Home Photo News பிறை : சுந்தரராஜூ பினாங்கின் புதிய துணை முதல்வர் ஆவாரா? டேவிட் மார்ஷல் எத்தனை வாக்குகளைப்...

பிறை : சுந்தரராஜூ பினாங்கின் புதிய துணை முதல்வர் ஆவாரா? டேவிட் மார்ஷல் எத்தனை வாக்குகளைப் பிரிப்பார்?

437
0
SHARE
Ad
பிறை ஜசெக சட்டமன்ற வேட்பாளர் சுந்தரராஜூ சோமு

(6 மாநில சட்டமன்றத் தேர்தல்களின் பிரச்சாரங்களில் அனல் பறக்கும் தொகுதிகளில் ஒன்று பிறை. இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர், பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமிக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாதது – செபராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினர் டேவிட் மார்ஷல் சுயேட்சை வேட்பாளராக களத்தில் குதித்திருப்பது – போன்ற அம்சங்கள் பிறை சட்டமன்றத் தொகுதியின் பிரச்சாரங்களை மேலும் சுவாரசியமாக்கியுள்ளது. அந்தத் தொகுதியின் நிலவரங்களை விவரிக்கிறார் இரா.முத்தரசன்)

*டேவிட் மார்ஷல் எத்தனை வாக்குகளைப் பிரிப்பார்?

*இராமசாமியின் ஆதரவாளர்கள் சுந்தரராஜூவை ஆதரிப்பார்களா?

*வெற்றி பெற்றால் சுந்தரராஜூ துணை முதல்வரா?

#TamilSchoolmychoice

மஇகா போட்டியிடாவிட்டாலும் 6 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் இந்தியர்களைப் பொறுத்தவரை ஓர் அபூர்வம் நிகழ்ந்திருக்கிறது. 4 சட்டமன்றத் தொகுதிகளில் முழுக்க முழுக்க இந்திய வேட்பாளர்களே பல்வேறு கட்சிகளைப் பிரதிநிதித்துப் போட்டியிடுகின்றனர். பினாங்கில், பிறை, பாகான் டாலாம், சிலாங்கூரில் செந்தோசா, புக்கிட் காசிங் ஆகிய தொகுதிகளே அவை.

பிறை தொகுதியில் ஜசெக சார்பில் டத்தோஸ்ரீ சுந்தரராஜூ சோமு, பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் கெராக்கான் கட்சியைச் சேர்ந்த சிவசுந்தரம் ராஜலிங்கம், மூடா கட்சி சார்பில் விக்னேஸ்வரி ஹரிகிருஷ்ணன் போட்டியிடுகின்றனர். இவர்களோடு  ஜசெகவின் நீண்ட கால உறுப்பினரும் செபராங் பிறை நகராண்மைக் கழக முன்னாள் உறுப்பினருமான டேவிட் மார்ஷலும் களத்தில் குதித்திருப்பது பிறை சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை சுவாரசியமாகவும் பரபரப்பாகவும் மாற்றியிருக்கிறது.

பினாங்கு பிறை சட்டமன்றத்தை 3 தவணைகளாக வெற்றிகரமாகத் தற்காத்து வந்த பேராசிரியர் ப.இராமசாமிக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது உறுதியானது முதல், அனைவரின் பார்வையும் பிறை சட்டமன்றம் மீது பதியத் தொடங்கிவிட்டது.

இராமசாமிக்குப் பதிலாக, எதிர்பார்க்கப்பட்டது போலவே, சுந்தரராஜூ சோமு ஜசெக சார்பில் நிறுத்தப்பட்டிருக்கிறார். ஜசெக பினாங்கு மாநிலத்தை மீண்டும் கைப்பற்றினால் சுந்தரராஜூதான் துணை முதல்வர் என்பது ஜசெக வட்டாரங்களில் உறுதியாகியிருக்கிறது. மற்றொரு நீண்ட கால இந்திய சட்டமன்ற உறுப்பினரான ஜக்டீப் சிங்கின் பெயரும் துணை முதல்வர் பெயருக்கு அடிபடுகிறது. ஜசெக தலைவர் கோபிந்த் சிங்கின் தம்பிதான் ஜக்டீப். இறுதி முடிவு பினாங்கு மாநில ஜசெகவை ஆட்டிப் படைக்கும் ‘சக்கரவர்த்தியாக’ வர்ணிக்கப்படும் லிம் குவான் எங் கையில்!

சுந்தரராஜூ பினாங்கு மாநிலத்தின் இரண்டாவது இந்தியர் துணை முதல்வராக மகுடம் சூட்டப்பட அவர் முதலில் பிறை சட்டமன்றத்தில் வெற்றி பெற்று வரவேண்டும்.

