கோலாலம்பூர் – அனைத்துலக மகளிர் தினமான இன்று மார்ச் 8-ம் தேதி இரவு 9 மணியளவில், அஸ்ட்ரோ வானவில்லில், ‘சந்தியா‘ என்ற தொலைக்காட்சிப் படம் ஒளிபரப்பாகவிருக்கிறது. சினிபிரேம் தயாரிப்பில், மலேசியாவின் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவரான திவாகர் சுப்பையா இத்திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.
போலீஸ் பணியில் சாதிக்கத் துடிக்கும் பெண்ணான சந்தியா தனது குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி, தனது லட்சியத் துறையில் கால் பதித்து, கொலைச் சம்பவம் ஒன்றை எப்படி துப்பறிகிறார்? என்பதை வித்தியாசமான கோணத்தில் சொல்லியிருக்கிறது இப்படம்.
சந்தியா கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை ரெனீத்தாவுடன் செல்லியலின் பிரத்யேக நேர்காணல் இதோ:-
செல்லியல்: வணக்கம் ரெனீத்தா.. போலீஸ் கதாப்பாத்திரத்தில் அச்சு அசலாகப் பொருந்தியிருக்கிறீர்கள்.. இது நீங்கள் ஏற்கும் முதல் போலீஸ் கதாப்பாத்திரமா?
ரெனீத்தா: இல்லை இதற்கு முன்பு 2011, 2012-ம் ஆண்டில் சி.கே இயக்கத்தில் ‘மெட்ரோ ஸ்குவாட்‘ என்ற தொலைக்காட்சி நாடகத்தில் போலீஸ் கதாப்பாத்திரம் ஏற்றிருந்தேன். ஆனால், ‘சந்தியா ஏஎஸ்பி‘ என்ற போலீஸ் உயர் அதிகாரியாக ஆக கதாப்பாத்திரம் ஏற்றிருப்பது இது தான் முதல் முறை.
செல்லியல்: இந்தக் கதாப்பாத்திரத்திற்கு யாரை ரோல் மாடலாக எடுத்துக் கொண்டு நடித்தீர்கள்?
ரெனீத்தா: நான் யாரையும் ரோல் மாடலாக எடுத்துக் கொள்ளவில்லை. அதற்குப் பதிலாக ஆங்கிலப் படங்களில் வரும் பெண் போலீஸ் அதிகாரிகள் பலரின் உடல்மொழிகளை நன்கு கவனித்தேன். அது நடிக்கும் போது மிகவும் உதவியாக இருந்தது.
செல்லியல்: போலீஸ் கதாப்பாத்திரத்தில் உள்ள சவால்கள் என்ன?
ரெனீத்தா: எனக்கு இதுவரை வழங்கப்பட்ட கதாப்பாத்திரங்கள் அனைத்துமே மிகவும் மென்மையாக, காதலுடன் கூடியதாக இருந்தது. அதில் எனது உடல்மொழிகள் அனைத்தும் பெண்மைக்கே உரிய பாணியில் இருக்கும். ஆனால் சந்தியாவைப் பொறுத்தவரையில், கொஞ்சம் முரட்டுத்தனமான பெண்ணாக, ‘டாம் பாய்‘ போல் நடிக்க வேண்டியதாக இருந்தது. அந்த உடல்மொழிக்கு மாறுவது தான் சற்று கடினமாக இருந்தது.
செல்லியல்: இயக்குநர் திவாகர் சுப்பையாவுடன் பணியாற்றிய அனுபவம் எப்படி இருந்தது?
ரெனீத்தா: திவாகர் சாரைப் பொறுத்தவரையில் இந்தத் துறையில் பல வருடங்கள் அனுபவம் வாய்ந்தவர். அவர் எந்த அளவிற்கு கலைத்துறையில் ஈடுபாட்டோடு இருக்கிறார் என்பதை இப்படத்தில் பணியாற்றிய போது பார்க்க முடிந்தது. “இப்படி பண்ணுமா”. “அப்படி பண்ணுமா” என்று நடித்தே காட்டுவார். அவருடன் பணியாற்றியது புதிய அனுபவமாக இருந்தது.என்னுடன் பணியாற்றியவர்களில் நிறைய பேர் இந்தத் துறைக்கு மிகவும் புதியவர்கள். என்றாலும் அனைவருமே மிகவும் ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார்கள்.
