புத்ரா ஜெயா, பிப்.26-பொதுச்சேவைத்துறையின் முக்கியப் பொறுப்புகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 298 மலேசியர்களுள் 24 பேர் இந்தியர்கள் என மலேசிய பொதுச் சேவைத் துறை ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ மாமுட் அடாம் அறிவித்துள்ளார்.
புத்ரா ஜெயாவில் நடைபெற்ற நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வில் மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்ட அவர் பி.தி.டி எனப்படும் நிர்வாக அதிகாரி, மருத்துவம், மருந்தியல், பல் மருத்துவம், தகவல் தொழில் நுட்பம், போக்குவரத்து ஆகிய துறைகளுக்கான முக்கியப் பொறுப்புகளுக்கு நடத்தப்பட்ட நேர்காணலில் 1,185 பேர் கலந்து கொண்டதாகவும் அவர்களுள் 56 பேர் இந்தியர்கள் எனவும் தெரிவித்தார்.
கலந்துக் கொண்ட 56 இந்தியர்களுள் நியமனம் செய்யப்பட்டவர்களின் அடிப்படையில் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பு 8.5 விழுக்காடு என்றார் அவர்.
ஆணையம் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆணைய உருமாற்றுத் திட்டத்தின் ஓர் அம்சமாக நியமனக் கடிதங்கள் நேரடியாகவே வழங்கப்படுகிறது.