அங்காரா, மே 16 – துருக்கியின் இஸ்தான்புல் நகரத்திலிருந்து 250 கி.மீ தூரத்தில் இருக்கும் சோமாநகரில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் கடந்த 12-ஆம் தேதியன்று நடந்த தீவிபத்தில் 274-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், சுரங்கத்தில் சிக்கியிருக்கும் தொழிலாளர்களை மீட்கும்பணியும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
துருக்கி நாட்டில் ஏற்பட்ட சுரங்க விபத்துகளிலேயே மோசமான பேரழிவைத்தந்துள்ள இந்த விபத்து, தொழிற்சங்க உறுப்பினர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
செலவினங்களைக் குறைப்பதற்காக தொழிலாளர்களின் வாழ்வைப் பணயம்வைக்கும் தனியார் நிறுவனங்களும், அரசின் பொறுப்பற்ற கொள்கைகளுமே இந்தப் பேரழிவிற்குக் காரணமாகக் கூறப்படுகின்றது.
எனவே, இதனைக் கருதில்கொண்டு விரைவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பொது தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தங்களது இணையதளச்செய்தியில் தெரிவித்துள்ளது.
மேலும், இந்தப் பேரழிவை முன்னிட்டு நேற்று முதல் வேலை நிறுத்தத்தை மேற்கொண்டனர். இந்த போராட்டத்தில்சு மார் 3000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர். அவர்கள் துருக்கியின் தலைநகரமான அங்காராவிலிருந்து தொழில்துறை அமைச்சகம் வரை நடைபயணம் மேற்கொண்டனர்.