Home One Line P1 தேசியச் சின்னம் சீர்குலைப்பு: ஆசிரியர் வெளிநாட்டில் உள்ளார்

தேசியச் சின்னம் சீர்குலைப்பு: ஆசிரியர் வெளிநாட்டில் உள்ளார்

702
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தேசியச் சின்னம் சீர்குலைப்புத் தொடர்பாகத் தேடப்பட்டு வரும் நூல் ஆசிரியர் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றது கண்டறியப்பட்டுள்ளது.

‘ரிபெர்த்: ரெபோர்மாசி, ரெசிஸ்தன்ஸ் அன் ஹொப் இன் நியூ மலேசியா’ நூலின் அட்டைப்பக்கத்தில் தேசியச் சின்னம் தவறாக சித்தரிக்கப்பட்டதை அடுத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

சம்பந்தப்பட்ட ஆசிரியர், கடந்த ஜனவரி 21- ஆம் தேதியிலிருந்து வெளிநாட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குனர் டத்தோ ஹுசிர் முகமட் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“அவர் (ஆசிரியர்) மலேசியாவை விட்டு வெளியேறிவிட்டார். ஆனால், சந்தேக நபரின் இருப்பை, அவரது இருப்பிடத்தை எங்களால் உறுதிப்படுத்த முடியவில்லை. அவரை தேடப்படும் நபராக பட்டியலிட்டு, கண்டறியப்பட்ட பின்னர் கைது செய்யப்படுவார், “என்று அவர் இன்று பெர்னாமாவிடம் தெரிவித்தார்.

அனைத்துலக காவல் துறை அதிகாரிகளுடன் தனது தரப்பு ஒத்துழைக்கும் என்று அவர் கூறினார். சந்தேகநபருக்கு எதிராக சிவப்பு அறிவிப்பு வெளியிடுவதாகவும் ஹுசிர் கூறினார்.

புத்தகத்திற்காகக் கட்டுரைகளை வழங்கிய 28 எழுத்தாளர்களில் 8 பேரின் சாட்சியங்களை இதுவரை காவல்துறை பதிவு செய்துள்ளது. மீதமுள்ளவர்கள் தேடப்படுகிறார்கள் என்று அவர் கூறினார்.

“28 எழுத்தாளர்களின் கட்டுரைகளில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் கொண்டிருந்தால், சிறப்பு கிளையின் உதவியை காவல் துறை அணுகும்” என்று அவர் கூறினார்.

இந்த வழக்கு தொடர்பாக நாடு முழுவதும் மொத்தம் 203 காவல் துறை புகார் அறிக்கைகள் பெறப்பட்டன.

சின்னங்கள், பெயர்கள் சட்டம் 2016, தேசத்துரோக சட்டம் 1948, அச்சிடுதல் மற்றும் வெளியீடு 1984 மற்றும் தகவல் தொடர்பு, பல்லூடக சட்டம் 1998- இன் கீழ் இந்த வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

அண்மையில், தேசியச் சின்னம் சீர்குலைப்பு தொடர்பாக புத்தகத்தின் வெளியீட்டாளர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

கெராக்புடாயா பதிப்பக நிறுவனத்தின் இயக்குநரும் நிறுவனருமான சோங் டன் சின் தேசியச் சின்னத்தை அவமதிக்கும் எண்ணம் இல்லை என்று கூறியிருந்தார்.

“நாங்கள் உண்மையில் அவமதிப்பதற்கான எண்ணத்தில் இல்லை.

“தற்செயலாக ஏற்பட்டிருக்கலாம் என்றாலும், அது யாருக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்தியிருந்தால், புண்படுத்தியிருந்தால், நான் மன்னிப்பு கேட்கிறேன்.

“எதிர்காலத்தில் நாங்கள் இதில் அதிக கவனம் செலுத்துவோம்.” என்று அவர் கூறியிருந்தார்.

பாக் சோங் என்றும் அழைக்கப்படும் சோங், புத்தகத்தின் அட்டைப்படத்தில் உள்ள படம் பல ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஓவியத்திலிருந்து வந்தது என்று கூறினார்.

அட்டைப்படத்தில் அதன் பயன்பாடு ஓவியர் மற்றும் புத்தகத்தின் ஆசிரியர் இடையே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் சோங் கூறியிருந்தார்.

இதனிடையே, பெட்டாலிங் ஜெயாவில் உள்ள கெராக்புடாயா நிறுவனத்தை காவல் துறையினர் சோதனை செய்தனர்.

அங்கு 313 புத்தகங்களை அவர்களை பறிமுதல் செய்தனர். மொத்தம் 1,000 புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளதாக ஹுசிர் முகமட் கூறியிருந்தார்.