அலோர்ஸ்டார் – தனக்கு முன்பு மந்திரி பெசார்களாக பதவி வகித்தவர்களைப் போல், அப்பதவியில் நியமிக்கப்படுவதில் முக்ரிஸ் மகாதீர் எந்தவித தடைகளையும் எதிர்கொள்ளவில்லை என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.
“2013 பொதுத் தேர்தலுக்கு முன்பே எடுக்கப்பட்ட முடிவின் படி முக்ரிஸ் மந்திரிபெசாராக நியமிக்கப்பட்டார். எனது இந்த முடிவால் மாநில அம்னோ தலைவர் அகமட் பாஷா கோபப்படவோ அல்லது, தான் ஓரங்கட்டப்பட்டதாக கருதவோ இல்லை. ஏனெனில் இம்முடிவை எடுக்க எனக்கு தனிப்பட்ட அதிகாரம் உள்ளது என்பது அவருக்கு தெரியும்” என்றார் நஜிப்.
கட்சித் தலைவரையும் கட்சியையும் நாம் தற்காக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், முக்ரிஸ் சுமுகமான முறையில் மந்திரி பெசாராக அகமட் பாஷா அனுமதித்தார் என்றார்.
அதற்கு முன்னதாக பேசிய அகமட் பாஷா, கெடா முன்னாள் மந்திரி பெசார் சனுசி ஜுனிட் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டது குறித்து விவரித்தார்.
“அப்போதைய பிரதமர் மகாதீர், மாநில அம்னோ தலைவர்களை ஒவ்வொருவராக அழைத்து இந்த நியமனம் குறித்து விவாதித்தார். நான் அவரிடம் அமைதியான முறையில், சனுசியின் நியமனத்தில் உடன்பாடு இல்லை என்றேன். மாறாக மாநில அம்னோ தலைவர் மரோஃப் மந்திரி பெசாராக நீடிப்பதை ஆதரிப்பதாக கூறினேன். ஏனெனில் நான் என் தலைவரை ஆதரித்தேன். நாம் கட்சித் தலைவர்களை எப்போதுமே ஆதரிக்க வேண்டும்,” என்றார் அகமட் பாஷா.
அம்னோவின் மூலமாக மகாதீரும் அனுகூலம் பெற்றார், அவரது மகன் என்ற காரணத்தினால்தான் முக்ரிசும் மற்றவர்களைப் போல் அல்லாது, சுலபமாக, சுமுகமாக கெடா மந்திரிபெசாராக ஆக முடிந்தது என்பதை எடுத்துக் காட்டுவிதமாக நஜிப்பின் இந்த உரை அமைந்திருக்கின்றது.