செல்லியல்: இப்படம் எந்தெந்த இடங்களில் படமாக்கப்பட்டது?
ரெனீத்தா: இது முற்றிலும் போர்ட் டிக்சன் பகுதியை மையமாக வைத்துப் படமாக்கப்பட்டது. இதுவரை தொலைக்காட்சியில் மக்கள் பார்க்காத இடங்களாக இருக்க வேண்டும் என்று தேடிப்பிடித்து படமாக்கியிருக்கிறோம்.
செல்லியல்: சந்தியா கதாப்பாத்திரம் பெண்களுக்கு என்ன சொல்ல வருகிறது?
ரெனீத்தா: நம்ம நாட்டுல இந்தியப் பெண்கள், மருத்துவராக, வழக்கறிஞராக, தொழிலதிபராக பல துறைகளில் முன்னேறியிருக்கிறார்கள். ஆனாலும் போலீஸ் துறையைப் பொறுத்தவரையில், உயர் பதவிகளில் இருப்பவர்கள் மிகவும் குறைவு. போலீஸ் வேலையில் பெண்கள் சேர குடும்பத்தினரே ஊக்கமளிப்பது கிடையாது. அதற்கு நிறைய தடைகள் சொல்லுவார்கள். இப்படத்தில் கூட, சந்தியாவை போலீஸ் வேலையில் சேர விடாமல் அவரது குடும்பத்தினர் தடுப்பார்கள். ஆனால் அதையும் மீறி போலீஸ் வேலையில் சேர்ந்து சந்தியா சாதனை செய்வாள். அது போன்ற மனநிலை தான் நமக்குத் தேவை.
செல்லியல்: மகளிர் தினமான இன்று பெண்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
ரெனீத்தா: ஏதாவது கனவு ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். சிறுதொழில் செய்தாலும் கூட, அதனை அனைத்துலக அளவிற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று பெரிய அளவில் எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். இப்போது நாம் 2017-ம் ஆண்டில் இருக்கிறோம். நமது கலாச்சாரத்தில் பெண்களுக்கு இருக்கும் பல முட்டுக்கட்டைகளையும், மூடநம்பிக்கைகளையும் தகர்த்துவிட்டு சாதிக்க வேண்டும். அதனை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
செல்லியல்: அது சரி.. உங்க பேஸ்புக்ல “My Hair Is Wild,My Spirit is Free,I can’t Be Tamed I AM RENEETHA” என்று உங்களை அறிமுகம் செய்திருக்கிறீர்களே? அந்த வாசகம் என்னை மிகவும் கவர்ந்தது.. அது பற்றி விளக்கமாகச் சொல்ல முடியுமா?
ரெனீத்தா: (சிரிக்கிறார்) என்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது. எனது பாதையை நான் தான் தீர்மானிப்பேன். நான் எதையும் ஆராய்ந்து செயல்பட விரும்புவேன். அதில் எனது பங்களிப்பை சிறப்பாக செய்வேன். அதேபோல் எனது ஆன்மா சுதந்திரத்தை விரும்புவது. அதனை யாரும் அடக்க முடியாது. அது தான் ரெனீத்தா இது தான் அதற்கான விளக்கம்.
அருமையான விளக்கம் ரெனீத்தா. மலேசியாவில் நடிப்புத் துறையில் தனக்கென தனி இடத்தைப் பிடித்து வரும் ரெனீத்தா, அண்மையில், கார்த்திக் ஷாமலன் இயக்கத்தில் “மாங்கல்யம் தந்துனானேனா” என்ற தொலைக்காட்சிப் படத்தில் அபிநயா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இப்போது சந்தியாவாக உருமாறியிருக்கும் ரெனீத்தா.. நிச்சயம்.. வியக்க வைப்பார் என்பதில் சந்தேகமில்லை.. மறவாமல் இன்று இரவு 9 மணியளவில் அஸ்ட்ரோ வானவில்லில் ‘சந்தியாவைக்‘ காணத்தவறாதீர்கள்.
– ஃபீனிக்ஸ்தாசன்