காம்பார்- தற்போது சட்டங்கள் தலைகீழாக மாற்றப்படுவதாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் கூறியுள்ளார்.
ஜனநாயகம் என்பது பேச்சுரிமை என்பதையும் விட மேலானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“விசாரணை நடத்துபவர்களே கைதாவதும், விசாரிக்கப்படுபவர்களே உத்தரவுகளைப் பிறப்பிப்பதும் சரியல்ல. ஒரு விஷயத்தில் விசாரணை தேவைப்படுகிறது என்கிறபோது, எதற்காக தடுக்கிறீர்கள்?” என்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கேள்வி எழுப்பினார்.
1எம்டிபி குறித்த விசாரணையை சுட்டிக்காட்டியே அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.
தேசிய முன்னணியின் அமைச்சுப் பொறுப்பு வகிக்காத நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பின் (Barisan Nasional Backbenchers Club) தலைவர் டான்ஸ்ரீ ஷாரிர் சமாட், தன்னைப் பற்றி தெரிவித்துள்ள கருத்து குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த மகாதீர், “அவரை என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்க்கச் சொல்லுங்கள்” என்றார்.
“மக்கள் எத்தகைய கருத்துகளை சொல்லியிருக்கிறார்கள் என்பதை அவர் (ஷாரிர்) படிக்க வேண்டும். மாறாக தங்களது சொந்த நாளேட்டை படிக்கக் கூடாது. ஏனெனில் அரசாங்கத்தை புகழும்படி அந்த நாளேட்டிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மக்கள் என்ன சொல்ல வேண்டும் என்பதை அவர்களுக்கு நான் சொல்லவில்லை. எனவே அவர் (ஷாரிர்) மக்களின் கருத்துக்களை படிக்க வேண்டும்” என்றார் மகாதீர்.