ஆனால் அவர் கடுமையானப் போட்டியை எதிர்நோக்குவதாகத் தகவல். இந்திய வாக்குகளின் பிளவுதான் அதற்குக் காரணம் என்கிறார்கள்.

பிளவுபடும் இந்திய வாக்குகள்

20,479 பதிவு பெற்ற வாக்காளர்களைக் கொண்ட பிறை சட்டமன்றத்தில் சுமார் 36 விழுக்காட்டினர் இந்தியர்கள். இதில் பெரும்பான்மை வாக்குகள் ஒவ்வொரு தேர்தலிலும் இராமசாமிக்கு ஆதரவாகக் கிடைத்து வந்தன. கடந்த 14-வது பொதுத் தேர்தலில் இராமசாமியை எதிர்த்துப் போட்டியிட்ட மஇகா வேட்பாளருக்கு 2,194 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. இராமசாமிக்கோ 11,243 வாக்குகள் கிடைத்து 9,049 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

பிறை 51 விழுக்காட்டு சீன வாக்காளர்களையும் 12 விழுக்காட்டு மலாய் வாக்காளர்களையும் கொண்டிருக்கிறது. மற்ற வாக்காளர்கள் 1 விழுக்காட்டினர்.

இராமசாமியின் கடந்த கால வெற்றிகளுக்கு சீன வாக்காளர்களும் ஒரு காரணம். கடந்த முறை கெராக்கான் இங்கு போட்டியிடவில்லை. மற்ற சிறிய கட்சிகளே போட்டியிட்டன. இந்த முறை கெராக்கான் இங்கு போட்டியிடுகின்றது. ஆனால் அந்தக் கட்சியின் சார்பிலும் இந்திய வேட்பாளரே நிறுத்தப்பட்டிருக்கிறார். பாஸ் இணைந்திருக்கும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் சின்னத்தில் போட்டியிடுகிறார் அந்த இந்திய வேட்பாளரான சிவசுந்தரம்.

எனவே, அவரால் சீன வாக்குகளைப் பெற முடியுமா என்பது சந்தேகமே! லிம் குவான் மீண்டும் பினாங்கு முதல்வராவார் என்ற ஆரூடங்களால் அவருக்கும் ஜசெகவுக்கும் எதிரான அதிருப்தி அலை சீன வாக்காளர்களிடையே நிலவுவதாக அரசியல் பார்வைகள் தெரிவிக்கின்றன.

எனினும் அதற்காக பிறை சீன வாக்காளர்கள் ஜசெகவைப் புறக்கணித்து, இன்னொரு இந்திய வேட்பாளருக்கோ, பெரிக்காத்தான் நேஷனலுக்கோ வாக்களிப்பார்கள் என்பது நம்ப முடியாத ஒன்று.

இந்திய வாக்காளர்கள் பிளவுபட்ட நிலையில், சுந்தரராஜூ, ஜசெக ஆதரவு சீன வாக்குகளைத்தான் பெரிதும் நம்பி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார்.

எத்தனை வாக்குகளைப் பிரிப்பார் டேவிட் மார்ஷல்?

சுந்தரராஜூவை எதிர்த்துப் போட்டியிடும் மற்ற கட்சி வேட்பாளர்களை விட, அதிக கவனத்தை ஈர்த்திருப்பவர் சுயேட்சையாகக் களத்தில் குதித்திருக்கும் டேவிட் மார்ஷல். சுமார் 15 ஆண்டுகளாக செபராங் ஜெயா நகராண்மைக் கழக உறுப்பினராக சேவையாற்றியிருப்பவர்.

நாடு முழுவதிலுமுள்ள இந்திய நகராண்மைக் கழக உறுப்பினர்களில் யார் பிரபலம் என்றால் தாராளமாக டேவிட் மார்ஷலை நோக்கி விரல் நீட்டலாம். அந்த அளவுக்கு பல சமூக செயல்பாடுகளை முன்னெடுத்தவர். மலிவு விலை மதுபான ஒழிப்புப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபாடு காட்டி வருபவர். அடிக்கடி தொலைக்காட்சி செய்திகளில் தோன்றி சமூகப் பிரச்சனைகளுக்கான தன் செயல்பாடுகளையும் கருத்துகளையும் தெரிவிப்பவர்.

நகராண்மைக் கழக உறுப்பினராக, பிறை வட்டார இந்தியர்களுக்கு பல்வேறு சமூக நல உதவிகளைச் செய்தவர் – பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தவர் – என்ற முறையில் டேவிட் மார்ஷல் இந்த சட்டமன்றத் தொகுதியில் இந்தியர்களிடையே பிரபலம்.

