Home கலை உலகம் ஜேம்ஸ் வசந்தனின் பார்வையில், ‘பண்ணையாரும் பத்மினியும்’

ஜேம்ஸ் வசந்தனின் பார்வையில், ‘பண்ணையாரும் பத்மினியும்’

625
0
SHARE
Ad

JamesCF24dec2013பிப்ரவரி 10 – விஜய் சேதுபதி நடிப்பில், அறிமுக இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் புதிதாக வெளிவந்திருக்கும் திரைப்படம் ‘பண்ணையாரும் பத்மினியும்’.

கடந்த வாரம் வெளியிடப்பட்டு, தற்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் இப்படம் குறித்து, பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தன் வலைத்தளத்தில் மிக அழகாக விமர்சித்துள்ளார்.

ஜேம்ஸ் வசந்தன் கூறியிருப்பதாவது:-

#TamilSchoolmychoice

“புளகாங்கிதம் என்ற சொல்லை படித்திருக்கிறேன், இன்று உணர்ந்தேன். ஒரு கலைப் படைப்பு பார்ப்பவரின், படிப்பவரின், கேட்பவரின் உணர்வுகளையும் மன நிலையையும் ஒரு உன்னத நிலைக்கு எடுத்துச் சென்றால் அது உயர்ந்த படைப்பாகிறது. அப்படி ஒரு உயர்ந்த படைப்பை கண்டு களிக்கும் அரிய வாய்ப்பு இன்று எதிர்பாராதவிதமாக எனக்கு நேர்ந்தது.”

“’THE HINDU’ ஆங்கிலப் பத்திரிகையில் ‘பண்ணையாரும் பத்மினியும்’ பட விமர்சனத்தை பரத்வாஜ் ரங்கன் எழுதியதைப் படித்த பிறகு அதைப் பார்க்கலாம் போல இருக்கிறதே என்று தோன்றியது. தியேட்டருக்குள் சென்றால், ஒரு இரண்டரை மணி நேர மகோன்னத நிலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அனுபவம். நல்ல, வித்தியாசமான படங்களை ஒரு புதுயுக இளைஞர் கூட்டம் தரத்துவங்கியிருக்கிற நேரத்தில், அதையும் தாண்டி, உலகப்படப் பாணியில், அந்தத் தரத்தில், பொழுதுபோக்கு படங்களையும் தர முடியும் என நிரூபித்திருக்கிற அருண்குமார், யார் நீ, எங்கிருந்து வந்தாய், இப்படி ஒரு படத்தை உருவாக்குவதற்கு?”

“’PP’ is a poetery in vision. இந்தப்படம் காட்சியாய் ஒரு கவிதை. திரைக்கதையை சொல்வதா, ஆரம்பத்திலிருந்து கடைசி வரை அடக்க முடியாமல் தளும்பி சிரிக்க வைக்கும் நகைச்சுவையை சொல்வதா, நயமாய் வருடுகிற மெலிதான உணர்வுகளை சொல்வதா, நம்முள் ஒட்டிக் கொள்கிற கதாபாத்திங்களை சொல்வதா, இவர்களுடைய நடிப்பை சொல்வதா, ஆழமான இயக்கத்தை சொல்வதா, நீண்ட நாட்களூக்குப் பிறகு நேர்த்தியாய் அழுத்தமாய் அற்புதமாய் ஒலியில் கதை சொல்கிற பின்னணி இசையை சொல்வதா?”

“புதிய இளம் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், தூங்கிக் கொண்டிருக்கும் பல இசையமைப்பாளர்களை எச்சரிக்க வந்திருக்கும் அழகான திறமை. எளிமையான கிராமிய பின்னணியில் இதமாக ஒலிக்கிற மெட்டுக்களும், சுவாரஸ்யமான இடை இசையும் (interludes), கவிதைத்தனமான காட்சிகளை மனதை மயக்குகிற அனுபவமாய் மாற்றுகிற பின்னணி இசையுமாய், இந்த வருடத்தின் சிறந்த இசை அமைப்பாளர் விருதுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தியிருக்கிறார். ஜஸ்டின், இந்த வீரியத்தில் நீங்கள் தொடர்ந்தால் அடுத்த இளையராஜாவாய் வலம் வரும் வாய்ப்பு உங்களுக்கிருப்பதாய் நான் கருதுகிறேன்.”

“நல்ல படங்கள் மற்ற மொழிகளில் மட்டுந்தான் வருமா என ஆதங்கப் பட்டுக்கொண்டிருக்கும் நல்ல படங்களின் ரசிகர்களே, உங்களுக்கு ஆறுதலாய், மாறுதலாய், ரசனையோடு வந்திருக்கிற இந்தப் படத்தை பாருங்கள். நம்பிக்கை பிறக்கும். ஒரு புறம் தமிழ் படங்களின் தரத்தை கீழே இழுத்துக் கொண்டிருக்கும் முயற்சி நடந்து கொண்டிருந்தாலும், வரலாற்றில் வெகுண்டெழும் புரட்சியாளர்களைப் போல வந்திருக்கிறான் இந்த அருண்குமார்.”

இவ்வாறு ஜேம்ஸ் வசந்தன் தனது வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.