கோலாலம்பூர் – பொழுதுபோக்கு மையங்களில் அத்துமீறி நுழைந்தது மற்றும் கொள்ளை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிவப்புச் சட்டை அமைப்பின் தலைவர் டத்தோஸ்ரீ ஜமால் யுனோஸ் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
அவருடன் அவரது ஆதரவாளர்கள் 9 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இன்று அம்பாங்கில் உள்ள ஜமாலின் வீட்டை முற்றுகையிட்ட காவல்துறையினர், பிற்பகல் 3 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் இருந்து வெளியே வந்த அவரைக் கைது செய்தனர்.
பின்னர், காவல்துறை வாகனத்தில் அம்பாங் காவல்நிலையத்திற்கு அவரை அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில் சிலாங்கூர் குற்றப்புலனாய்வுத் துறை தலைவர் ஃபாட்சில் அகமட் கூறுகையில், கடந்த டிசம்பர் 29-ம் தேதி, ஜமாலும் அவரது ஆதரவாளர்களும், தாமான் கொசாசில் உள்ள பொழுதுபோக்கு மையம் ஒன்றில் சூதாட்டம் நடப்பதாகக் கூறி அத்துமீறி உள்ளே நுழைந்தது தான் கைது செய்யப்பட்டதற்குக் காரணம் என்று தெரிவித்தார்.
மேலும், அந்த பொழுதுபோக்கு மையங்கள் அம்பாங் ஜெயா மாநகர சபையில் முறையான அனுமதி பெற்று தான் நடத்தப்பட்டு வருவதாகக் கூறிய ஃபாட்சில், ஜமாலும், அவரது ஆதரவாளர்களும் அத்துமீறி அங்கு நுழைந்த அன்று, அங்கிருந்தவர்களின் பொருட்கள் பல காணாமல் போனதாகப் புகார்கள் எழுந்துள்ளதாகவும் ஃபாட்சில் தெரிவித்தார்.
அதனை விசாரணை செய்யவே அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் ஃபாட்சில் ஊடகங்களிடம் தெரிவித்தார்.