நியூயார்க், மே 22 – மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கடந்த செவ்வாய்கிழமை தனது புதிய ‘சர்ஃபேஸ் ப்ரோ 3’ (Surface Pro 3) டேப்லெட்களை அறிமுகம் செய்தது.
ஆப்பிளின் மேக்புக் ஏர் கணினிகளுக்கு போட்டியாகக் உருவாக்கப்பட்டுள்ள இந்த சர்ஃபேஸ் ப்ரோ டேப்லெட்களின் அறிமுக விழா, அண்மையில் நியூயார்க்கில் நடைபெற்றது.
இவ்விழாவில் பேசிய அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா கூறுகையில்,”மைக்ரோசாஃப்ட்டின் அனைத்து திறன்களையும் பரிசோதித்துப் பார்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளோம். இதன் மூலம் கிடைக்கும் அனுபவம் மகத்தானது” என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் சர்ஃபேஸ் ப்ரோ 3 டேப்லெட்களின் புதிய சிறப்பு அம்சங்கள் பற்றி கூறுகையில், “விண்டோஸ் இயங்குதளங்களில் இயங்கும் இந்த சர்ஃபேஸ் ப்ரோ 3 டேப்லெட்கள் மூன்று ரகங்களில் விற்ப்பனைக்கு வருகின்றது. 700 அமெரிக்க டாலர் முதல் 1,949 அமெரிக்க டாலர்கள் வரையிலான இதன் மதிப்பு, அதன் ரகங்களுக்கு ஏற்றவாறு நிர்ணயிக்கப்படும். 12 அங்குலத் திரை கொண்ட இந்த சாதனத்தில் சிறப்பு அம்சமாக, சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட, ஐபேட்களுக்கான மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் சூட் வசதியும் உள்ளது” என்று கூறியுள்ளார்.
கடந்த 2012-ம் ஆண்டு அறிமுகமான சர்ஃபேஸ் டேப்லெட்கள் பயனர்களிடையே, ஆப்பிள் ஐபேட் போன்று பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எனினும், தற்போது அறிமுகமாகியிருக்கும் சர்ஃபேஸ் ப்ரோ 3 டேப்லெட்கள் தொழில்நுட்பச் சந்தையில் தனது வெற்றியை நிலைநாட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.