கோலாலம்பூர், மே 21 – மலேசியா ஏர்லைன்ஸ் என்றாலே பயணிகள் அனைவரும் அலறும் அளவிற்கும் அடுக்கடுக்கான அசம்பாவிதங்கள் தொடர்ந்து நடந்தவண்ணம் உள்ளன.
கடந்த மார்ச் 8 ஆம் தேதி, மாஸ் நிறுவனத்தின் MH370 விமானம் மாயமானது, அதனைத் தொடர்ந்து எஞ்சின் கோளாறு, வாத்துக் கூட்டத்தை மோதியது என மாஸ் விமானங்கள் பல பிரச்சனைகளை சந்தித்தன.
உச்சக்கட்டமாக கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி கோலாலம்பூரில் இருந்து பெங்களூர் நோக்கிப் புறப்பட்ட மாஸ் MH192 விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சுமார் 4 மணி நேரங்கள் வானில் சுற்றிய பின்னர் மீண்டும் கேஎல்ஐஏ அனைத்துலக விமானம் நிலையத்தை வந்தடைந்தது.
அந்த விமானத்தில் 159 பயணிகள் மற்றும் 7 விமானப் பணியாளர்கள் உட்பட மொத்தம் 166 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந்நிலையில், இன்று கோலாலம்பூரில் இருந்து லங்காவிக்கு புறப்பட்ட மாஸ் MH1438 விமானம், சுமார் 20,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது இடது புற இயந்திரத்தில் ஏற்பட்ட வெடிப்பை தொடர்ந்து சிறு நெருப்புப் பொறிகள் ஏற்பட்டுள்ளன.
இதனால் விமானத்தில் சில வினாடிகள் மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது.இதனைக் கண்ட பயணிகள் அலறியதோடு, சிலர் அழத் தொடங்கியுள்ளனர்.
லங்காவி அனைத்துலக விமானத்தில் தரையிறங்க 10 நிமிடங்கள் இருக்கும் போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இது குறித்து அவ்விமானத்தில் பயணம் செய்த பயணிகளில் ஒருவர் அதை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம் அகப்பக்கம் வழியாக தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது வெடிப்பு சத்தத்தைக் கேட்டதாகவும், அதன் பின்னர் தீப்பொறிகளைக் கண்டதாகவும் ஹாஸ்வெண்டி என்ற அந்த பயணி தெரிவித்துள்ளார்.
மேலும் இறைவன் அருளால் தாங்கள் அனைவரும் பாதுகாப்பாக தரையிறங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து நடைபெற்று இது போன்ற அசம்பாவிதங்களால் மலேசியா ஏர்லைன்ஸ் விமானங்களின் பராமரிப்பும், பயணிகளின் பாதுகாப்பும் தற்போது கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.