பெய்ஜிங், மே 21 – சீனாவில் வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகளை விதிக்க சீன விமான போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, சுமார் 156 வெளிநாட்டு விமான நிறுவனங்கள், சீனாவின் புதிய சோதனைகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சீன அரசு, தங்கள் நாட்டில் பெருகி வரும் விமான விபத்துகளை தடுக்கவும், பயணிகளின் பாதுகாப்பிற்காகவும் புதிய விதிமுறைகளை விதிக்க முடிவு செய்துள்ளது. அந்த விதிகளின் படி, ஒவ்வொரு வெளிநாட்டு விமான நிறுவனங்களும் 34 அடிப்படை நிபந்தனைகளின் படி சோதனை செய்யப்படும். இதற்கு முன் ஏற்பட்ட விமான விபத்துகள், பயணிகளுக்கான சேவைகள், விமான நிறுவனங்களிடம் பயணிகள் முன் வைக்கும் பாதுகாப்புக் குறைபாடுகள் போன்றவை அந்த நிபந்தனைகளில் அடங்கும்.
இந்த சோதனைகளின் முடிவில், விமானங்களின் மதிப்பெண்கள் கணக்கிடப்படும். அவற்றில் எந்தெந்த விமான நிறுவனங்கள் தேறவில்லையோ அவை சீனாவில் இருந்து வெளியேற்றப்படும் என்று கூறப்படுகிறது.
இதனை சீன விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு அறிவித்துள்ளது. எனினும், இது தொடர்பான கேள்விகளுக்கு அந்த அமைப்பு பதில் அளிக்கவில்லை.
இதுபற்றி பிரபல விமான நிறுவனங்களான லுஃப்தான்சா மற்றும் கொரியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்களும் பதில் அளிக்க மறுத்துவிட்டன. எனினும், இந்த விதிமுறைகள் ஏற்கனவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் கடைபிடிக்கப்படுவதாக சீனா தெரிவித்துள்ளது.
இந்த புதிய விதிமுறைகளால் பலவேறு வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவில் தங்கள் வர்த்தகத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.