ஜாகர்த்தா – இந்தோனிசிய அதிபர் தேர்தலில் நடப்பு அதிபர் ஜோகோ விடோடோ மீண்டும் இரண்டாவது தவணைக்கு வெற்றி பெற்றார் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, இன்று காலை இந்தோனிசியாவில் பல இடங்களில் வெடித்த கலவரங்களில் சுமார் 200 பேர்வரை காயமடைந்தனர் என்றும் 6 பேர் மரணமடைந்தனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் இந்தத் தகவல்களை இந்தோனிசியக் காவல் துறை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
இந்தத் தகவல்களை ஜாகர்த்தா ஆளுநர் (கவர்னர்) அனிஸ் பஸ்வேடான் தெரிவித்ததாக ஊடகங்கள் குறிப்பிட்டன. ஜோகோ விடோடோவை எதிர்த்து நின்ற பிரபாவோ சுபியாந்தோவின் ஆதரவாளராக ஜாகர்த்தா ஆளுநர் அனிஸ் செயல்பட்டார்.
நேற்று இரவு முதல் தொடங்கிய கலவரங்களில் பல வாகனங்களும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. இதுவரையில் சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜாகர்த்தாவில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் சுமார் 50 ஆயிரம் காவல் துறைப் படையின் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கின்றனர் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஜாகர்த்தாவிலுள்ள மலேசியத் தூதரகம் விடுத்த அறிக்கை ஒன்றில் உள்நாட்டு அரசு உத்தரவுகளுக்கு ஏற்ப நடந்து கொள்ளும்படி இந்தோனிசியாவில் வாழும் மலேசியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
உதவிகள் தேவைப்படும் மலேசியர்கள் அலுவலக நேரத்தில் கீழ்க்காணும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மலேசியத் தூதரகம் அறிவித்துள்ளது;
+62215224947 / + 6281380813036