Home அரசியல் சூல்கிப்ளி நோர்டினுக்கு வாக்களிக்காதீர்கள்-சரவணன் அதிரடி அந்தர் பல்டி

சூல்கிப்ளி நோர்டினுக்கு வாக்களிக்காதீர்கள்-சரவணன் அதிரடி அந்தர் பல்டி

659
0
SHARE
Ad

Saravanan-Featureபெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 26-  தேசிய முன்னணியின் சரித்திரத்தில் இதுவரை நடைபெறாத ஒரு சம்பவமாக, தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிடும் தாப்பா தொகுதி வேட்பாளர் டத்தோ எம்.சரவணன் மற்றொரு தேசிய முன்னணி வேட்பாளராக ஷா ஆலாம் தொகுதியில் போட்டியிடும் சுல்கிப்ளி நோர்டினுக்குஆதரவளிக்கக் கூடாது என போர்க்கொடி தூக்கியுள்ளார்.

#TamilSchoolmychoice

இதனால் தேசிய முன்னணியின் கட்சிக் கட்டுப்பாட்டை அவர் மீறியுள்ளதோடு, ம.இ.கா வின் கட்சிக் கட்டுப்பாட்டையும் அவர் மீறியுள்ளார் என்று கருதப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து பிரதமர் நஜிப்பும் ம.இ.கா தலைவர் ஜி.பழனிவேலுவும் அவர் மீது நடவடிக்கை எடுப்பார்களா அல்லது சரவணனின் கருத்துக்கு பதில் சொல்வார்களா என்ற ஆர்வம் அரசியல் நோக்கர்களிடையே எழுந்துள்ளது.

இந்தியர்களையும், இந்து சமயத்தையும் இழிவுபடுத்தி சுல்கிப்ளி செய்த விமர்சனங்களைத் தான் ஒருபோதும் மன்னிக்க இயலாது என்றும்தேசிய முன்னணியின், ஷா ஆலாம் வேட்பாளரான அவரை மன்னிக்கவும் கூடாது, அவருக்கு வாக்களிக்கவும் கூடாது என வாக்காளர்களைக் கேட்டுக் கொள்வதாகவும் மஇகா உதவித் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற தேசிய முன்னணி  வேட்பாளருமான டத்தோ எம். சரவணன் கூறியுள்ளார்.

இந்தியர்களின் வாக்குகளைப் பெற தகுதியற்றவர் சுல்கிப்ளி

நாம் முஸ்லிம் மதத்தினரை இழிவுபடுத்தி விட்டு பின்பு மன்னிப்புக்கேட்டால் அவர்கள் மன்னிப்பார்களா என இந்துக்களிடம் வினவினார் சரவணன்.

தாம் பிரதமரின் தேர்வை மதிப்பதாகவும், அதே நேரத்தில் சுல்கிப்ளி போன்றவர்களால் கட்சிக்கே களங்கம் என்று கூறிய சரவணன், தான் தொடர்ந்து இந்தியர்களிடம் சுல்கிப்ளிக்கு  வாக்களிக்க வேண்டாம் என்று வலியுறுத்தப்போவதாக தெரிவித்தார்.

இதுநாள் வரை எங்கே போனார் சரவணன்? தாப்பாவில் தோல்வி பயமா?

கோலாலம்பூரில் அடி வாங்கிய ஒருவனுக்கு கோலகுபுபாருவில் மீசை துடித்தது போல, வேட்பாளர் அறிவிப்பு செய்து, இத்தனை நாட்கள் ஆகியும் அமைதியாக இருந்துவிட்டு இப்போது எங்கேயிருந்து வந்தது சரவணனுக்கு இந்த ஆவேசம்? ஆச்சரியமாக உள்ளது.

தாப்பாவில் சரவணன் வெற்றி பெற்று விடுவார் என பரவலாக ஆரூடங்கள் கூறப்பட்டு வந்த வேளையில், சுல்கிப்ளி நோர்டினை வேட்பாளராக அறிவித்தவுடன் இந்தியர் வாக்குகளின் நிலைமை தலை கீழாக மாறிப் போனது.

நாடு முழுவதும் தேசிய முன்னணிக்கு எதிரான வெறுப்பு அலை இந்தியர்களிடையே உருவானது.

அதைத் தணிப்பார்கள் என்று பார்த்தால் எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல இப்ராகிம் அலிக்கும் ஆதரவு தெரிவித்து அம்னோ வேட்பாளர் பாசீர் மாஸ் தொகுதியில் இருந்து ஒதுங்கிக்  கொண்டார்.

இதனால் இந்தியர்களிடையே மேலும் எதிர்ப்பு தேசிய முன்னணிக்கு எதிராகப் பெருகி வருகின்றது.

இதுநாள் வரை ஏன் சரவணன் பேசவில்லை?

சுல்கிப்ளியின் வேட்பாளர் தேர்வு வேட்புமனுத்தாக்கலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக அறிவிக்கப்பட்டது. அப்போது எதுவும் வாய் திறக்காத சரவணன் அதன் பின்னர் இப்ராகிம் அலிக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட பின்னரும் இதுவரை வாய் திறக்கவில்லை. தனது எதிர்ப்பையும் காட்டவில்லை.

ஆனால், இப்போதோ நாடு முழுவதும் சுல்கிப்ளி-இப்ராகிம் அலி- ஹிண்ட்ராப் – பிரச்சனைகளால் இந்தியர்களிடையே தேசிய முன்னணிக்கு எதிராகப்  பெருகி வரும் வெறுப்பு அலைகள் தாப்பா நாடாளுமன்றத் தொகுதியின் கரைகளையும் தொட்டுவிட்டதாகத் தெரிகின்றது.

சரவணனுக்கு எதிராக தீவிரப் பிரச்சாரம் செய்து வரும் ஹிண்ட்ராப் போராட்டவாதியும், உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறைவாசம் அனுபவித்த 5 ஹிண்ட்ராப் தலைவர்களில் ஒருவருமான வசந்தகுமார், சுல்கிப்ளி-இப்ராகிம் அலி விவகாரத்தை முன்வைத்து தனது பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளதால், இந்திய வாக்காளர்களிடையே சரவணனுக்கான ஆதரவு பெருமளவில் சரிந்துள்ளது என தாப்பா நாடாளுமன்ற தொகுதியில் மக்கள் கூட்டணிக்காக பாடுபட்டு வரும் ஆதரவாளர்கள் கூறினர்.

இதனால் இந்தியர் வாக்குகள் கடுமையாக பிளவு கண்டால் அதனால் தனது வெற்றி வாய்ப்பு தாப்பாவில் ஊசலாடக் கூடும் என்ற நிலைமை உருவாகி உள்ளதால், அந்தர் பல்டியாக கட்சிக் கட்டுப்பாட்டைப் பற்றி கவலைப்படாமல் சரவணன் இந்த திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் எனக் கருதப்படுகின்றது.

இதனால், இருக்கின்ற ம.இ.கா தலைவர்களிலேயே சரவணன்தான் துணிச்சலானவர் என்ற தோற்றம் ஏற்படும் என்பதோடு, தாப்பா தொகுதியிலுள்ள இந்திய வாக்காளர்களின் ஆத்திரத்தையும் தணித்து அவர்களின் கணிசமான வாக்குகளையும் கைப்பற்ற முடியும் என்ற கணக்கோடுதான் சரவணன் இந்த அறிவிப்பைச் செய்துள்ளார் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.