கொழும்பு, ஜன 8 – இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் தொடர்பாக அந்நாட்டு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை ஆராய அமெரிக்க நீதிபதி கொழும்பு வந்துள்ளார்.
இலங்கையில், விடுதலை புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே 2009ல் இறுதி கட்ட சண்டை நடந்தது. இதில் அப்பாவிகள் பலர் கொல்லப்பட்டனர். போர் ஓய்ந்த பிறகும் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாக ஐ.நா புகார் தெரிவித்திருந்தது.
கடந்த நவம்பரில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க வந்த பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் ‘மனித உரிமை மீறல் குறித்து இலங்கை அரசு தன்னிச்சையான விசாரணை நடத்த வேண்டும்’ என அறிவுறுத்தியிருந்தார்.ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா இரண்டு முறை தீர்மானம் கொண்டு வந்தது.
மூன்றாவது முறை தங்கள் நாட்டுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவதை தவிர்க்க போரின் போது காணாமல் போனவர்கள் குறித்து இலங்கை அரசு தற்போது கணக்கெடுப்பு பணியை துவக்கியுள்ளது.இதற்கிடையே, இலங்கை அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை ஆராயவும் போர் நடந்த பகுதிகளில் மேற்கொண்டுள்ள வளர்ச்சி பணிகள் குறித்து ஆராயவும் அமெரிக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதி ஸ்டீபன் ராப், ஒருவார பயணமாக கொழும்பு வந்துள்ளார்.இலங்கை தலைவர்கள் பலரை ஸ்டீபன் சந்தித்து பேச உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.