புதுடில்லி : டில்லி அரசாங்கத்தின் மதுபானக் கொள்கை தொடர்பான ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் தற்காலிக விடுதலை வழங்கியுள்ளது.
2024 மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் ஜூன் 1 வரை அவருக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 21-ஆம் தேதியன்று அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டார். டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் ஜூன் 2 ஆம் தேதிக்குள் சிறை அதிகாரிகளிடம் சரணடைய வேண்டும்.
ஜாமீனில் இருக்கும்போது அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றம் விதித்திருக்கும் ஜாமீன் நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டும்.
கெஜ்ரிவால், மிக முக்கியமாக, அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டார். ஜாமீனில் இருந்தாலும் அவர் கட்சிக்காகப் பிரச்சாரம் செய்யலாம்.
ஆம் ஆத்மி போட்டியிடும் தொகுதிகளிலும், தான் சார்ந்திருக்கும் இந்தியா கூட்டணிக்காகவும் கெஜ்ரிவால் இனி தீவிரப் பிரச்சாரம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.