மொழிகளுக்கு தமிழுக்குக் குறிப்பா தேவையான இடம், மின் உலகம் டிஜிட்டல் ஸ்பேஸ்ல இருக்கணும் அப்படின்றது. அதை நான் அச்சீவ் பண்ணிட்டு இருக்கேன். அதற்கான அடிப்படைக் காரணம் அதுல எனக்கு இருந்த அந்த ஃபோகஸ்.
திருக்குறளைப் பின்பற்றுகிறேன்
வள்ளுவர் ரொம்ப அழகா சொல்லி இருக்காரு. திருக்குறள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். என்னை நடத்துறதே வழிநடத்துறதே திருக்குறள்தான். இதுக்கு நான் அப்பாவுக்கு நன்றி சொல்லணும். நான் காலேஜ்ல படிச்சிட்டு இருக்கும்போதே அவர் சொன்னார், “நீ கோயிலுக்குப் போறியோ என்ன பண்றியோ அது உன்னோட விருப்பம். ஆனா ஒரு வேலையை மட்டும் நீ நல்லா பண்ணு. திருக்குறளைப் படி.” மகாத்மா காந்தியினுடைய கதை சொல்லுவாரு. எப்படி பகவத் கீதையைப் படிச்சாருன்னு. ஒவ்வொரு நாளும் காலையில கண்ணாடியில அந்த ஸ்லோகத்தை எழுதிப் போட்டுட்டு, காந்தி பல்லை விளக்கிக் கொண்டே பகவத் கீதையைப் படிச்சாரு. அந்த மாதிரி நீ திருக்குறளைப் படி. அதை நீ பூஜை அறையில் வச்சுப் படிக்கிறியோ, படுக்கை அறையில் வச்சுப் படிக்கிறியோ அது உன்னோட விருப்பம். ஆனா ஒவ்வொரு நாளும் ஒரு குறளை மனப்பாடம் பண்ணு”ன்னு சொன்னாரு.
நான் அந்த மாதிரி ஒவ்வொரு நாளும் ஒண்ணு ஒண்ணு பண்ணான்னு சொன்னா நான் டிஜிட்டல்காரன். ஒண்ணு பண்ணா பத்தாதுன்னு ரெண்டு ரெண்டா படிச்சேன். காலையில ரெண்டு, அதே குறள் ஈவினிங்ல ரெண்டு படிச்சு முடிச்சேன். அது படிக்கும்போது ஒவ்வொரு சீருக்கான பொருளையும் அவர் கொடுப்பார். ரெண்டு அடி. இதனுடைய அருமை எனக்கு இப்பதான் தெரியுது. அதான் மூத்தோர் சொல் வார்த்தை அமுதம் அப்படின்றதுல எந்தவிதத் தயக்கமும் இல்லை எனக்கு.
அவர் (அப்பா) எனக்குக் கொடுத்த பரிசில்ல மிகப்பெரிய பரிசு இதுதான். “திருக்குறளைப் படி” அப்படின்னு சொன்னது. இங்க தம்பி அரசு உட்கார்ந்திருக்கார் பின்னால. நாங்க என்ன பண்ணுவோம்னா, ஒரு நாள் நாட்குறிப்பு எழுதணும். இத்தனை குறளைப் படிச்சேன். இதைப் படிச்சேன். எங்கேயாச்சும் எழுதலேன்னு சொன்னா, அந்தப் பக்கத்தை நாங்க அங்க போய் நிரப்பக் கூடாது. காலியாகத்தான் இருக்கணும். வாரத்துல ஒரு தடவை அவர் பார்க்கும்போது அந்தப் பக்கம் காலியாக இருந்துச்சுன்னு சொன்னா, இந்த காலம் முடிஞ்சிருச்சு. திரும்பி வராது. இதை உங்களுக்கு நினைவுபடுத்துறதுக்காக நான் ரெண்டு கோடு போடப் போறேன் என்பார் அப்பா.
ஒரு பிரம்பை எடுத்து அடிச்சிருந்தாலும் வலி அவ்வளவு வலிச்சிருக்காது அந்த ரெண்டு கோடு. அதுதான் எங்களை உருவாக்கிச்சு. இந்த ஃபோகஸ் பத்தி வள்ளுவர் சொல்றதை சொல்றேன். அதாவது, “வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்” அவ்வளவுதான். பீரியட். ஃபுல் ஸ்டாப். நோ டிஸ்கஷன். எண்ட் ஆஃப் ஸ்டோரி. இதுதான் வள்ளுவர். அவருக்கு இருக்கிற இடம் வந்து ஏழு சீர்தான். அவருக்கு இருக்கிற இடம் வந்து ஏழு சீரு, ரெண்டு அடி. இதுக்குள்ளார அவர் சொல்ல வேண்டிய கருத்தைச் சொல்லி முடிக்கணும். அங்க போய் எடுப்பு, தொடுப்பு, முடிப்பு, கதை எல்லாம் சொல்லிட்டு இருக்க முடியாது. அப்போ திருக்குறளிலேயே அவர் எவ்வளவு ஃபோகஸைப் போட்டுருப்பார்? எழுதும் போது.
“வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற” – இந்தக் குறள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். இதனுடைய ஆழம், அதுல இருக்கிற அந்தக் கான்பிடென்ஸ், எவ்வளவு கன்வின்ஸ்டா அதைச் சொல்லி இருப்பார். அதுதான் அப்படின்றதை அவர் உணர்ந்து சொல்லி இருப்பார். அதுதான், “வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்.”.
இதனாலதான் மற்ற வம்புகளுக்கெல்லாம் போக முடியாது. வாய்ப்பு இருக்காது. நீங்க ஏன் என்னை கூப்பிடல? நான் ஏன் உங்களை கூப்பிடல? அதுக்கெல்லாம் டைம் கிடையாது. கூப்பிட்டா நான் வந்து பேசுவேன். கூப்பிடலன்னா it’s okay. “Best of luck. Good நல்லா பண்ணுங்க” அப்படின்னு சொல்லி முடிச்சிருவேன். எந்த வம்புக்கும் போறது இல்ல. அரசியல் கொஞ்சம் கூட ஈடுபாடு கிடையாது. ஆர்வம் கூட கிடையாது. அதான் அந்த ஃபோகஸ். ஏன்னா இல்லன்னு சொன்னா dent create பண்ண முடியாது. You cannot make a dent in the universe.
அதான் முதலாவது ஃபோகஸ், இரண்டாவது குவாலிட்டி, மூணாவது எக்ஸலன்ஸ். அதான் மூணையும் சொல்லிடுறேன். இரண்டாவது குவாலிட்டி. இதுவும் ஸ்டீவ் ஜாப்ஸ்கிட்ட இருந்து படிச்சது நான். அவர் சொல்லுவார், “நீங்க வந்து ஒரு அலமாரியைச் செய்தாலும், அலமாரியுடைய டிராயர் கதவைத் திறக்கும் பொழுது முன்னுக்கு எவ்வளவு அழகா இருக்கோ, அதே அழகு பின்னாலயும் இருக்கணும். அலமாரி பின்னாலயும் இருக்கணும்.” அதை யாரும் பார்க்க மாட்டாங்கன்றதுக்காக அதையும் சும்மா செய்யக்கூடாது. நீங்க இப்ப இருக்கிற சீனர்கிட்ட வாங்குற அலமாரி எல்லாம் பின்னால ஒண்ணுமே இருக்காது. குவாலிட்டி.
இன்னொன்னு (சிங்கப்பூர்) அருண் மகிழ்னன்கிட்ட நான் படிச்சது என்னன்னா, “Just because this is தமிழ், it doesn’t have to subscribe to second class.” தமிழ் என்பதற்காக ஃபர்ஸ்ட் கிளாஸ் கிடைக்காமப் போயிரலாம் அப்படின்றதை என்னால கொஞ்சம் கூட சிறு அளவு கூட ஏற்றுக் கொள்ள முடியாது. “It deserves exactly the same spot as Latin or English deserves. No negotiation.” காரணம் இல்ல, வித்தவுட் எனி ரீசன்.
இதுக்கும் ரொம்ப ரொம்ப அழகா சொல்லி இருக்கார் வள்ளுவர். இது எனக்கு ரொம்ப காலமாப் பிடிச்ச குறள். “தோன்றின் புகழோடு தோன்றுக அக்திலார் தோன்றலின் தோன்றாமை நன்று”. இதுதான் எனக்கு ரொம்பப் பிடிச்சது. “வந்தா பெருசா வா. இல்லைன்னா வராதே.” அதனால இதுக்காகத்தான் பல நிகழ்ச்சிகள்ல நான் போறது இல்லை. ஏன்னா, அது எனக்குத் தொடர்புடைய நிகழ்ச்சி இல்லைன்னு சொன்னா, I cannot go and make a difference. அங்க போய் ஒரு வேறுபாட்டை என்னால உண்டு பண்ண முடியாது. என்னால அங்க போய் வேல்யூ ஆட் பண்ண முடியாது. அதனால நான் பின்வாங்கிறது. ஆனா, எனக்கு என்னுடைய துறை சார்ந்த நிகழ்ச்சி என்று சொன்னால், அங்க போகும்போது என்னுடைய ஸ்பீச்தான் பெஸ்ட்டா இருக்கணும். என்னுடைய பிரசன்டேஷன்தான் என்னுடைய ப்ராடக்ட், அதே மாதிரி முரசு அஞ்சலா எல்லாரும் பார்க்கணும். இப்போ நான் செய்த அந்த முரசு அஞ்சல் விண்டோஸ்ல இருக்கு, மைக்ரோசாஃப்ட் விண்டோஸ்ல இருக்கு, ஆப்பிள் கருவிகள்ல இருக்கு. Google நம்மளோட ப்ராடக்ட்ஸை விரும்பி வந்து கேட்கிறாங்க. Amazon-உடைய Kindle டிவைசஸ்ல நீங்க படிக்கிற தமிழும், மலையாளமும் நான் பண்ண ஃபான்ட்.
