Home கலை உலகம் திரை விமர்சனம்: ‘பண்ணையாரும் பத்மினியும்’ – கொஞ்சம் ரசனை! கொஞ்சம் போர்!

திரை விமர்சனம்: ‘பண்ணையாரும் பத்மினியும்’ – கொஞ்சம் ரசனை! கொஞ்சம் போர்!

645
0
SHARE
Ad

Vijay Sethupathy 300 x 200பிப்ரவரி 14 – படம் ஆரம்பித்த புதிதில் ஏதோ கிளுகிளுப்பான தலைப்பாக இருக்கின்றதே, காதல் கதை போலும் என பலர் நினைத்திருக்க, போகப் போக பண்ணையாருக்கும் அவரது பத்மினி ரக காருக்கும் இடையிலான காதலைச் சொல்லும் படம் என்று படத்தின் முன்னோட்டங்கள் ஏற்கனவே சொல்லிவிட்டதால், படம் வெளிவந்த தருணத்தில் சுவாரசியமும் கொஞ்சம் குறைந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

#TamilSchoolmychoice

அதிலும், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இந்தப் படத்தைப் பார்த்து விட்டு வழங்கிய ஆஹா, ஓஹோ என்ற புகழுரை விமர்சனங்களைப் பார்த்துவிட்டு படம் பார்க்கச் சென்றால் நிச்சயம் ஏமாந்துதான் போவீர்கள்! என்னைப் போல!

படத்தின் திரைக்கதையின் பலமே, ஒரு பண்ணையாரையும் ஒரு காரையும் சுற்றி முழுக்க முழுக்க கதை அமைத்திருப்பதும், அவர்கள் இருவரையும் வைத்தே ஆரம்பம் முதல் இறுதி வரை காட்சிகளை நகர்த்தியிருப்பதும்தான். அதற்காக இயக்குநரைப் பாராட்டலாம்தான். ஆனால் அதுவே படத்தின் பலவீனமாகவும் ஆகிவிட்டது.

என்னதான் சுவாரசியமாக சம்பவரங்களைக் கோர்த்திருந்தாலும், ஒரு கட்டத்தில் நமக்கும் கொட்டாவி வந்து போரடிக்க ஆரம்பித்து விடுகின்றது.

அதிலும், பண்ணையாருக்கும் அவரது மனைவிக்கும் இடையில் முதுமையில் மலர்வதாக காட்டப்படும் காதல் நெருக்கம் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தாலும் அதையே விரிவாக காட்ட திரைக்கதை முற்பட – அதுவும் படத்தின் முக்கால் வாசிப் படலத்தில் அந்தப் பகுதி ஆரம்பிப்பது உண்மையிலேயே படத்தின் வேகத்தைக் குறைத்து போரடிப்பை ஏற்படுத்தி விடுகின்றது.

படத்தின் பலம்

அண்மையக் காலத்தில் தமிழ்த் திரையுலகின் நம்பிக்கை நட்சத்திரமாக உயர்ந்து – இவர் நடித்தால் கண்டிப்பாக படம் நன்றாக இருக்கும் என ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் விஜய் சேதுபதிதான் படத்தின் முக்கிய பலம்.

இரண்டாவது பலம் வலுவான திரைக்கதை.

விஜய் சேதுபதி தனக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்தை நிறைவாக செய்திருக்கின்றார். ஆனால் காரை ஓட்டுவது, பண்ணையாருடன் பேசிக் கொண்டிருப்பது இடைப்பட்ட நேரங்களில் காதலியைக் காண்பது என மூன்றே களங்களில் பயணித்திருக்கின்றார். அதனால், இதைத் தாண்டிய காட்சிகளோ, கதையமைப்போ இல்லாத காரணத்தால் அவரால் மேற்கொண்டு பிரகாசிக்க முடியவில்லை.

அவரது நடிப்புத் திறனைக் காட்டும் விதமான காட்சிகளும் அவ்வளவாக இல்லை. அவரது கூடவே வரும் வேலைக்காரப் பையன் பீடை என்பவன் மட்டும் தனது நகைச்சுவையால் நன்கு பிரகாசிக்கின்றான்.

பண்ணையாராக வரும் ஜெயப்பிரகாஷ் படத்தின் மற்றொரு பலம். ஊருக்கு நல்லது செய்யும் பண்ணையாராக வரும் அவரின் வீட்டுக்கு யதேச்சையாக வந்து சேரும் பத்மினி கார் எப்படி அவரது வாழ்க்கையோடு – அவரது மன உணர்வுகளோடு பின்னிப் பிணைந்தது என்பதைப் படம் விலாவாரியாக சொல்கின்றது.

