கோலாலம்பூர், ஜனவரி 27 – குகன் என்ற இந்திய இளைஞர் போலீஸ் தடுப்புக் காவலில் இருந்த போது சந்தேகமான முறையில் மரணமடைந்துள்ளதைத் தொடர்ந்து இந்திய சமுதாயத்தில் ஏற்பட்ட கொந்தளிப்புகளும், சர்ச்சைகளும் இன்னும் முடிந்தபாடில்லை.
அதற்குள் இன்னொரு ‘குகன்’ கதையாக சுகுமார் செல்லையா என்ற 40 வயது இந்திய பாதுகாவலர் ஒருவர் போலீஸ் தடுப்புக் காவலில் மரணம் அடைந்த சம்பவம் மீண்டும் நாடெங்கும் கொந்தளிப்பையும், அதிருப்தி அலைகளையும் ஏற்படுத்தி உள்ளது.
அவர் போலீஸ் தாக்குதலால் இறந்தாரா அல்லது இயற்கையான முறையில் மரணமடைந்தாரா என்பது குறித்த சர்ச்சைகளைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் உண்மையைத் தெரிந்து கொள்ள இரண்டாவது பிரேத பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.
கூடிய விரைவில் மரணமடைந்த சுகுமார் மீதான இரண்டாவது பிரேத பரிசோதனை நடத்தப்படும் என சுகுமார் குடும்பத்தின் வழக்கறிஞர்களில் ஒருவரான லத்திஃபா கோயா தெரிவித்துள்ளார்.
சுகுமார் மீதான பிரேத பரிசோதனை மேற்கொண்ட செர்டாங் மருத்துவமனைதான் ஏற்கனவே குகன் குறித்த தவறுதலான பிரேத பரிசோதனை அறிக்கையை தயாரித்தது என்ற களங்கம் இருப்பதால், தாங்கள் மற்றொரு மருத்துவமனையில் இன்னொரு மருத்துவரைக் கொண்டு பிரேத பரிசோதனையை மேற்கொள்ளவிருப்பதாக லத்திஃபா கோயா கூறினார்.
சுகுமார் இதயத்தில் அடைப்பு ஏற்பட்டதால் அவர் மரணமடைந்ததாகவும் அவர் உடல் மீது எந்தவித காயமும் இல்லை என்றும் செர்டாங் மருத்துவமனையின் பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவித்துள்ளது.
இருந்தாலும், பொது சொத்துக்கு நாசம் விளைவித்த காரணத்தால் சுகுமாரை நான்கு போலீஸ்காரர்கள் பின்தொடர்ந்து கைது செய்ததாகவும், அவரது முகத்தில் மஞ்சள் பொடி தூவி அவர் தாக்கப்பட்டதாகவும், உலு லங்காட் தாமான் பெக்காக்கா என்ற இடத்தில் நடைபெற்ற சம்பவத்தில் ஒரு கும்பலும் பங்கெடுத்ததாகவும், சாட்சிகள் கூறியுள்ளனர்.