கோலாலம்பூர்: இந்த ஆண்டு 11.11 இணைய விற்பனையின் போது ஆறு நாடுகளில் பொருட்களை வாங்குபவர்களின் வாணிக நடவடிக்கை மற்றும் தருவிப்புகளில் மலேசியா முதலிடம் பிடித்துள்ளது. ஷாப்பேக் மலேசியா (ShopBack Malaysia) நிறுவனத்தின் தரவுகளின்படி இது வெளியிடப்பட்டுள்ளது.
ஷாப்பேக் மலேசியா கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இவ்வாண்டு நவம்பர் 11-ஆம் தேதியன்று தனது விற்பனையில் 80 விழுக்காட்டுக்கும் அதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
ஷாப்பேக் மலேசியாவின் பொது மேலாளர் எடி ஹான் கூறுகையில், கடந்த திங்களன்று ஷாப்பேக் மலேசியா பயனர்கள் இணையம் மூலமாக 20 மில்லியன் ரிங்கிட்டை செலவிட்டுள்ளதாகக் கூறினார்.
“மலேசிய பயனீட்டாளருக்கு சராசரி செலவு 217 ரிங்கிட்டாகும், ஆனால், ஒருவர் 30,000 ரிங்கிட்டுக்கு லெனோவோவுடன் ஷாப்பேக் மூலம் செலவிட்டுள்ளார்.
“அந்நபர் 14 விழுக்காடு சலுகையுடன் 4,500 ரிங்கிட்டுக்கும் அதிகமான பண வருவாயைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அவர் நேற்று செவ்வாயன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனிசியா, தாய்லாந்து மற்றும் தைவான் ஆகிய ஆறு நாடுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்கள், வலைத்தளங்கள் அல்லது பயன்பாடுகளிலிருந்து மொத்த வாணிக நடவடிக்கையில் மலேசியா முதலிடத்தில் இருப்பதைக் காட்டுகிறது. அதைத் தொடர்ந்து தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் இடம்பெற்றுள்ளது.