இடையிடையே காரில் ஏற்படும் பழுதுகள், அதனால் ஏற்படும் பிரச்சனைகள் என்பதை வைத்தும், ஊருக்குள் வரும் பேருந்துடன் சாலையில் போட்டி ஓட்டம் என்று வரும்போதும் இடைவேளைக்குப் பின்னர் காரை வைத்து ஏதோ அசம்பாவிதம், அல்லது சோகம் நிகழப்போகிறது என ரசிகர்கள் நிச்சயம் எதிர்பார்ப்பார்கள். ஆனால் அப்படியெல்லாம் இல்லாமல் படத்தை சுபமாக முடித்திருக்கின்றார்கள்.

படத்தை நாம் கொஞ்சமாவது ரசிக்க வைப்பது ஆங்காங்கே இழையோடும் நகைச்சுவைகள். அதிலும் அந்த குண்டு பையன் பீடை ஏதாவது நல்ல வார்த்தை சொன்னாலே தப்பாக போய் முடிவது நகைச்சுவையை வரவழைக்கின்றது.

ஆனால், படம் முழுக்க நல்ல நகைச்சுவை தோரணம் கட்டி இந்தப் படத்தை இன்னும் அதிக அளவில்  ரசிக்க வைத்திருக்கக் கூடிய வாய்ப்பை இயக்குநர் கோட்டைவிட்டு விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஜெயப்பிரகாஷ் வழங்கியிருப்பது நல்ல நடிப்புதான். அவரது மனைவியாக வரும் துளசியும் நன்றாகத்தான் முக பாவங்களோடு முதுமைக் காதலை வெளிப்படுத்தியிருக்கின்றார். ஆனால், நயன்தாராக்களையும், ஹன்சிகாக்களையும் ரசிக்கக் காத்திருக்கும் ரசிகர் கூட்டம் இது போன்ற ஜோடியை படம் முழுக்க சகிப்பார்களா என்பதை இயக்குநர் கொஞ்சம் யோசித்திருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் நமக்கு போதும் போதும் என்றாகி விடுகின்றது.

படத்தின் ஒளிப்பதிவு தரமாக இருக்கின்றது. பாடல்கள் சுமார் ரகம்தான்.

படத்தின் பலீனங்கள்

வீட்டுக்கு வீடு கார்கள் ஆக்கிரமித்திருக்கும் இந்த நவீன கால கட்டத்தில் ஒரு கிராமத்தில் காரை எப்படி அந்தக் காலத்தில் கொண்டாடினார்கள் என்பதை இவ்வளவு தூரம் காட்டியிருக்க வேண்டுமா என்ற எண்ணம் படம் முடிந்தவுடன் நமக்கு எழாமல் இல்லை.

இடைவேளைக்குப் பிறகு காரை வைத்தே பரபரப்பாக எத்தனையோ விஷயங்களைக் கையாண்டிருக்கலாம். “காய்ந்து போன” நிலையில் இடைவேளைக்குப் பின்னரும் திரைக்கதை நகர்வது பெரிய பலவீனம்.

முதல் பாதி கொஞ்சம் ரசிக்கும்படி இருந்தாலும், இரண்டாவது பாதியும் அதே போன்ற சம்பவங்கள், அதுவும் காரைச் சுற்றியே நிகழ்வது படத்தின் பலவீனம்.

Iswarya Pannaiyar heroine 300 x200அதே வேளையில், விஜய் சேதுபதிக்கும் அவரது காதலிக்கும் இடையில் உருவாகும் காதலிலும் எந்தவித புதுமையோ, வித்தியாசமோ இல்லை. வருகிறார்கள், பேசுகிறார்கள், கொஞ்சம் சிணுங்கல், கொஞ்சம் சண்டை என பல படங்களில் பார்த்துப் பார்த்து சலித்த அதே கிராமத்துக் காதல். புதிய கதாநாயகி ஐஸ்வர்யா கொஞ்சம் ரசிக்கும்படி இருக்கின்றார். சரத்குமார் மகள் வரலட்சுமியைப் போலவே இருக்கின்றார்.

முழுக்க முழுக்க ஒரு கிராமம் பற்றிய படம் என்று வரும்போது எத்தனையோ வித்தியாச மனிதர்களைக் காட்டி அவர்களையும் திரைக்கதையோடு பிணைத்திருந்தால் சுவாரசியம் கூடியிருக்கும். படமும் கலகலப்பாக இருந்திருக்கும். ஆனால், மூன்று நான்கு கதாபாத்திரங்களை மட்டும் வைத்துக் கொண்டு இயக்குநர் கதையைப் பின்னியிருக்கின்றார்.

மொத்தத்தில் கொஞ்சமாக ரசிக்கலாம்.

இயக்குநர் அருண் குமார் அடுத்த முறை இன்னும் வலுவான சிந்தனைகளுடன் வலம் வர வேண்டும்.

-இரா.முத்தரசன்