கோலாலம்பூர், மார்ச் 14 – தங்களின் வருமானத்தை உயர்த்திக் கொள்ள ஆர்வமும் முயற்சியும் கொண்ட சிறு வர்த்தகர்களுக்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நிறைய வாய்ப்புக்கள் வழங்குவதாக தொலைத் தொடர்பு தொழிலில் ஈடுப்பட்டுள்ள ஓர் உள்நாட்டு வணிகர் தெரிவித்துள்ளார்.
ஹூசேன் ரிசோர்சஸ் (Hussein Resources Sdn Bhd) என்ற நிறுவனத்தின் தொழில் நுட்ப இயக்குநரான அட்னான் எஸ்.ஹூசேன், பல பில்லியன் மதிப்புடைய இந்த தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து அவர்களுடைய வாடிக்கையாளர்களுடைய கட்டணங்களை வசூலித்தல், தகவல்களைப் பரப்புவது போன்ற துணைத் தொழில்களில் ஈடுபடுவதன் மூலம் சுலபமாகவும் பாதுகாப்பான முறையிலும் தங்களின் வர்த்தகத்தை சிறுதொழில் வணிகர்கள் பெருக்கிக் கொள்ள முடியும் என்று கூறினார்.
ஒரு சிறிய முதலீட்டை செய்வதன் மூலம் சிறு வணிகர்கள் இந்த பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டு, இந்த நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுடைய கட்டணங்களை வசூலித்துத் தருவதன் மூலம் ஒரு நிரந்தரமான, அதே சமயம் தொடர்ந்த வருமானத்தை ஈட்ட முடியும்.
“பொதுவாக, வசூலிக்கும் கட்டணத்திலிருந்து 2 சதவீத பணத்தை கழிவுத் தொகையாக, தரகுக் கட்டணமாக (commission) சிறு வர்த்தகர்கள் பெற முடியும்” என்று அட்னான் கூறினார்.
அட்னானின் நிறுவனம் இத்தகைய இடைத்தரகு நிறுவனங்களை-பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து ஆராய்ந்து குறிப்பிட்ட பகுதிகளுக்கென நியமிக்கும் பொறுப்பை மேற்கொண்டுள்ளது.
“உதாரணமாக 10,000 ரிங்கிட் மதிப்புடைய கட்டணத்தை வசூலித்துத் தந்தால் ஒருவர் 200 ரிங்கிட்டை இடைத் தரகாக பெற முடியும். இதன்மூலம் அவர்களின் வருமானம் உயரும். அதோடு அவர்கள் வைத்திருக்கும் கடைகள் போன்றவற்றின் வாடகை, மின்சாரக் கட்டணங்கள் போன்ற செலவினங்களையும் அவர்களால் ஈடுகட்ட முடியும்” என அட்னான் பெர்னாமாவிடம் கூறினார்.
மலேசியாவில் தற்போது ஏறத்தாழ 35 மில்லியன் கைத் தொலைபேசி பயன்பாட்டாளர்கள் இருப்பதால், இதுபோன்ற இடைத்தரகு பிரதிநிதிகள் தொழிலைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் தங்களின் வருமானத்தை சிறு வணிகர்கள் உயர்த்திக் கொள்ள முடியும்.
இந்த துறையில் ஈடுபட ஆர்வமுள்ளவர்கள் ஹூசேன் ரிசோர்சஸ் என்ற நிறுவனத்துடன், (Hussein Resources Sdn Bhd) hr6781014@g.mail.com என்ற இணைய முகவரியிலும் அல்லது 012-2152556 என்ற கைத்தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு மேல்விவரங்கள் பெறலாம்.