புதுடெல்லி,மார்ச்.12- புதுடெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளி ராம் சிங்கின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவன் தூக்கில் தொங்கியதால் அவன் உயிர் பிரிந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில், கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில், 6 பேர் கொண்ட கும்பலால் மருத்துவ மாணவி ஒருவர் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட பேருந்து ஓட்டுனர் நேற்று அதிகாலை திகார் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பலத்த பாதுகாப்பு நிறைந்த திகார் சிறையில் எப்படி ஒரு குற்றவாளி தற்கொலை செய்துகொள்ள முடியும் போன்ற கேள்விகள் இவரது மரணம் குறித்து சந்தேகத்தை எழுப்பியது.
இந்நிலையில், இன்று எய்ம்ஸ் மருத்துவமனையில் நடைபெற்ற ராம் சிங்கின் பிரேத பரிசோதனை அறிக்கையில், ராம் சிங் தூக்கில் தொங்கியதால் அவன் உயிர் பிரிந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் பிரேத பரிசோதனை அறிக்கையில், ராம் சிங் தற்கொலை செய்ததால் இறந்தாரா இல்லை யாரவது அவனை தூக்கில் தொங்கவிட்டிருப்பார்களா போன்ற கேள்விகளுக்கு பதில் இல்லை.
முதற்கட்ட பிரேத பரிசோதனைக்கு பின் ராம் சிங்கின் உடல் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், ராம் சிங்கின் மரணம் குறித்து கூறிய வழக்கறிஞர் மனோஜ் தோமர், ராம் சிங்கின் உடலை தான் பார்த்தபோது அதில் காயங்கள் இருந்ததாகவும், அவரது வலது தோல் எலும்பு காயமடைந்தாகவும் கூறினார். ராம் சிங் கண்டிப்பாக தற்கொலை செய்திருக்க முடியாது என உறுதியாக தெரிவித்த அவர் சாட்சியங்களை அழித்து இந்த பிரேத பரிசோதனை அறிக்கை வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்திருக்கிறார்.