இங்கிலாந்து,பிப்.5-பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்த முயன்ற பாகிஸ்தான் மாணவி யூசஃப்பாய் மலாலா (15), கடவுள் தனக்கு இரண்டாவது வாழ்க்கையை அளித்துள்ளாதாக கூறியுள்ளார்.
பெண் கல்வியை ஊக்குவித்த பாகிஸ்தான் மாணவி மலாலா (15) தலிபான் தீவிரவாதிகளால் கடந்த ஆண்டு துப்பாக்கியால் சுடப்பட்டார். தலை உள்பட பல இடங்களில் குண்டுபாய்ந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவ மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அவருக்கு இலவச உயர் சிகிச்சை அளிக்க இங்கிலாந்து அரசு முன்வந்தது.
தீவிர சிகிச்சை பெற்றுவந்த மலாலாவுக்கு இதுவரை 3 அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன. மேல் சிகிச்சை அளிக்கப்பட வேண்டியிருப்பதால் குடும்பத்தாருடன் மலாலா லண்டனிலேயே தங்கியிருக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில் சிகிச்சைக்கு பின் முதன்முதலாக மலாலா வீடியோ மூலம் பேட்டியளித்துள்ளார். பேட்டியின்போது மலாலா, இன்று நான் அனைவரையும் பார்த்து பேசுவதற்கு காரணம், குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என உலகமக்கள் அனைவரும் எனக்காக செய்த பிராத்தனை தான். உங்களுடைய பிராத்தனையின் பலனாக கடவுள் எனக்கு புதிய வாழ்க்கையை தந்துள்ளார்.
கடவுள் எனக்கு அளித்துள்ள இரண்டாவது வாழ்க்கையில் உலகில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் கல்வியின் நன்மையை பெற போராடுவேன். சமுதாயத்திற்கு சேவை செய்யவே நான் உயிர் பிழைத்து வந்திருப்பதாக கருதுகிறேன்.நாளுக்கு நாள் நான் நலமடைந்து வருகிறேன்
எனக்கு நடைபெற்ற அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடந்தது எனக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
அமெரிக்காவிலுள்ள ஒரு தொண்டு நிறுவனத்தின் உதவியோடு மலாலா நிதி என்ற ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது, இந்த அமைப்பினால் கிடைக்கும் நிதி பெண்களின் கல்வி அறிவை மேம்படுத்த பயன்படுத்தப்படும் என மலாலா தெரிவித்துள்ளார்.
உலகின் உயரிய விருதான நோபல் விருதுகளில், அமைதிக்கான நோபல் விருதுக்காக இந்த ஆண்டு பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்களில் மலாலாவின் பெயரும் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.