Home கலை உலகம் ஆஸ்ட்ரோ ‘பனாஸ் டோக் வித் விகடகவி’ பங்கேற்பாளர்களுடன் – ஒரு சிறப்பு நேர்காணல்

ஆஸ்ட்ரோ ‘பனாஸ் டோக் வித் விகடகவி’ பங்கேற்பாளர்களுடன் – ஒரு சிறப்பு நேர்காணல்

404
0
SHARE
Ad

ஆஸ்ட்ரோவில் ஒளியேறி வரும் ‘பனாஸ் டோக் வித் விகடகவி’ பங்கேற்பாளர்களுடன் – ஒரு சிறப்பு நேர்காணல்

ஷீசே & சேத்தீஸ் (அத்தியாயம் 8), உள்ளூர் திறமையாளர்கள்:

உங்களின் பின்னணியைப் பற்றிக் கூறுக:

ஷீசே: என் உண்மையானப் பெயர் ஷேவன் ராஜ். நான் சிரம்பானில் பிறந்த ராப்பர்-பாடலாசிரியர். ராப்பிங், எழுத்து, படைப்பு மற்றும் பல்வேறு கலைஞர்களுடன் இணைந்துப் பணியாற்றியதன் வழி ஒரு தசாப்தத்திற்கும் மேலாக உள்ளூர் மற்றும் சர்வதேசத் தமிழ் இசை அரங்கில் நான் ஒரு முக்கிய நபராக இருந்தேன். 2012-இல் வெளியீடு கண்ட ‘கம்பத்து ராப்பர்’ என்ற எனது பாடல்களின் தொகுப்பின் மூலம் எனக்கு புகழ் கிடைத்தது. அதன்பிறகு, ஹேவோக் பிரதர்ஸ், அரவிந்த் ராஜ் மற்றும் சைக்கோமந்த்ரா போன்றப் பல்வேறு உள்ளூர் தமிழ் கலைஞர்களுடன் இணைந்துப் பணியாற்றினேன். ஆசியா முழுவதும் உள்ள இசைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் விமா இசை விருதுகள் உட்படப் பல விருதுகளையும் நான் வென்றுள்ளேன்.

#TamilSchoolmychoice

சேத்தீஸ்: நான் 2012 முதல் 2013 வரை கலைத்துறையில் தொழில்நுட்பப் பிரிவில் பணியற்றினேன். பின்னர் 2013 முதல் இசையமைக்க ஆரம்பித்தேன். 2016-ஆம் ஆண்டு திரையரங்கில் வெளியான உள்ளூர் திரைப்படமான ‘கீதையின் ராதை’-இல் இடம்பெற்ற ‘என்னைக் கொல்லாதே’ பாடலுக்கு நான் முதன்முறையாக இசையமைத்தேன். அந்தப் பாடலும், அதன் பின்னணி இசையும் 2014 மற்றும் 2015-இல் உருவாக்கப்பட்டன.