அதனால இந்த மாதிரி பெரிய நிறுவனங்களுக்குத்தான் அவங்க வந்து ஏற்றுக்கொண்டு, அவங்க அங்கீகரிக்கும் போதுதான் இது வந்து உலகத்தரமான ஒரு ப்ராடக்ட்டா ஆகுது. அது வந்து குவாலிட்டி.
மூன்றாவது எக்ஸலன்ஸ். குவாலிட்டிக்கும், எக்ஸலன்ஸுக்கும் உள்ள வேறுபாட்டை நான் சொல்லிறேன். ஒரு தரம் நிர்ணயிக்கப்பட்டு இருக்குன்னு சொன்னா, அந்தத் தரத்துக்கு ஏற்றவாறு ஒரு பொருளை உருவாக்குனீங்கன்னு சொன்னீங்கன்னா, அது குவாலிட்டி. இல்லையா? ஒரு ஸ்பெசிஃபிகேஷன் கொடுக்கிறாங்க. எனக்கு இந்த மேசை வந்து இவ்வளவு அகலம் இருக்கணும், இவ்வளவு நீளம் இவ்வளவு அகலம் இருக்கணும், இவ்வளவு நீளம் இருக்கணும், இவ்வளவு உயரம் இருக்கணும். இந்த கால்கள் வந்து இந்த மாதிரியான மெட்டீரியலை செய்திருக்கணும் அப்படின்னு சொல்லி ஸ்பெசிஃபிகேஷன் கொடுக்கிறாங்க. அதுல எந்தக் குறையும் இல்லாம நீங்க செய்து கொடுக்கிறீங்கன்னு பாருங்க. அதுக்குப் பேரு குவாலிட்டி.
எனக்கு அது போதாது. எனக்குத் தேவை எக்ஸலன்ஸ். அதையும் மீறணும். அதையும் மிஞ்சி செய்யணும். இதுதான் இதுலயும் எனக்கு ரொம்பப் பிடிச்ச ஒரு குறள். “உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து”
இங்கிலீஷ்ல சொல்லுவாங்க இல்லையா? aim for the sky. அங்க போய் aim பண்ணனும். அது வந்து கிடைக்கவில்லையென்றாலும் நம்ம விட்டுறக் கூடாது. மனசை விட்டுறக் கூடாது. தொடர்ந்து போராடிட்டு இருக்கணும். இது வந்து பேச்சுக்காக நான் சொல்லல. அலங்காரப் பேச்சுக்காகவும் திருக்குறளைப் பத்தி எல்லாருமே சொல்லுவாங்க. அதுக்காக நான் சொல்லல. இது வந்து என்னுடைய பிராக்டிஸ். This is my principle. This is what is my life. This is my temple. This is my worship.
அதைச் சொல்லி முடிச்சிட்டு இறுதியாக நிறைவாக, இன்னொன்று இதுவும் குறள்தான். “வெள்ளத்தனையது மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு” எவ்வளவுக்கெவ்வளவு உள்ளத்துல வந்து உயர்வை எண்ணி நினைக்கிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு நமக்கு அந்த வெற்றிகள் வந்து கிடைக்கும். தமிழ் உயரமான ஒரு இடத்துக்குப் போக வேண்டும். நாம் அதைக் கொண்டு போக வேண்டும். நாம் அதைக் கொண்டு போறதுக்கு வந்து ஒண்ணும் செய்ய வேண்டியதில்லை. பயன்படுத்தினா போதும். தொழில்நுட்பக் கருவிகள்ல பயன்படுத்துங்க. உங்களோட குழந்தைகளுக்குப் பயன்படுத்தச் சொல்லுங்க. குழந்தைகளுடைய குழந்தைகளுக்குப் பயன்படுத்தச் சொல்லுங்க. இல்லாததை வந்து உருவாக்குறதும், நிறைவேற்றுறதும் எங்களுடைய வேலை. அது இல்லை அப்படின்ற குறைப்பட்டு கொள்வது பயனர்களுடைய வேலை. இது ஒரு நீண்ட பயணம். இந்தப் பயணம் தொடர வேண்டும். இதே பயணம் இல்லை- புதுப் புது பயணங்கள் உருவாக வேண்டும் என்ற நம்பிக்கையோடு இந்த வாய்ப்பினை ஏற்படுத்தி தந்த ஏற்பாட்டாளர்கள், பெரியோர்கள், நண்பர்கள் அனைவருக்கும் நன்றி கூறி அமர்கின்றேன். நன்றி வணக்கம்.





