காசியாபாத், ஜன 8 – டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுடன் இணைந்த அலுவலகத்தின் மீது, மர்ம கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப் பிரதேச மாநிலம் காசியாபாத் அருகே உள்ள கவுசாம்பியில் தான் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சுமார் 60 பேர் கொண்ட கும்பல் ஒன்று, ஆம்ஆத்மியின் தலைமை அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தி அங்கிருந்த பொருட்களை சூறையாடியது. அப்போது அந்த கும்பல் அரவிந்த் கெஜ்ரிவால், பிரசாந்த் பூஷன் ஆகியோருக்கு எதிராக முழக்கமிட்டது. காஷ்மீரில் ராணுவத்தை நிறுத்துவது பற்றி, அம்மாநில மக்களிடம் கருத்து கேட்பு நடத்த வேண்டும் என்று, ஆம்ஆத்மி கட்சித் தலைவர்களில் ஒருவரான பிரசாந்த் பூஷன் கூறியிருந்தார்.
இதற்கு பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. உண்மை நிலவரம் பற்றி தெரிந்து கொள்ளாமல் எதுவும் பேசக் கூடாது, என்று மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத்தும் கூறியிருந்தார். பிரசாந்த் பூஷனின் காஷ்மீர் பற்றி கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தே, கெஜ்ரிவால் வீட்டுடன் இணைந்த கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தகவல் வெளிவந்துள்ளது.