Home Featured நாடு மஇகாவுக்கு கிடைக்கப் போவது சபாநாயகர் பதவியா? இரண்டாவது அமைச்சர் பதவியா?

மஇகாவுக்கு கிடைக்கப் போவது சபாநாயகர் பதவியா? இரண்டாவது அமைச்சர் பதவியா?

636
0
SHARE
Ad

கோலாலம்பூர் – எதிர்வரும் ஜூலை மாதத்தில் நாடாளுமன்ற மேலவைத் தலைவர் (சபாநாயகர்) பதவி காலியாகவிருப்பதைத் தொடர்ந்து, அந்தப் பதவி சுழல் முறையில் மீண்டும் மஇகாவுக்கே கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புகள் வலுத்து வருகின்றன.

இதற்கு முன்னர் 1992ஆம் ஆண்டில் மஇகா சார்பாக டான்ஸ்ரீ டத்தோ ஜி.வடிவேலு (படம்) மூன்றாண்டுகள் கொண்ட ஒரு தவணைக்கு நாடாளுமன்ற மேலவைத் தலைவர் பதவியை வகித்தார். அதன் பின்னர் சுழல் முறையில் அம்னோ, மசீச கட்சிகள் வசம் இந்தப் பதவி இருந்து வந்தது.

vadivelu-tan-sriஅமைச்சரா? சபாநாயகரா?

#TamilSchoolmychoice

இதற்கிடையில் இந்த நாடாளுமன்ற மேலவைத் தலைவர் பதவி மஇகாவுக்கு வழங்கப்படுமா அல்லது இதுவரை வழங்கப்படாமல் இருக்கும் இரண்டாவது அமைச்சர் பதவி மஇகாவுக்கு வழங்கப்படுமா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

2010ஆம் ஆண்டில் மஇகாவின் தேசியத் தலைவராக டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் பதவியேற்றபோது அப்போதைய தேசிய துணைத் தலைவரான டாக்டர் சுப்ரமணியம் மட்டும்தான் மஇகாவின் ஒரே முழு அமைச்சராகத் திகழ்ந்தார்.

ஆனால், பின்னர், 2011இல் இந்திய சமுதாயத்தின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வண்ணம் பிரதமர் நஜிப் மஇகாவுக்கு இரண்டு அமைச்சர் பொறுப்புகளை வழங்க, அதன் வழி பழனிவேலுவும் அமைச்சரானார்.

ஆனாலும், கடந்த ஆண்டு, மஇகாவில் ஏற்பட்ட தலைமைத்துவ நெருக்கடிப் போராட்டங்கள், சங்கப் பதிவகத்திற்கு எதிராக பழனிவேல் தொடுத்த வழக்கு போன்ற பல விவகாரங்களின் விளைவுகளால், மஇகாவின் உறுப்பினர் பதவியை இழந்த பழனிவேலுவை அமைச்சர் பொறுப்பிலிருந்தும் நஜிப் நீக்கினார்.

Palanivelஆனால், அதற்குப் பின்னர் மஇகாவுக்கென இருந்த இரண்டு அமைச்சர்கள் பொறுப்பு மீண்டும் ஒரே அமைச்சராக சுருங்கிப் போனது. மஇகா நெருக்கடிகள் தீர்ந்தவுடன் மீண்டும் இரண்டாவது அமைச்சர் பொறுப்பு மஇகாவுக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் இந்திய சமுதாயத்தில் நிலவி வந்தது.

கடந்த நவம்பரில் மஇகா தேர்தல்கள் நடைபெற்று முடிந்ததும், மஇகாவுக்கான இரண்டாவது அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்ற ஆரூடங்கள் மீண்டும் தலைதூக்கின.

அடுத்த நாடாளுமன்ற மேலவைத் தலைவர் பதவி மஇகாவுக்கு ஒதுக்கப்படுமா?