அதுமட்டுமல்ல! இராமசாமியின் நெருக்கமான அரசியல் சகாவாகத் திகழ்ந்தவர் டேவிட் மார்ஷல். இராமசாமியின் எல்லா நிகழ்ச்சிகளிலும் அவரைப் பார்க்கலாம். இராமசாமி தமிழ் நாட்டுக்கு வருகை மேற்கொண்டபோதும் உடன் சென்றவர். இந்த பொதுத் தேர்தலில் அவருக்கு ஜசெக சார்பில் சட்டமன்றத் தொகுதி வழங்கப்படலாம் என்னும் அளவுக்கு ஆரூடங்கள் கூட நிலவின.

எனினும் துரதிர்ஷ்டவசமாக, இராமசாமிக்கே தொகுதி வழங்கப்படதாததால் தன் அரசியல் தலைவருக்கு ஆதரவாக – ஜசெகவிலிருந்தும், செபராங் ஜெயா நகராண்மைக் கழக்கத்திலிருந்தும் பதவி விலகி – சுயேட்சையாகப் போட்டியில் குதித்திருக்கிறார் டேவிட் மார்ஷல்.

வேட்புமனுத்தாக்கல் நாளன்று அவருக்கு ஆதரவாகத் திரண்ட மக்கள் கூட்டமும் ஊடகச் செய்திகளாகியிருக்கின்றன. வித்தியாசமாக வேட்டி ஜிப்பாவுடன் வந்து வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார் டேவிட் மார்ஷல். அவர் வெற்றி பெறும் வாய்ப்பு குறைவு என்றாலும், எத்தனை விழுக்காட்டு இந்தியர் வாக்குகளை அவர் பிரிப்பார் என்பதுதான் பிறை தொகுதியில் எழுந்திருக்கும் விவாதம். இராமசாமியின் தீவிர ஆதரவாளர்கள் டேவிட் மார்ஷலுக்கு வாக்களிக்கக் கூடும்.

இராமசாமி போட்டியிடாததால் அதிருப்தி கொண்ட அவரின் ஆதரவு வாக்குகளைப் பெற வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறார் சுந்தரராஜூ. இராமசாமியும் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரவில்லை என்பதால் சுந்தரராஜூவுக்கு பின்னடைவுதான்.

எனினும் சுந்தரராஜூவையும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. கடந்த சில ஆண்டுகளாக பினாங்கு மாநிலத்தில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, பல செயல்பாடுகளை மேற்கொண்டு நன்கு அறிமுகமானவராகத் திகழ்கிறார். சொந்தமாக வணிகத் துறையில் கடுமையாக உழைத்து முன்னேறியவர். லிம் குவான் எங்குக்கும் நெருக்கமானவர்.

கடந்த முறை மஇகா வேட்பாளரை ஆதரித்த மஇகா உறுப்பினர்கள் – இந்திய வாக்காளர்களின் ஆதரவையும் – ஒற்றுமை அரசாங்கத்தின் பெயரில் சுந்தரராஜூ பெற முடிந்தால், வெற்றி வாய்ப்பு அவருக்கு சாதகமாகும்.

அடுத்த துணை முதலமைச்சர் வேட்பாளர் என்பதால்– இதுவரை யாருக்கு வாக்களிப்பது என முடிவு செய்ய நடுநிலை இந்திய வாக்காளர்கள் – சுந்தரராஜூ பக்கம் திரும்பவும் வாய்ப்புண்டு.

இந்தியர் வாக்குகள் பிளவுபட்டாலும் 51 விழுக்காட்டு சீன வாக்காளர்கள்தான் சுந்தரராஜூவுக்கு இருக்கும் பலம். எவ்வளவுதான் அதிருப்திகள் நிலவினாலும்  பினாங்கு மாநிலத்தை ஜசெகவின் கோட்டையாக விட்டுக் கொடுக்கக் கூடாது என பினாங்கு மாநில சீன வாக்காளர்களின் நிலைப்பாடு பிறை தொகுதியிலும்  எதிரொலிக்கும் என எதிர்பார்க்கலாம்.

சுந்தரராஜூ வெற்றி பெற்றாலும் இந்த முறை அவருக்கான பெரும்பான்மை வாக்குகள் குறையலாம். எனினும், சீன வாக்காளர்களின் ஜசெக ஆதரவே, பிறை தொகுதியில் அவர் வெற்றி பெற உதவப் போகும் சாதக அம்சம்.

– இரா.முத்தரசன்