Home கருத்தாய்வு மலேசிய அமைச்சரவை மார்ச் 8க்குப் பிறகு சட்டபூர்வமாக செயல்பட முடியுமா? – வரலாற்றில் இதுவரை இல்லாத...

மலேசிய அமைச்சரவை மார்ச் 8க்குப் பிறகு சட்டபூர்வமாக செயல்பட முடியுமா? – வரலாற்றில் இதுவரை இல்லாத சட்டசிக்கல்!

712
0
SHARE
Ad

மார்ச் 11 – மலேசிய அரசியல் வரலாற்றில் இதுவரை நேராத ஒரு நெருக்கடியான சட்டசிக்கல் காலகட்டம் தற்போது நிகழ்ந்துள்ளது. நாட்டின் 12வது பொதுத் தேர்தல் கடந்த 2008ஆம் மார்ச் 8ஆம் தேதி நடந்து முடிந்து இந்த ஆண்டு மார்ச் 8ஆம் தேதியும் கடந்து விட்டதால், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஐந்தாண்டு தவணைக் காலமும் இயல்பாகவே முடிந்து விட்டது.

இதனால் தவணைக் காலம் முடிந்துவிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாகவும், துணை அமைச்சர்களாகவும் செயல்பட முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அமைச்சர்களும் துணை அமைச்சர்களும் அரசாங்க சார்பான அறிக்கைகள் விடுவதும், அரசாங்க கார்களில் பவனி வருவதும், அரசாங்க அலுவலகங்களைப் பயன்படுத்துவதும், அரசாங்க மான்யங்களை வழங்குவது தொடர்வதும் இனியும் நியாயமானதுதானா-சட்டபூர்வமானதுதானா என்ற ஐயமும் எழுந்துள்ளது.

#TamilSchoolmychoice

இதுவரையில் அரசாங்கத் தரப்பிலும், அரசாங்க தலைமை வழக்கறிஞர் சார்பிலும் இது குறித்து எந்தவித விளக்கமோ அறிவிப்போ இல்லை.

முரண்பாடான சட்ட கருத்துக்கள்

ஆனால் இந்த தவணைக்கான மலேசிய நாடாளுமன்றம் கடந்த 2012ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதிதான் முதன் முதலாக கூடியது என்பதால்,மலேசிய சட்டப்படி மலேசிய நாடாளுமன்றத்தின் தவணைக் காலம் எதிர்வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வரை நீடிக்கும்.

ஆனால், எப்போதுமே நாடாளுமன்றத்தின் ஐந்தாண்டு கால தவணை முடியும் முன்னரே பொதுத்தேர்தல் நடத்தப்பட்டு வந்திருப்பதால் இந்த சட்டப் பிரச்சனை நமக்கு இதுவரை எழுந்ததில்லை.

ஏப்ரல் 28 ஆம் தேதி வரை நாடாளுமன்றம் செயல்படலாம் என்ற சட்டவிதியை சுட்டிக் காட்டினால், அதே சமயம், ஐந்தாண்டுகளுக்குப் பின்னரும் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட முடியுமா என்ற சட்ட சிக்கலான கேள்வியும் இயல்பாகவே எழுகின்றது.

அவ்வாறு ஒருவர் ஐந்தாண்டுகளுக்கு மேலாக நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட முடியாது என்றால் அவர் அமைச்சராகவோ, துணையமைச்சராகவோ செயல்படவும் முடியாது.

எனவே, இப்போதுள்ள அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் துணையமைச்சர்கள் அனைவரும் இடைக்கால அல்லது காபந்து அரசாங்கமாகத்தான் செயல்பட முடியும் என்ற அறிவிப்பாவது அரசாங்கத் தலைமை வழக்கறிஞரால் வெளியிடப்படவேண்டும்.

அப்படியும் செய்யப்படவில்லை. அரசாங்கத்தின் அனைத்து தரப்பினரும் இது குறித்து ஏதும் பேசாமல் மௌனம் காத்து வருவது ஒரு முறையான தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்க நிர்வாகத்திற்கும் அழகல்ல.

Lim-Kit-Siang-Slider“பிரதமர் நஜிப்பின் பிரதமர் தவணை முடிந்தது” – லிம் கிட் சியாங் கூறுகின்றார்

இதுகுறித்து மக்கள் கூட்டணியின் கூட்டமொன்றில் உரையாற்றியபோது கருத்துரைத்த ஜ.செ.க.தலைவர் லிம் கிட் சியாங் “மார்ச் 9 என்பது மலேசிய சரித்திரத்தில் ஒரு முக்கியமான நாள். இன்று முதல் நஜிப் மலேசியாவின் சட்டபூர்வமான பிரதமர் அல்ல. அவருக்கு தரப்பட்ட ஐந்தாண்டு கால அதிகாரம் முடிந்துவிட்டது. அதிகாரம் இல்லாத பிரதமராக அவர் தொடர்ந்து நீடிக்கின்றார்” என்று கூறியுள்ளார்.

எனவே, மார்ச் 9ஆம் தேதிக்குப் பிறகு அமைச்சரவைக் கூட்டங்கள் நடத்த முடியுமா அப்படியே நடத்தினாலும் அந்தக் கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகள் செல்லுபடியாகுமா என்ற மற்றொரு சட்ட சிக்கலும் இயல்பாகவே எழுகின்றது.

அமைச்சரவை முடிவு ஏதாவது எடுத்தால், அந்த முடிவு செல்லாது என்று சம்பந்தப்பட்ட தரப்புகள் நீதிமன்றம் சென்றால் அந்த வழக்கின் நீதிமன்ற முடிவு எவ்வாறிருக்கும் என்பதும் சுவாரசியமான ஒன்றாகும்.

பதவிக்காலம் முடிந்தவுடன் எடுக்கப்பட்ட முடிவுகள் எதுவும் செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவும் வாய்ப்புக்கள் நிறைய உள்ளன.

அமைச்சர் ஒருவர் தனது அமைச்சின் கீழ் செய்யும் முடிவு கூட இதே சட்டவிதிப்படி பார்த்தால் செல்லாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த குழப்பமான நிலைமை – சட்ட சிக்கல்கள் நிறைந்த நிலைமை – இன்னும் எத்தனை நாட்களுக்குத் தொடரும் என்பதுதான் நம்முன் இப்போது எழுகின்ற கேள்வி!