கோலாலம்பூர், ஏப்ரல் 2- 13ஆவது பொதுத்தேர்தலில் தேசிய முன்னணியின் வெற்றியை உறுதிபடுத்துவதற்கு ஐ.பி.எப் கூட்டரசு பிரதேச மாநில தேர்தல் கேந்திரத்தை முடுக்குவிடும் விழா சிறப்பாக நடைபெற்றது.
தலைநகர் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மண்டபத்தில் நடைப்பெற்ற இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய டத்தோ சரவணன் (படம்) இந்நாட்டில் ம.இ.காவிற்கு அடுத்து ஐ.பி.எப் கட்சிதான் அடிமட்ட தொண்டர்களைக் கொண்ட கட்சியாக திகழ்கிறது என்றார்.
வரும் 13ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. அதேசமயம் தேசிய முன்னணியின் நட்பு கட்சியான ஐ.பி.எப் எல்லா வகையிலும் அதன் வெற்றிக்காக பாடுபடுகிறது.
முன்பு போல இந்திய கட்சி தலைவர்களெல்லாம் ஒரே மேடையில் ஒன்றாக அமர்வது சாத்தியப்படாத ஒரு விஷயமாக இருந்தது. ஆனால், இப்பொழுது தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையாக ஒரே மேடையில் அதிகமாக உட்காருகிறோம் . இதற்கு எங்களிடையே உள்ள ஒற்றுமை தான் காரணம்.
கடந்த 5 வருடங்களுக்கு முன் நாட்டின் வரவு செலவு திட்டத்தில் தமிழ்ப்பள்ளிக்காகவும், ஆலயங்களுக்காகவும் குறிப்பிட்ட மானியம் தான் ஒதுக்கப்படும். அதற்கு முறையாக ஒரு கடிதம் எழுதி அதை பிரதமரிடம் சமர்பித்து பதிலுக்காக காத்திருக்க வேண்டும். கடிதத்தில் 50 லட்சம் கேட்டிருந்தால் 20 லட்சம் மட்டும்தான் கிடைக்கும்.
ஆனால் தேசிய முன்னணியின் வரலாற்றில் டத்தோஸ்ரீ நஜிப் துன் அப்துல் ரசாக் தலைமைத்துவத்தின் கீழ் தான் கேட்கப்படும் முழுத்தொகையும் வரவு செலவு திட்டத்திலேயே ஒதுக்கப்படுகிறது. இதுவரையிலும் தமிழ்பள்ளிகளுக்காகவும் ஆலயங்களுக்காகவும் 50 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எப் கட்சியை தோற்றுவித்த டான்ஸ்ரீ எம்.ஜி.பண்டிதனின் (படம்) இரண்டாவது இரங்கல் கூட்டத்தின் போது கூட்டரசு பிரதேச நகர்புற நல்வாழ்வுத் துறை அமைச்சரிடம் பிரிக்பீட்ல்ஸ் லிட்டில் இந்தியாவில் உள்ள சாலைக்கு பண்டிதனின் பெயரை சூட்டும்படி கோரிக்கை வைத்தோம்.
இந்த நிகழ்வில் ஐ.பி.எப் கட்சியின் பல வருட கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பிரிக்பீல்ட்ஸ் ஜாலான் கல்சா எனும் இடத்திற்கு டான்ஸ்ரீ எம்.ஜி.பண்டிதனின் பெயரை சூட்டும் அதிகாரபூர்வ கடிதத்தை டத்தோ சரவணன் தேசியத் தலைவர் சம்பந்தனிடம் வழங்கினார்.
இத்தேர்தல் நடவடிக்கை குழுவின் தலைவராக ஐபிஎப் லெம்பா பந்தாய் தொகுதித் தலைவர் எம்.பி இருசன் தலைமை ஏற்றுள்ளார். இந்த தொடக்க விழாவில் மலேசிய இந்திய ஐக்கியக் கட்சியின் தேசியத் தலைவர் செனட்டர் டத்தோ நல்லா கே.எஸ் (படம்), கூட்டரசு பிரதேச தலைவர் சேரன், துணைத் தலைவர் மகாதேவன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.