Home கலை உலகம் திருப்பதி கோவிலில் நடிகர் லாரன்சின் தாயாரை பிடித்து தள்ளியதால் பரபரப்பு

திருப்பதி கோவிலில் நடிகர் லாரன்சின் தாயாரை பிடித்து தள்ளியதால் பரபரப்பு

537
0
SHARE
Ad

ragava

திருமலை, ஏப்.2-  நடன இயக்குனரும், நடிகருமான லாரன்ஸ் நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன் திருப்பதி வந்தார்.

திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்தார். நேற்று அதிகாலை 6.30 மணியளவில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக கிரேடு-2 வி.ஐ.பி. தரிசனத்தில் சென்று குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

#TamilSchoolmychoice

சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தபோது, அங்கிருந்த கோவில் ஊழியர்கள் லாரன்சின் தாயார், மனைவி மற்றும் குழந்தையை பிடித்து தள்ளி விட்டனர். அதை நேரில் பார்த்த லாரன்ஸ், சம்பந்தப்பட்ட ஊழியரிடம் ஆவேசத்துடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

இதனால், கோவில் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே, அங்கிருந்த சக ஊழியர்கள் ஓடி வந்து லாரன்சை சமரசம் செய்தனர். கோவிலில் இருந்து வெளியே வந்த நடிகர் லாரன்ஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எனது தாயார் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு, அறுவை சிகிச்சை செய்துள்ளோம். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடக்க வேண்டும் என திருப்பதி ஏழுமலையானிடம் வேண்டிக்கொண்டேன். தாயார் பூரண குணமடைந்ததும் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க குடும்பத்துடன் திருப்பதி வந்தோம்.

சாமி தரிசனம் செய்து கொண்டிருந்த எனது தாயாரை கோவில் ஊழியர் ஒருவர் பிடித்து தள்ளி விட்டார். நிலை தடுமாறிய அவர் கீழே விழுந்து விட்டார். சாமி தரிசனத்தின்போது, பிடித்து தள்ளி விடுவது சரியான மரியாதை அல்ல. இது, கொடூரமான செயல். இலங்கையில் தமிழர்களை கொடூரமாக கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு திருப்பதி கோவிலில் சிவப்பு கம்பளம் விரித்து மரியாதை செய்கிறார்கள்.

ஆனால் இந்தியாவை சேர்ந்த, குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு நடிகரான என்னுடைய தாயாரை கோவில் ஊழியர்கள் பிடித்து தள்ளியது தரக்குறைவான செயலாகும். சம்பந்தப்பட்டவர்கள் மீது கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து ஏழுமலையான் கோவில் துணை அதிகாரிகள் சின்னம்காரிரமணா, கேசவராஜு ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. நடிகர் லாரன்ஸ் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய வந்தார். அவருக்கு எல்-2 கிரேடு வி.ஐ.பி. தரிசன ஏற்பாடுகளை செய்தோம். இவ்வளவு கூட்ட நேரத்திலும் எல்-2 கிரேடு வி.ஐ.பி. தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை அவருக்கும் கொடுத்தோம்.

ஆனால் கோவிலில் இருந்து வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறிய கோவில் ஊழியர் மீதான குற்றச்சாட்டு சரியல்ல. அதுவும் நிருபர்களிடம் குறைகளை கூறியது தவறு. அவர் கூறிய குற்றச்சாட்டால் கோவில் ஊழியர்கள் கவலையும், மனவேதனையும் அடைந்துள்ளனர். இவ்வாறு கோவில் அதிகாரிகள் கூறினார்கள்.