மும்பையில், 1993ல் தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இதில், 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்திருந்ததாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டு பின் பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் 21-ம் தேதி உத்தரவிட்டது.
4 வார கால அவகாசம்
இந்நிலையில், தற்போது சில படங்களில் நடித்து வருவதாகவும், அதன் படப்பிடிப்புகளில் பங்கேற்க வேண்டியுள்ளதால் சரண் அடைவதற்கு ஆறு மாதங்கள் அவகாசம் வேண்டும் என்றும், சஞ்சய் தத் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சதாசிவம், சவுகான் ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது, இந்த வழக்கில், சி.பி.ஐ. தரப்பில் கால அவகாசம் நீட்டிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இன்று நடந்த விசாரணையின், கால அவகாசம் கோர அரசியல் சட்டத்தில் உரிமை உள்ளது என நீதிபதிகள் கூறினர். இதையடுத்து சஞ்சய் தத்தின் மனுவை ஏற்று, மனிதாபிமான அடிப்படையில் 4 வார கால அவகாசம் அளிப்பதாக கூறினர்.
கால அவகாசம் கொடுக்கப்பட்டது ஏன் ?
இந்த வழக்கில், நேற்று கால அவகாசம் கோரி தாக்கல் செய்த மூன்று பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. ஆனால் சஞ்சய் தத்திற்கு மட்டுமே கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மற்றவர்கள் மீதான குற்றச்சாட்டு வேறு, நடிகர் சஞ்சய் தத் மீதான குற்றச்சாட்டு வேறு, நடிகர் சஞ்சய் தத் பயங்கரவாதியாக கருதப்படவில்லை. எனவே தான் அவருக்கு 4
வார கால அவகாசம் அளிக்கப்பட்டது என அதற்கு விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.