Home உலகம் பப்புவா நியுகினி – மத்திய அமைச்சரானார் தமிழரான சசீந்திரன் முத்துவேல் – மலேசியாவில் வேலை செய்தவர்

பப்புவா நியுகினி – மத்திய அமைச்சரானார் தமிழரான சசீந்திரன் முத்துவேல் – மலேசியாவில் வேலை செய்தவர்

817
0
SHARE
Ad

போர்ட் மோர்ஸ்பி – பொதுவாக தமிழர்கள் இந்தியாவுக்கு அடுத்து மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில்தான் தொடர்ந்து அமைச்சர்களாகப் பதவி வகித்து வந்துள்ளார்கள்.

அந்த வரிசையில் புதிதாகத் தற்போது சேர்ந்திருக்கும் நாடு பப்புவா நியூ கினி. இந்நாட்டின் தலைநகர் போர்ட் மோர்ஸ்பி.

ஆஸ்திரேலியாவுக்கும் இந்தோனிசியாவுக்கும் இடையில் இருக்கும் நாடு பப்புவா நியூகினி.

#TamilSchoolmychoice

இந்நாட்டின் மத்திய அரசுத் துறை நிறுவனங்களில் அமைச்சராக தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட சசீந்திரன் முத்துவேல் பதவியேற்றுள்ளார். பப்புவா நியூ கினியின் முதல் இந்திய அமைச்சரும் சசீந்திரன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் கடந்த ஜூன் 7-ஆம் தேதி மத்திய அமைச்சராகப் பதவியேற்றார். அதற்கு முன்பாக அந்நாட்டின் நியூ வெஸ்ட் பிரிட்டன் மாநிலத்தின் ஆளுநராக 6 ஆண்டுகள் பதவி வகித்தார்.

சசீந்திரன் சிவகாசியில் பிறந்து வளர்ந்தவர். அங்கு விவசாயம் பார்த்து விட்டு மலேசியாவுக்கு வந்து பல்பொருள் அங்காடிக்கடை ஒன்றில் மேலாளராகப் பணி புரிந்திருக்கிறார்.

பின்னர் வேலைவாய்ப்பு தேடி 1999-ஆம் ஆண்டில் பப்புவா நியூகினி நாட்டுக்குச் சென்றார். அங்கு கடை ஒன்றில் வேலை செய்தவர், அந்தக் கடையின் முதலாளி வணிகத்திலிருந்து விலக முடிவெடுத்ததைத் தொடர்ந்து அந்தக் கடையைத் தானே முன்னெடுத்து நடத்தத் தொடங்கினார். பின்னர் நாடெங்கும் பல அங்காடிக் கிளைகளைத் திறந்தார்

2007-ஆம் ஆண்டில் பப்புவா நியூகினி நாட்டு குடியுரிமை பெற்றார். 2010-ஆம் ஆண்டில் அங்குள்ள பழங்குடி மக்கள் தங்கள் இனத்தின் ஒருவனாக அங்கீகரித்து சசீந்திரனை ஏற்றுக் கொண்டனர்.

அதன்பின்னர் நியூவெஸ்ட் மாநிலத்தின் ஆளுநராகப் போட்டியிட்டு 2012-இல் வெற்றி பெற்ற சசீந்திரன் தொடர்ந்து 2017-ஆம் ஆண்டிலும் வெற்றி பெற்றார்.

அடுத்து நாடாளுமன்ற உறுப்பினராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சமீபத்தில் அந்நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் காரணமாக  ஜேம்ஸ் மாராப்பே பிரதமராக பதவியேற்றார். மத்திய அரசின் அமைச்சரவையில் பங்கேற்பதற்கு சசீந்திரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அவரும் பப்புவா நியூ கினியின் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் முதலீட்டு அமைச்சகத்தின் அமைச்சராக கடந்த ஜூன் 7-ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார்.