ஆம்வே நிறுவனம் இந்திய தயாரிப்புகளை அதிக விலைக்கு விற்று கூடுதல் லாபம் சம்பாதித்ததாகவும், இதனால் தனக்கு பொருள் இழப்பு ஏற்பட்டு மன உளைச்சல் உருவானதாகவும் கேரள மாநிலம் வயநாட்டைச் சேர்ந்த விசாலாட்சி என்ற பெண் கடந்த ஆண்டு போலீசில் புகார் செய்தார்.
இந்த புகார் மீது கேரள குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கேரளாவில் திருச்சூர், கோழிக்கோடு, கண்ணூர் பகுதிகளில் இருந்த இந்த நிறுவனத்தின் குடோன்களும் சோதனை செய்யப்பட்டது. அப்போது இந்திய தயாரிப்புகள் ஆம்வே பெயரில் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக தங்களை கைது செய்யாமல் இருக்க இவர்கள் 3 பேரும் கேரள உச்ச நீதிமன்றம் முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த உச்சநீதிமன்றத்தில் இவர்கள் வழக்கு விசாரணை நடக்கும் கோழிக்கோடு அருகே உள்ள கல்பட்டா மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜராகி ஒரு லட்சம் பிணயத்தொகை கட்டி ஜாமீன் பெற்றுக்கொள்ளும்படி உத்தரவிட்டது.
அதன்படி வில்லியம் எஸ். பிங்கினியும், இயக்குனர்கள் சஞ்சை மல்கோத்ரா, அன்சுபுத்ராஜ் ஆகியோர் நேற்று கல்பட்டா மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு வந்தனர். அங்கு ஜாமீன் தொகை கட்டுவதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டு இருந்தபோது குற்றப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு வல்சன் தலைமையிலான போலீசார் அவர்களை 3 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் இந்த வழக்கு தொடர்பாக மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் போலீசார் ஆம்வே நிறுவன மோசடி தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். கைதான வில்லியம் பிங்கினி அமெரிக்காவை சேர்ந்தவர். மற்ற 2 இயக்குனர்களும் உத்தரபிரதேச மாநிலம் நொய்டா பகுதியைச் சேர்ந்தவர்கள்.