பினாங்கு, ஏப்ரல் 6 – பந்தாய் ஜெரஜாக் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான பிகேஆர் கட்சியின் சிம் சீ சின் (படம்) பாயான் பாரு நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினராக 13வது பொதுத் தேர்தலில் போட்டியிடுவார்.
பினாங்கு, சுங்கை ஆரா பகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றில் உரையாற்றியபோது, பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் இந்த அறிவிப்பைச் செய்தார்.
2008 பொதுத் தேர்தலில் பிகேஆர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட டத்தோஸ்ரீ சஹ்ரின் முகமட் ஹாஷிம் 11,029 வாக்குகள் வித்தியாசத்தில் இந்த தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளரைத் தோற்கடித்து வெற்றி பெற்றார்.
ஆனால் பின்னர் கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட பிணக்கால், பிகேஆர் கட்சியிலிருந்து விலகி, சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினராக சஹ்ரின் தன்னை அறிவித்துக் கொண்டார்.
தற்போது பாயான் பாரு தொகுதியில் போட்டியிடும் இளைஞரான 37 வயதான, சிம் சீ சின் அமெரிக்காவில் படித்த அரசியல் விஞ்ஞான பட்டதாரி என்றும், தனது முன்னாள் அரசியல் செயலாளர் என்றும் அன்வார் அறிமுகப்படுத்தினார்.
அவர் இந்த தொகுதியில் ஒரு கிளைத் தலைவராக இருக்கின்றார் என்பதோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
பாலிக் புலாவ் நாடாளுமன்றத்திற்கு முகமட் பக்தியார் வான் சிக்
பினாங்கிலுள்ள மற்றொரு நாடாளுமன்ற தொகுதியான பாலிக் புலாவ் தொகுதியில் முகமட் பக்தியார் வான் சிக் (படம்) என்ற மறுமலர்ச்சி (reformasi} போராட்டவாதியை தாங்கள் பிகேஆர் வேட்பாளராக நிறுத்துவதாகவும் அன்வார் அறிவித்துள்ளார்.
47 வயதான முகமட் பக்தியார் ஒரு நிறுவனத்தில் மனிதவள நிர்வாகியாகப் பணியாற்றுபவர் ஆவார்.
கடந்த பொதுத் தேர்தலில் இதே பாலிக் புலாவ் தொகுதியில் பிகேஆர் வேட்பாளராகப் போட்டியிட்ட முகமட் யுஸ்மாடி 708 வாக்குகள் வித்தியாசத்தில் தேசிய முன்னணி வேட்பாளரை வெற்றி கொண்டார்.
– பெர்னாமா