Home Photo News ஜெரம் பாடாங் : மஇகாவின் வெற்றியை அம்னோ தக்க வைத்துக் கொள்ள முடியுமா?

ஜெரம் பாடாங் : மஇகாவின் வெற்றியை அம்னோ தக்க வைத்துக் கொள்ள முடியுமா?

387
0
SHARE
Ad

(நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலில் அனைவரின் பார்வையும் பதிந்திருக்கும் தொகுதி ஜெரம் பாடாங். கடந்த முறை மஇகா-தேசிய முன்னணி சார்பில் டத்தோ மாணிக்கம் லெட்சுமணன் வெற்றி பெற்ற தொகுதி. 6 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் மஇகா போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டதால் மாணிக்கத்திற்கும் இங்கே மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவருக்கு பதிலாக அம்னோ வேட்பாளர் களமிறங்கியுள்ளார். மஇகாவின் வெற்றியை அவரால் தக்க வைத்துக் கொள்ள முடியுமா? தன் பார்வையில் தொகுதி நிலவரங்களை விவரிக்கிறார் இரா.முத்தரசன்)

*மஇகாவின் மாணிக்கம் லெட்சுமணன் 2 தவணைகளாக வெற்றி பெற்ற தொகுதி

“அன்வாரின் நேரடிப் பிரச்சாரம் உதவுமா?

*தேசிய முன்னணி வேட்பாளர் விபத்தில் சிக்கி சிகிச்சை பெறுவதால் பிரச்சாரத்தில் பின்னடைவா?

70 வயதைக் கடந்த நிலையிலும் வேகமாக விறுவிறுவென்று நடக்கும் பிரபலங்களில் ஒருவர் நடிகர் ரஜினிகாந்த். மற்றொருவர் நமது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம். எவ்வளவுதான் வேலைப்பளு இருந்தாலும் இடையிடையே நடைப் பயிற்சி மேற்கொள்ளத் தவறாதவர் அன்வார் இப்ராஹிம்.

ஜெம்புல் – ஜெரம் பாடாங் பிரச்சாரத்திற்கு செல்லும் முன் வீட்டைச் சுற்றி நடைப் பயிற்சியில் ஈடுபட்ட அன்வார் இப்ராகிம்

கடந்த திங்கட்கிழமை (ஜூலை 31) தன் முகநூல் பக்கத்தில் தன் வீட்டைச் சுற்றி தன் குடும்பத்தினருடன் நடைப் பயிற்சி மேற்கொண்ட புகைப்படத்தையும் காணொலியையும் பதிவிட்டார் அன்வார். “ஜெம்புலுக்கு (நெகிரி செம்பிலான்) பிரச்சாரத்திற்கு செல்வதற்கு முன்னால் என் குடும்பத்தினருடன் வீட்டைச் சுற்றி நடைப் பயிற்சி செல்கிறேன்” என அந்தப் பதிவில் தெரிவித்தார்.

நெகிரி செம்பிலானில் ஜெம்புல் வட்டாரத்திற்கு பிரச்சாரம் செய்ய அன்வார் சென்றார் என்பதிலிருந்து அங்குள்ள சட்டமன்றத் தொகுதிகளின் முக்கியத்துவத்தையும் நம்மால் உணர முடியும். ஆம்! ஜெம்புல் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் 4 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றுதான் ஜெரம் பாடாங்.

#TamilSchoolmychoice

2018 பொதுத் தேர்தலில் நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கம் பக்காத்தான் ஹாரப்பான் வசம் வீழ்ந்தாலும் ஜெரம் பாடாங் தொகுதியில் மஇகா சார்பில் போட்டியிட்ட மாணிக்கம் லெட்சுமணன் வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலில் நெகிரி செம்பிலானில் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட மஇகா ஜெரம் பாடாங்கில் மட்டுமே வெற்றி பெற்றது. மற்றொரு தொகுதியான ஸ்ரீ தஞ்சோங்கில் பிகேஆர் கட்சியிடம் தோல்வியைத் தழுவியது.

அன்வாருடன் தேர்தல் பிரச்சாரத்தில் இணைந்து கொண்ட மாணிக்கம் லெட்சுமணன்

2013 பொதுத் தேர்தலிலும் இதே தொகுதியில் வெற்றி பெற்றார் மாணிக்கம் லெட்சுமணன். தொடர்ந்து மாநில அரசாங்கத்தில் ஆட்சிக் குழு உறுப்பினராகவும் பணியாற்றினார். இந்த முறை வெற்றி பெற்ற தொகுதிகளில் அந்தந்தக் கட்சிகளே மீண்டும் போட்டியிடும் என்ற அடிப்படையில் தேசிய முன்னணி – பக்காத்தான் ஹாரப்பான் இடையில் தொகுதிகள் பங்கிட்டுக் கொள்ளப்பட்டன.

எனவே, மீண்டும் மாணிக்கம் லெட்சுமணன் இங்கு போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அதிரடியாக 6 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை-புறக்கணிக்கிறோம்- என அறிவித்தார் மஇகா தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன். மீண்டும் போட்டியிடும் வாய்ப்பையும் துரதிர்ஷ்டவசமாக இழந்தார் மாணிக்கம்.

