Home நாடு நெகிரி செம்பிலான் : ஆட்சிக் குழுவில் மீண்டும் அருள்குமார் – வீரப்பன்

நெகிரி செம்பிலான் : ஆட்சிக் குழுவில் மீண்டும் அருள்குமார் – வீரப்பன்

1005
0
SHARE
Ad

சிரம்பான் :நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக் குழுவில் மீண்டும் 2 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். ஜே.அருள் குமார், எஸ்.வீரப்பன் இருவரும் இன்று நடைபெற்ற நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்களுக்கான பதவியேற்பு சடங்கில் ஜசெக சார்பில் மீண்டும் ஆட்சிக் குழு உறுப்பினர்களாக பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் இப்னி அல்மர்ஹூம் துவாங்கு முனாவிர் முன் பதவியேற்ற 10 நெகிரி செம்பிலான் மாநில செயற்குழு உறுப்பினர்களில் ஆறு புதிய முகங்களும் அடங்குவர்.

ஜசெகவும் தேசிய முன்னணியும் தலா 4 ஆட்சிக் குழு உறுப்பினர்களைக் கொண்டுள்ளன. பிகேஆர் 2 ஆட்சிக் குழு உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

#TamilSchoolmychoice

கோலப்பிலாவில் உள்ள இஸ்தானா பெசார் ஸ்ரீ மெனாந்தியில் இன்று வியாழக்கிழமை காலை 10.15 மணிக்கு பதவியேற்பு விழா – நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவில் உரையாற்றிய மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருண், ஆட்சிக் குழு உறுப்பினர்களில் ஆறு பேர் புதிய முகங்கள் என்றும், நான்கு பேர் மீண்டும் நியமிக்கப்பட்டதாகவும் கூறினார்.

ஜசெக 4, தேசிய முன்னணி 4, பிகேஆர் 2

புதிய உறுப்பினர்கள் டத்தோஸ்ரீ ஜலாலுடின் அலியாஸ் (மூத்த முன்னாள் பிரதிநிதி), நூர்சுனிதா பேகம் முகமட் இப்ராஹிம், டத்தோ இஸ்மாயில் லாசிம், முஸ்தபா நாகூர், டத்தோ முகமட் பைசல் ரம்லி மற்றும் தெங்கு ஜம்ரா தெங்கு சுலைமான் ஆகியோராவர்.

மீண்டும் நியமிக்கப்பட்டவர்கள் தியோ கோக் சியோங், நிக்கோல் டான், ஜே. அருள் குமார், எஸ்.வீரப்பன் ஆகியோராவர்.

ஆகஸ்ட் 12 மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனல் கூட்டணி முறையே 17 மற்றும் 14 இடங்களைக் கைப்பற்றி மாநில அரசாங்கத்தை அமைத்தது, பெரிகாத்தான் நேசனல் ஐந்து இடங்களைக் கைப்பற்றியது.

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் மந்திரி பெசாராக 2-வது தவணைக்கு அமினுடின் ஹாருண் கடந்த திங்கட்கிழமை (ஆகஸ்ட் 21) பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

36 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டிருக்கிறது நெகிரி செம்பிலான். சிக்காமாட் சட்டமன்றத்திற்குப் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமினுடின் ஹாருண் போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினராகவும் 15-வது பொதுத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நெகிரி செம்பிலானில் இந்த முறை 4 இந்தியர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2018 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் 6 இந்தியர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தனர். ஜசெக சார்பில் 4 பேரும் பிகேஆர் சார்பில் ஒருவரும் மஇகா சார்பில் ஒருவரும் நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தில் வெற்றி பெற்றிருந்தனர்.

ஆகஸ்ட் 12 சட்டமன்றத் தேர்தலில் நீலாய் தொகுதியில் அருள்குமார் ஜம்புநாதன், சிரம்பான் ஜெயா தொகுதியில் குணசேகரன், ரெப்பா தொகுதியில் வீரப்பன் ஆகிய மூவரும் ஜசெக சார்பில் வெற்றி பெற்றனர்.

பிகேஆர் சார்பில் ஸ்ரீ தஞ்சோங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட டாக்டர் ராஜசேகரன் 3,996 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

இந்த வெற்றிகளைத் தொடர்ந்து ஆட்சிக் குழுவில் இந்தியர் சார்பில் 2 ஜசெக பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளனர். கடந்த 2018 பொதுத் தேர்தலுக்குப் பின்னரும் 2 இந்தியர்கள் – இதே அருள்குமார், வீரப்பன் – நெகிரி செம்பிலான் ஆட்சிக் குழுவில் இடம் பெற்றனர்.

இடைப்பட்ட காலத்தில் ஆட்சிக் குழு உறுப்பினர் பதவியிலிருந்து விலகிய அருள்குமார், அதன்பின்னர் போக்குவரத்து அமைச்சராக இருக்கும் அந்தோணி லோக்கின் அரசியல் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஆகஸ்ட் 12 நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தேர்தலில் அவர் மீண்டும் நீலாய் தொகுதியில் போட்டியிட்டு  வெற்றி பெற்றார்.