நோவசிபீர்சுக்: சைபீரியாவில் கண்டுபிடிக்கப்பட்ட 18,000 ஆண்டுகள் பழமையான நாய்க்குட்டி, நாய்களுக்கும் ஓநாய்களுக்கும் இடையிலான தொடர்பை நிரூபிக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
கடந்த கோடையில் கிழக்கு சைபீரியாவின் யாகுட்ஸ்க் அருகே நிலத்தடி உறைபனியால் பதப்படுத்தப்பட்டு, இந்த நாய்க்குட்டி கண்டுபிடிக்கப்பட்டது. கார்பன் காலக்கணிப்பு மூலமாக இது சுமார் 18,000 ஆண்டுகளாக உறைந்திருப்பதை வெளிப்படுத்தியுள்ளது.
விரிவான மரபனு சோதனைகள் இதுவரையிலும் இவ்விலங்கு நாயா அல்லது ஓநாயா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்று ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் உள்ள பாலியோஜெனெடிக்ஸ் மையத்தின் (Centre for Palaeogenetics) ஆராய்ச்சியாளர்கள் இந்த வாரம் அறிவித்தனர்.
நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் இதழில் வெளியிடப்பட்ட 2017-ஆம் ஆண்டு ஆய்வில், நவீன நாய்கள் 20,000 முதல் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு ஓநாய் கூட்டத்திடமிருந்து வந்தன என்றும், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த மாதிரியின் சோதனைகள் துல்லியமான காலத்தைப் பற்றிய கூடுதல் தடயங்களை வழங்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.