சென்னை, மே 13 – பிரபல தமிழ்ப்பட இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், தனது மனைவி சுமா குடும்பத்தினருடன் வளசரவாக்கம் சவுத்திரி நகரில் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு ஹாரிஸ் ஜெயராஜ் மனைவி சுமாவுக்கு வந்த கைத்தொலைபேசி அழைப்பில் பேசிய மர்ம நபர் ஒருவர் ‘‘உனது கணவரை நாங்கள் கடத்தப்போகிறோம். எனவே எங்களுக்கு உடனடியாக ரூ.20 லட்சம் கொடுக்க வேண்டும். பணத்தை எந்த இடத்தில் எப்படி கொடுக்க வேண்டும் என்பதை பிறகு தெரிவிக்கிறோம்’’ என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
மர்ம ஆசாமி போனில் பேசியபோது ஹாரிஸ் ஜெயராஜ் வீட்டில் இருந்ததால், இது ஏமாற்று வேலை என்று கருதிய சுமா, இந்த தகவலை யாரிடமும் சொல்லாமல் விட்டுவிட்டார்.
இதையடுத்து நேற்று காலை சுமாவுக்கு அதே எண்ணில் இருந்து மீண்டும் அழைப்பு வந்தது. அதனை எடுத்து பேசிய அதே நபர், ‘இன்னும் பணத்தை ‘ரெடி’ பண்ணலையா? பார் உனது கணவரை சிறிது நேரத்தில் கடத்தி விடுகிறோம்’ என்று கூறி மிரட்டி உள்ளார்.
இதனால் பயந்துபோன சுமா, தொலைபேசி மிரட்டல் குறித்து வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து சென்னை காவல் துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.
தனிப்படையினர் விசாரணை நடத்தி திரிசூலம் மலைப்பகுதியில் பதுங்கியிருந்த 3 பேரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
பிடிபட்டவர்கள் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த அருணாசலபாண்டியன் (வயது 25), முத்துகிருஷ்ணன் (32), திருமலை (30) ஆகியோர் ஆவர்.
இதில் திருமலை என்பவர் ஹாரிஸ் ஜெயராஜின் தந்தையிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார் ஓட்டுநராக வேலை செய்தார்.
இந்த மிரட்டலுக்கு மூளையாக செயல்பட்ட திருமலை, சுமாவின் கைத்தொலைபேசி எண்ணை கூட்டாளிகளிடம் கொடுத்து பேச செய்துள்ளார்.
அவர்களிடமிருந்து கார் ஒன்றையும் காவல்துறையினர் கைப்பற்றி உள்ளனர்.