Home 13வது பொதுத் தேர்தல் ம.இ.கா தேர்தல் புகார்கள்: அக்டோபர் 24 ம் தேதி மத்திய செயலவைக் கூட்டத்தில் இறுதி முடிவு!...

ம.இ.கா தேர்தல் புகார்கள்: அக்டோபர் 24 ம் தேதி மத்திய செயலவைக் கூட்டத்தில் இறுதி முடிவு! கடும் வாக்குவாதங்கள் எழலாம்!

494
0
SHARE
Ad

MIC-Logo-Sliderகோலாலம்பூர், அக் 22 – கடந்த இரண்டு வாரஇறுதி நாட்களில் நாடு முழுவது நடத்தப்பட்ட ம.இ.கா தேர்தலில் எழுந்துள்ள புகார்கள் மற்றும் ஆட்சேபனைகள் குறித்து முடிவெடுக்க வரும் அக்டோபர் 24 ஆம் தேதி மத்திய செயலவை கூடுகிறது. அதில் கடுமையான வாக்குவாதங்கள் எழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் புகார்கள் குறித்து ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “நாடு முழுவதும் ம.இ.கா தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அதில் பல தொகுதிகளில் சுமூகமான தேர்தல் நடந்துள்ள நிலையில், ஒரு சில தொகுதிகளில் ஆட்சேபனைகளும், புகார்களும் எழுந்துள்ளன. அப்புகார்கள் குறித்து முழுமையான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. வரும் அக்டோபர் 24 ஆம் தேதி கூட்டப்படும் மத்திய செயலவைக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

மேலும், ஒரு சில தொகுதிகளில் புதிய தலைமைத்துவம் ஏற்பட்டுள்ளதில் தான் மனநிறைவு அடைவதாகவும், ம.இ.கா ஜனநாயகத்துடன் செயல்படுகிறது என்பதற்கு இந்த மாற்றங்கள் ஒரு சான்று என்றும் பழனிவேல் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

பேராக் மாநிலத்தில் மொத்தமுள்ள 24 தொகுதிகளில் 14 தொகுதிகளில் போட்டி நிலவியது. அதில் 8 தொகுதிகளில் புதிய தலைமைத்துவம் மலர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தேசியத் தலைமைத்துவ பதவிகளுக்குப் போட்டியிடும் தலைவர்களின் ஆதரவுள்ள ஒரு சில தொகுதிகளில் புகார்களும், சர்ச்சைகளும் எழுந்துள்ளதால் வரும் மத்திய செயலவைக் கூட்டத்தில் அது குறித்து கடும் வாக்குவாதங்கள் எழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், ம.இ.கா பேராளர்களின் மாநில மாநாடு நடத்தப்படுவதற்கான தேதியும் அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.