புதுடெல்லி, டிச 16 – ரஜினி காந்த்துக்கு மிகச் சிறந்த சிறந்த இந்தியர் விருதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார். இணையத்தில் மிகச்சிறந்த 25 இந்தியர்கள் என்ற கருத்துக் கணிப்பை தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று நடத்தியது.
இந்த கருத்து கணிப்பின் மீது பொது மக்கள் வாக்களித்தனர். இந்தியாவில் வாழும் சாதனையாளர்கள் மற்றும் பிரபலமானவர்கள் பெயர் அதில் இருந்தது. அவற்றுள், ரஜினிகாந்த், சச்சின் டெண்டுல்கர், ஏ.ஆர். ரகுமான், அமிதாப்பச்சன், ஷாருக்கான், வகீதா ரகுமான், முகேஷ் அம்பானி போன்றோர் மிகச்சிறந்த இந்தியர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில், முதல் இடத்தை ரஜினியும் இரண்டாம் இடத்தை சச்சின் டெண்டூல்கரும் மூன்றாம் இடத்தை இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானும் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
இவர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருதுகளை எடுத்து வழங்கினார். விழாவில் ரஜினி காந்த் பேசியதாவது, “எப்போதாவது அற்புதங்கள் நடக்கும். சாதாரண பேருந்து நடத்துநராக இருந்த நான் இவ்வளவு பெரிய முக்கிய பிரமுகர்கள் நடுவில் இருக்கிறேன் என்றால் இது அற்புதமான விஷயம்தான். மேலும், எனக்கு அம்மாவும், அப்பாவுமாக இருந்த எனது அண்ணன் சத்திய நாராயணாராவ் கெய்க்வாட், என் குரு பாலசந்தர் மற்றும் தமிழ் மக்களுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்” என்று ரஜினி தமதுரையின்போது கூறியிருந்தார்.