லண்டன், பிப்.15- செங்கற்களை வைத்து, விரைவாக சாலை அமைக்கும் இயந்திரம், நெதர்லாந்து நாட்டில், அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
செங்கல் உதவியுடன் அமைக்கப்படும் சாலைகள், நீடித்து உழைக்கக் கூடியவை என்றாலும், அவற்றை உருவாக்க அதிக மனித உழைப்பு தேவைப்படுகிறது.
இதனால், கான்க்ரீட் உதவியுடன், அதிகமான சாலைகள் போடப்படுகின்றன.
நெதர்லாந்து நாட்டு கட்டுமான நிறுவனமான, “வான்கு’ உருவாக்கியுள்ள, இந்த இயந்திரத்துக்கு, “டைகர் ஸ்டோன்’ என, பெயரிடப்பட்டுள்ளது.
இது ஒரு நாளில், 400 சதுர மீட்டர் அளவுக்கு, உடனடி சாலை அமைக்கும் திறன் கொண்டது. புவிஈர்ப்பு சக்தியை மையமாக வைத்து, இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
செங்கற்களை இந்த இயந்திரத்துக்குள் அடுக்கி வைக்க வேண்டியது தான், சாலைப் பணியாளர் செய்ய வேண்டிய அதிகபட்ச வேலை.
அடுக்கப்படும் செங்கற்கள், புவி ஈர்ப்பு சக்தி மூலம், தரைக்கு இழுக்கப்பட்டு, வரிசையாக பொருத்தப்படுகின்றன. பின், “டைகர் ஸ்டோன்’ இயந்திரம், அவற்றை சமன் செய்தபடி நகரும்.
இதன்மூலம், வேகமாகவும், எளிதாகவும் சாலை உருவாக்கப்படுகிறது. சாதாரணமாக மனித உழைப்பால், ஒரு நாளில், 75 முதல், 100 சதுர மீட்டர் பரப்பளவு சாலைகள் தான், உருவாக்கப்படுகின்றன.
எனவே, சாலை அமைப்பது, இந்த இயந்திரம் மூலம் எளிதாகியுள்ளது. மின்சாரம் மூலம் இயங்கும் இந்த இயந்திரம், அதிக சத்தம் எழுப்பாது; குறைவான பராமரிப்பே போதும்.