இந்த சூழ்நிலையில்தான், தற்போது நாடாளுமன்ற மேலவைத் தலைவர் பதவி மஇகாவுக்கு கிடைக்கும் என்ற தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அதே வேளையில், மஇகாவின் இரண்டாவது அமைச்சர் பதவியும் கிடைக்குமா – அப்படி கிடைத்தால் யார் அந்தப் பொறுப்பை ஏற்பார்கள் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

sk-devamany-jan17-300x202கட்சியின் துணைத் தலைவர் என்ற முறையில் அடுத்த அரசாங்கப் பதவி டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணிக்கே கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில், அவரோ, தற்போது ஒரு இக்கட்டான சிந்தனையில் சிக்கிக் கொண்டிருக்கின்றார் என அவருக்கு நெருக்கமான மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதல் கட்டமாக மஇகாவுக்கென செனட்டர் பதவி ஒதுக்கப்பட வேண்டும். இன்றைய நிலையில் மஇகாவுக்கான அடுத்த செனட்டர் பதவி அடுத்த ஆண்டுதான் காலியாகவிருக்கின்றது.

மஇகா விட்டுக் கொடுத்த சட்டமன்றத்திற்கான செனட்டர் பதவி இப்போதாவது கிடைக்குமா?

பேராக் மாநிலத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது, மஇகா பெஹ்ராங் சட்டமன்றத் தொகுதியை அம்னோவுக்கு விட்டுக் கொடுக்க, அதற்குப் பதிலாக மஇகாவுக்கு ஒரு செனட்டர் பதவி வழங்கப்படும் என தேசிய முன்னணி சார்பில் அறிவிக்கப்பட்டது. அந்த செனட்டர் பதவி இன்னும் மஇகாவுக்கு வழங்கப்படவில்லை என்றும், அந்த செனட்டர் பதவி மஇகாவுக்கு வழங்கப்பட்டால், கட்சியின் துணைத் தலைவர் என்ற முறையில் தேவமணிக்கே அது கிடைக்கும் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

MIC logoஆனால், எதிர்வரும் ஜூலைக்குள் மஇகாவுக்கு புதிய செனட்டர் பதவியை நஜிப் ஒதுக்காவிட்டால் – அதே வேளையில் நாடாளுமன்ற மேலவைத் தலைவர் பதவி மஇகாவுக்குத்தான் என்ற முடிவையும் தேசிய முன்னணி தலைமைத்துவம் எடுத்தால் –

நடப்பு மஇகா செனட்டர்களில் ஒருவருக்குத்தான் அந்தப் பதவி கிடைக்கும். இன்றைய சூழ்நிலையில் செனட்டர் விக்னேஸ்வரன், செனட்டர் ஜஸ்பால் சிங் ஆகிய இருவரில் ஒருவர்தான் அந்தப் பதவிக்கு ஏற்புடையவர்களாக கருதப்படுகின்றனர்.

ஆனல், எதிர்பார்த்தபடி, புதிய செனட்டர் பதவி மஇகாவுக்கு கிடைத்து விட்டால், அதுவும் தேவமணிக்கே வழங்கப்பட்டு விட்டால் –

அதனைக் கொண்டு இரண்டாவது அமைச்சர் பதவிக்காக காத்திருப்பதா –அல்லது ஜூலையில் காலியாகப் போகும் நாடாளுமன்ற மேலவைத் தலைவர் பதவியை ஏற்றுக் கொள்வதா என்பது போன்ற எண்ணச் சிக்கலில் தேவமணி சிக்கியிருக்கின்றார் என்கின்றனர் அவருக்கு நெருக்கமான அரசியல் வட்டாரங்கள்.

இறுதியில் நஜிப் என்ன முடிவு எடுக்கப் போகின்றார்? என்பதை வைத்தும் –

வாக்குறுதி அளிக்கப்பட்டபடி புதிய செனட்டர் பதவி ஒன்று மஇகாவுக்கு வழங்கப்படுமா?

மஇகாவுக்கு நாடாளுமன்ற மேலவைத் தலைவர் பதவி மட்டும்தான் வழங்கப்படுமா? – அல்லது

இரண்டாவது அமைச்சர் பதவியும் வழங்கப்படுமா?

என்பது போன்ற கேள்விகளுக்கு கிடைக்கப் போகும் பதில்களை வைத்தே, மஇகாவின் தேசியத் துணைத் தலைவர் தேவமணியின் அடுத்த கட்ட அரசியல் பயணமும்,

மேற்கண்ட பதவிகளுக்காக எதிர்பார்த்துக் காத்திருக்கும் மற்றும் சிலரின் அரசியல் தலைவிதியும் தெரிய வரும்.

-செல்லியல் தொகுப்பு