அதிலிருந்து 2020 வரை ‘கீதையின் ராதை’, ‘ஜாங்கிரி’, ‘ஆசான்’, ‘திருடாதே பாப்பா திருடாதே’, ‘உனக்காகத்தானே’ மற்றும் சமீபத்தில் வெளியான ‘ராஜதந்திரம்: தி பியானோ’ என 6 திரைப்படப் பாடல்களுக்கு இசையமைத்துள்ளேன்; ஆஸ்ட்ரோவில் ஒளிபரப்பான ‘குருவிகூடு’, ‘ராம் லீலா லாக்டவுன்’, ‘திட்டம் போட்டு கடத்துற கூட்டம்’, ‘மாயா’ போன்ற 4 டெலிமூவிக்களின் பாடல்களுக்கு இசையமைத்துள்ளேன்; ஆஸ்ட்ரோவில் ஒளிபரப்பான ‘வைரஸ்’ தொடருக்கானப் பாடல் மற்றும் பின்னணி இசை; ‘இது நம்ம பாட்டுலா’ மற்றும் ‘பேய் வேட்டை’ போன்ற ஆஸ்ட்ரோவில் ஒளிபரப்பப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான கருவிசை; ஆஸ்ட்ரோவில் ஒளிபரப்பான ‘அனல் பறக்குது’ தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான கருப்பாடல்; மல்டிமீடியா தயாரிப்பு, ஆஸ்ட்ரோ மற்றும் மெக்சிஸ் ஆகியவற்றுக்கான தீபாவளி விளம்பரப் பின்னணி இசை; ஆர்டிஎம் தொடரான ‘மதியுகி’க்கானப் பின்னணி இசை; மின்னல் பண்பலைக்கான வானொலி ஜிங்கிள்ஸ்; ‘ராசாத்தி’, ‘கண்ணீரில்’ மற்றும் ‘எண்டமிக் தீபாவளி’ போன்றத் தனிப்பாடல்கள்; மற்றும் ‘கண் மூடினேன்’ என்ற ராகாவின் ஸ்டாருக்கானப் பாடல் காணொளி ஆகியவற்றைத் தயாரித்துள்ளேன். 2022-ஆம் ஆண்டில் ‘அதிகமாகக் கேட்கப்பட்ட தமிழ்ப் பாடல்’ என்றப் பிரிவில் ‘என்னைக் கொள்ளாதே’ பாடலுக்காக MACP விருது விழாவில் புகழ்பெற்ற ‘MACP விருது 2022’-ஐயும் 2018-இல் புகழ்பெற்ற இந்திய இயக்குநர் பாரதிராஜா அவர்களிடமிருந்து ‘சிறந்த இசையமைப்பாளர் விருது’-ஐயும் பெற்றதில் நான் பெருமையடைகிறேன். 2022-இல் மல்டிமீடியா என்டர்டெயின்மென்ட்டிற்காக எனது இரண்டு முதல் மலாய் பாடல்களையும் இயற்றியுள்ளேன்.

பனாஸ் டாக் வித் விகடகவி நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர் சத்யா

பனாஸ் டோக் வித் விகடகவி நிகழ்ச்சியில் பங்கேற்ற அனுபவம் எவ்வாறு இருந்தது?

ஷீசே: பெரும்பாலான நிகழ்ச்சிகள் கலைஞர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை ஆராயாததால் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனுபவம் நன்றாக இருந்தது.

சேத்தீஸ்: தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக இரவில் ஒலிப்பதிவில் முதல்முறையாகப் பங்கேற்றதால் எனக்குப் புதிய அனுபவமாக இருந்தது. தொழில்துறைத் தொடர்பான சுவாரசியமானத் தலைப்புகள் மற்றும் கதைகள் குறித்து இரசிகர்கள் கலைஞரின் கருத்தைக் கேட்பதற்கு இது ஒரு புதிய வழி என்று நான் கூறுவேன்.

கலைத்துறையில் உங்களின் முன்மாதிரி யார்?

ஷீசே: எமினெம் மற்றும் லில் வெய்ன்.
சேத்தீஸ்: ஆஸ்கார் விருது வென்ற இந்திய இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் எனது முதன்மையான முன்மாதிரி. அவரைத் தவிர, உள்ளூர் இசையமைப்பாளர்களான ஜெய் மற்றும் பாய் ராட்ஜ் ஆகியோரும் எனது முன்மாதிரிகளாவர்.

உங்களின் இரசிகர்களுக்காக ஒரு செய்தியைப் பகிரவும்.

ஷீசே: இத்தனை ஆண்டுகளாக என்னுடன் பயணித்ததற்கு நன்றி. உங்களுக்காக நான் எனது படைப்புகளைத் தொடர்வேன். நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன். உங்களிடம் கடன்பட்டிருக்கிறேன்.

சேத்தீஸ்: எனது இரசிகர்களை நான் குடும்பம் என்று அழைக்க விரும்புகிறேன். எனது முதல் பாடலான ‘என்னை கொல்லாதே’ உட்படப் பிற முயற்சிகளுக்கும் அவர்களின் ஆதரவு எனக்கு நிறைய உள்ளது. இசைக் கலைஞர்களின் வாழ்க்கை இந்த நாட்டில் சிறக்க அவர்கள்தான் முக்கியக் காரணம் என்று நான் கூறுவேன். நன்றி, குடும்பத்தினரே!