சியோல், ஜூலை 4 – சீனா அதிபர் ஸி ஜின்பிங் அரசு முறைப் பயணமாக தென் கொரியா சென்றுள்ளார். சீனாவின் நெருங்கிய நட்பு நாடாக விளங்கும் தென்கொரியா, வட கொரியாவின் தொடர் அச்சுறுத்தல்களை சமாளிக்கவும், முன்னணி நாடுகளுடன் வர்த்தகத்தை பெருக்கிக் கொள்ளவும், பெரும் முயற்சிகளை எடுத்து வருகின்றது.
அதன் முன்னோட்டமாக, தென் கொரியா வந்துள்ள சீனா பிரதமர் ஸி ஜின்பிங்க்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சீன அதிபருடன் இருநாடுகளின் வர்த்தகம் குறித்த பேச்சுவார்த்தைகளை ஏற்படுத்த தொழில் அதிபர்கள் உள்ளிட்ட தூதுக்குழு ஒன்றும் சியோல் சென்றடைந்துள்ளது.
இந்தப் பயணம் குறித்து தென்கொரிய பத்திரிகைகளுக்கு ஸி ஜின்பிங் அளித்துள்ள பேட்டியில், “பாதுகாப்பு சூழல் மற்றும் கால நிலைகளை பொறுத்து அண்டை நாடுகளான சீனாவும், தென்கொரியாவும் இணைந்து செயல்பட வேண்டும் என சீனா விரும்புகின்றது.
பாதுகாப்பு தொடர்பான சவால்கள் மற்றும் அச்சுறுத்தல்களை சேர்ந்தே எதிர்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.ஸி ஜின் பிங் பயணத்தின் மூலம் சீனாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையேயான வர்த்தக உறவுகளும், அரசியல் ரீதியான உறவுகளும் வலுவடையும் என தகவல்கள் கூறுகின்றன.
வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருவதால், வட்டாரத்தில் நிலவும் பதற்றம் பற்றியும் இரு நாட்டுத் தலைவர்களும் விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.