கோலாலம்பூர் : மலேசிய நாடாளுமன்ற மேலவையின் தலைவர் (செனட் பிரெசிடெண்ட்) முத்தாங் தாகால் இன்று வெள்ளிக்கிழமை (மே 10) காலமானார். அவருக்கு வயது 69.
கோலாலம்பூரிலுள்ள தேசிய இருதய மருத்துவமனைக் கழகத்தில் காலை 11.46 மணியளவில் அவர் காலமானார் என அவரின் அலுவலகம் அறிவித்தது.
அண்மையில் அசர்பைஜான் நாட்டுக்கு வருகை மேற்கொண்டிருந்த அவர் உடல் நலம் குன்றிய நிலையில் தேசிய இருதய மருத்துவமனைக் கழகத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி அவர் நாடாளுமன்ற மேலவைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
சரவாக்கைச் சேர்ந்த அவர் ஒரு வழக்கறிஞராவார். சரவாக் மாநில ஆளுநராக வான் ஜூனாய்டி வான் ஜாபார் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு பதிலாக முத்தாங் நியமிக்கப்பட்டார். அந்தப் பதவியை வகிக்கும் முதல் சரவாக் பூர்வகுடி இனத்தவர் அவராவார்.
பிபிபிஎஸ் என்னும் பார்ட்டி பெசாகா பூமிபுத்ரா பெர்சாத்து கட்சியைச் சேர்ந்த முத்தாங் 1982 முதல் 1990 வரை 2 தவணைகளுக்கு புக்கிட் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினராக சேவையாற்றியுள்ளார்.