அலோர் ஸ்டார்: மாநிலத்தில் அரசியல் அமைதியின்மையைத் தொடர்ந்து, மாநிலத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று அமானா இளைஞர் பகுதி கேட்டுக் கொண்டது.
இரண்டு பிகேஆர் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நான்கு பெர்சாத்து உறுப்பினர்களும் ஒருமனதாக தேசிய கூட்டணியை ஆதரிப்பதாகக் கூறியதை அடுத்து தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று மாநில அமானா இளைஞர் தலைவர் முகமட் ரிட்சுவான் அர்ஷாட் அகமட் தெரிவித்தார்.
“நடந்தது துரோகம் என்றால், அரசாங்கத்தை வழிநடத்த யார் சரியானவர் என்பதை தீர்மானிக்க மாநில தேர்தலை நடத்த வேண்டும். மக்களிடம் ஆணை மீண்டும் வழங்கப்பட வேண்டும் ” என்று அவர் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்தார்.
முன்னாள் பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் ரோபர்ட் லிங் குய் ஈ மற்றும் அஸ்மான் நஸ்ருடின் ஆகியோர் பிகேஆரில் இருந்து வெளியேறி தேசிய கூட்டணிக்கு ஆதரவாக இருப்பதாக அறிவித்திருந்தனர். இதனால் இப்போதைய முதல்வர் முக்ரிஸ் மகாதீரின் அரசாங்கம் பெரும்பான்மையை இழக்க வழிவகுத்தது.
அதைத் தொடர்ந்து, கெடா மாநில தேசிய கூட்டணி ஒரு புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு மக்களின் பெரும்பான்மையான ஆதரவைப் பெற்றதாகக் கூறினர்.
எவ்வாறாயினும், பெரும்பான்மை நிரூபிக்கப்படவில்லை என்றும் தாம் இன்னும் சட்ட ரீதியாக மந்திரி பெசாராக இருப்பதாக முக்ரிஸ் நேற்று தெரிவித்தார்.