அன்வார் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள இயலாத நிலையில் ஜெரம் பாடாங் வேட்பாளர்

விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தேசிய முன்னணி ஜெரம் பாடாங் வேட்பாளர் முகமட் ஸாயிடி

தனது தொகுதியில் தனக்காகப் பிரச்சாரம் செய்ய பிரதமரே களம் இறங்குகிறார் என்றால் எந்த ஒரு வேட்பாளரும் துள்ளிக் குதித்து முன்னுக்கு நிற்பார். ஆனால் ஜெரம் பாடாங் தொகுதியில் போட்டியிடும் முகமட் ஸாயிடி அன்வாரோடு பிரச்சாரத்தில் ஈடுபட முடியாத சூழ்நிலை. கார்விபத்தில் சிக்கி காலில் பலமாக அடிபட்டு சிகிச்சை பெற்று வருகிறார் முகமட் ஸாயிடி. அன்வாரின் அரசியல் செயலாளரும் மருத்துவமனையில் அவரைச் சென்று கண்டு ஆறுதல் கூறினார். மற்ற அரசியல் பிரமுகர்களும் மருத்துவமனை சென்று அவரின் உடல்நலம் விசாரித்து வருகின்றனர்.

முகமட் ஸாயிடிக்கு ஏற்பட்ட விபத்து அவருக்குப் பின்னடைவா – அல்லது அதுவே அவருக்கு அனுதாப வாக்குகளைப் பெற்றுத் தருமா என்பது – தேர்தல் முடிவுகளில்தான் தெரியவரும்.

இருமுனைப் போட்டியில் ஜெரம் பாடாங்

ஜெரம் பாடாங் – பிரச்சாரத்திற்கு வந்த மொகிதின் யாசினை வரவேற்கும் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் சுரேஷ்

மஇகாவின் மாணிக்கத்திற்கு பதிலாக இங்கு போட்டியிடும் அம்னோ-தேசிய முன்னணி சார்பில்  முகமட் ஸாயிடி அப்துல் காடிர் போட்டியிட – அவரை எதிர்த்து பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் போட்டியிடுகிறார் இந்தியரான சுரேஷ் சீனிவாசன். எனவே இங்கு இருமுனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

சுரேஷையும் சாதாரணமாக மதிப்பிட்டு விட முடியாது. கடந்த 2018 பொதுத் தேர்தலில் சுயேட்சையாக இந்தத் தொகுதியில் போட்டியிட்டு 2,640 வாக்குகள் பெற்று அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தார். தேசிய முன்னணியை எதிர்த்துப் போட்டியிட்ட பக்காத்தான் ஹாரப்பான் வேட்பாளருக்கே சுரேஷூக்கு கிடைத்த வாக்குகளை விட குறைவாக 2,302 வாக்குகள்தான் கிடைத்தன.

இந்த முறை அதே சுரேஷ் பெர்சாத்து கட்சியில் இணைந்து பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இந்த முறை மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 16,322. இதில் இந்தியர்கள் 36 விழுக்காட்டினர். மஇகா போட்டியிடவில்லை – மாணிக்கம் நிற்கவில்லை – என்பது போன்ற காரணங்களால் – இந்தியர்கள் வாக்குகள் சுரேஷ் பக்கம் திசை திரும்பும் வாய்ப்புகள் அதிகம்.

மலாய் வாக்குகள் சுமார் 50 விழுக்காட்டைக் கொண்டிருக்கின்றன ஜெரம் பாடாங் தொகுதியில். பச்சை அலை – மலாய் வாக்காளர்களின் ஆதரவு அலை – இங்கேயும் பெரிக்காத்தானை நோக்கி வீசினால், இந்தியர்களின் கணிசமான வாக்குகளோடு சுரேஷ், பெரிக்காத்தானுக்கு வெற்றியைத் தேடித் தரக் கூடிய சாத்தியத்தையும் மறுப்பதற்கில்லை.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான மாணிக்கம் தொய்வடையாமல், தொடர்ந்து தேசிய முன்னணிக்கு ஆதரவான பிரச்சாரங்களில் கலந்து கொண்டு வருகிறார். அன்வார் கலந்து கொண்ட பிரச்சாரக் கூட்டத்திலும் மாணிக்கம் கலந்து கொண்டார். மாணிக்கத்தின் இந்த கண்ணியம் தேசிய முன்னணி வேட்பாளருக்கு சாதகமாக அமையலாம்.

சீன வாக்காளர்கள் 10 விழுக்காட்டினர் மட்டுமே! எனவே, அவர்களின் பெரும்பான்மை வாக்குகள் ஜசெக இணைந்திருக்கும் ஒற்றுமை அரசாங்க வேட்பாளருக்கு சாதகமாகவே விழும் என எதிர்பார்க்கலாம். மற்ற வாக்காளர்கள் இங்கு சுமார் 4 விழுக்காட்டினர் இருக்கின்றனர்.

இருமுனைப் போட்டி என்பதால், ஆபத்து தேசிய முன்னணிக்குத்தான் அதிகம். பெரிக்காத்தானுக்கு ஆதரவு அலை இங்கு வீசினாலும், இந்தியர்களின் வாக்குகள் சுரேஷூக்கு ஆதரவாகத் திரும்பினாலும், ஆபத்து தேசிய முன்னணிக்குத்தான்.

பெரிக்காத்தான் நேஷனல் இந்த முறை நெகிரி செம்பிலான் மாநிலத்தையும் கைப்பற்றும் என அதன் தலைவர்கள் முழக்கமிட்டு வருகிறார்கள். ஜெரம் பாடாங் உட்புற – புறநகர் தொகுதி! பாரம்பரியமாக தேசிய முன்னணி கோட்டையாகத் திகழ்ந்து வரும் தொகுதி. இந்தத் தொகுதிக்குள்ளேயும் பச்சை அலை ஊடுருவி வீசுமா?

மலாய் வாக்குகள் எப்படியும் பிளவுபடும் என்ற நிலையில், ஜெரம் பாடாங் தொகுதியை அம்னோ மீண்டும் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்பதை நிர்ணயிக்கப் போவது இந்திய வாக்காளர்களே!

– இரா.முத்தரசன்