கோலாலம்பூர் – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை அவமதிக்கும் படியான கருத்தை, சேனல் 5 அலைவரிசையில் ‘ஓகே சாப்!” என்ற நிகழ்ச்சியில் கூறிய சிங்கப்பூரைச் சேர்ந்த நகைச்சுவை நடிகர் நஜிப் அலி, தனது கருத்திற்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டாலும் கூட, அஸ்ட்ரோ நிகழ்ச்சி ஒன்றின் நடுவர் பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டிருக்கிறார்.
‘மகாராஜா லாவாக் மெகா’ தொடரின் நடுவர் பொறுப்பிலிருந்து நஜிப் நீக்கப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன. நாளை வெள்ளிக்கிழமை, அஸ்ட்ரோ வர்ணாவில் அந்த நிகழ்ச்சி ஒளியேறவிருந்தது.
இந்நிலையில், கடந்த வாரம் புதன்கிழமை, சிங்கப்பூரின் சேனல் 5 அலைவரிசையில் ஒளியேறிய ‘ஓகே சாப்’ நிகழ்ச்சியில் நஜிப் அலி கூறிய அந்தக் கருத்திற்காக சிங்கப்பூரின் மீடியாகார்ப் நிறுவனம், நஜிப் அலியுடன் கூட்டாக இணைந்து மன்னிப்புக் கேட்டது.
மேலும், அந்த நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பில், அந்தக் கருத்து இடம்பெறாது என்றும் உறுதியளித்தது.
“நான் எவ்வளவு உணர்வற்றனாகவும், இரக்கமற்றவனாகவும் இருந்திருக்கிறேன்” என்று நஜிப் அலி தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார்.
இதனிடையே, டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு எதிராக அவமதிக்கும் வகையிலும், அவதூறு கூறும் வகையிலும் இடம்பெற்ற அக்கருத்தை மலேசிய அரசு மிகவும் கடுமையாக எடுத்துக் கொள்கிறது என்றும், அது போன்ற தவறுகள் இனி நடக்கக்கூடாது என்றும் விஸ்மா புத்ரா சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.