ஜெனிவா – கடந்த 2002 முதல் 2011ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இலங்கையில் மிகக் கொடூரமான மனித உரிமை மீறல்கள் அரங்கேறி உள்ளதாக ஐ.நா., மன்றத்தில் தாக்கலான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இத்தகைய மனித உரிமை மீறல்களும், அதிகார துஷ்பிரயோகங்களும் ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் எதிரானவை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய தலைமையகத்தில் இன்று புதன்கிழமை இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் உள்ள விவரங்களை மனித உரிமைகளுக்கான ஐ.நா. ஆணையர் அல் ஹுசைன் விவரித்தார்.
அப்போது, இலங்கை இறுதிக்கட்ட போரின்போது அந்நாட்டு ராணுவம், விடுதலைப் புலிகள் என இரண்டு தரப்பினரும் போர்க்குற்றங்களின் ஈடுபட்டதாக அவர் கூறினார்.
“ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் பல்வேறு தகவல்கள் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. இறுதிக்கட்ட போரின்போது பாரபட்சமின்றி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நீதிக்கு அப்பாற்பட்டு கொலைகள் பல நடந்துள்ளன. போரின்போது பலர் மாயமாகியுள்ளனர். மனதைப் பதைபதைக்க வைக்கும் வன்கொடுமைகள் நடந்துள்ளன” என்றும் ஐநா ஆணையர் தெரிவித்துள்ளார்.
“பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெற்றுள்ளன. இறுதிக்கட்ட போரின்போது குழந்தைகளை விடுதலைப்புலிகள் படைகளில் சேர்த்துள்ளனர். குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளும் நடந்துள்ளன,” என்று அல் ஹுசைன் தெரிவித்தார்.
ஒட்டுமொத்தத்தில் மொத்தத்தில் இலங்கையில் கடந்த 2002 முதல் 2011 காலகட்டம் வரை பல்வேறு போர்க்குற்றங்கள் நடந்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இதன் காரணமாக இந்த விவகாரத்தை அனைத்துலக சமூகம் உற்றுக் கவனிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது என்றார்.