Home இந்தியா தன்முனைப்பு எழுத்தாளர் எம்.எஸ்.உதயமூர்த்தி காலமானார்

தன்முனைப்பு எழுத்தாளர் எம்.எஸ்.உதயமூர்த்தி காலமானார்

1548
0
SHARE
Ad

Uthayamoorthy-MS-Featureசென்னை, ஜனவரி 21- அமெரிக்காவில் கைநிறைய சம்பளம், பிரகாசமான எதிர்காலம், சுகபோகமான வாழ்க்கை – இப்படி எல்லாவற்றையும் துறந்து விட்டு, தான் கற்ற கல்வியும் பெற்ற ஞானமும் தமிழ் நாட்டு மக்களுக்கு பயன்பட வேண்டும் என்ற உன்னத நோக்கில் தன் வாழ்க்கையை தமிழ் மக்களுக்கு தியாகம் செய்த டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி சென்னையில் காலமானார்.

அவருக்கு வயது 82.

“உன்னால் முடியும் தம்பி” என்ற தன்முனைப்புத் தூண்டல் நூலை 1980ஆம் ஆண்டுகளில் எழுதி முத்திரை பதித்த உதயமூர்த்தி பின்னர் பல நூல்களை எழுதி வெளியிட்டார். நிறைய கட்டுரைகளும் எழுதியிருக்கின்றார்.

#TamilSchoolmychoice

அவரது எழுத்துக்களைப் படித்துவிட்டு அதன் மூலம் தங்களின் வாழ்க்கைப் பாதையை செப்பனிட்டுக் கொண்டவர்களும், புதிய சிந்தனைகளோடு செதுக்கிக் கொண்டவர்களும் ஏராளமானோர் இருக்கின்றனர்.

உதயமூர்த்தியின் கருத்துக்களின் அடிப்பையில் உருவான படம்தான் பிரபல இயக்குநர் கே.பாலசந்தர் இயக்கி கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த “உன்னால் முடியும் தம்பி” என்ற படம். இந்தப் படத்தின் கதாநாயகனான கமலின் பெயரும் உதயமூர்த்திதான்.

கிராமங்களின் பிரச்சனைகளை அந்த கிராமத்து மக்கள்   தாங்களே தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் உதயமூர்த்தியின் கொள்கைகளில் ஒன்று.

அதற்கேற்ப அவர் பல தமிழ் நாட்டு கிராமங்களுக்கு வருகை தந்து தன்னைப்பத் தூண்டல் உரைகளை நிகழ்த்தினார். 1988ஆம் ஆண்டில் “மக்கள் சக்தி” என்ற பெயரிலான மக்கள் இயக்கம் ஒன்றை உருவாக்கி வழிநடத்தினார்.

பிற்காலத்தில் மலேசியாவில் பிரபலமடைந்த மக்கள் சக்தி என்ற வாசகம் அவரது இயக்கத்தின் பெயர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மலேசியாவிற்கும் அவர் பலமுறை வருகை தந்திருக்கின்றார். அவரது கருத்துக்களுக்கும் எழுத்துக்களுக்கும் ரசிகர்கள் மலேசியாவிலும் ஏராளம் உண்டு.

இந்தியாவில் உள்ள நதிகளை பாரபட்சமின்றி பொது நோக்கில் ஒருங்கிணைப்பதன் மூலம் இந்தியா மேலும் வளம் பெற முடியும் என்பதில் நம்பிக்கை கொண்ட உதயமூர்த்தி அதற்காக தீவிர பிரச்சாரத்தையும் கிராமங்களில் மேற்கொண்டார். அவரது இயக்கத்தின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாகவும் இந்த நதி நீர் இணைப்பு விளங்கியது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருடன் நெருக்கமாகப் பழகியவர் உதயமூர்த்தி என்பதும் குறிப்பிடத்தக்கது.

எம்.ஜி.ஆர் நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு சென்றபோது அதற்கான முன்னேற்பாடுகளை முன்னின்று செய்தவர் உதயமூர்த்தி என்பதும் குறிப்பிடத்தக்கது.