Home நாடு மாமன்னர் : “அனைத்து மலேசியர்களுக்கும் நியாயமாகவும் நீதியுடன் நடந்து கொள்வேன்”

மாமன்னர் : “அனைத்து மலேசியர்களுக்கும் நியாயமாகவும் நீதியுடன் நடந்து கொள்வேன்”

263
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியாவின் 17வது மன்னராக இன்று அதிகாரபூர்வமாக அரியணை அமர்ந்த ஜோகூர் மாநில ஆட்சியாளர் சுல்தான் இப்ராஹிம், அனைத்து மலேசியர்களையும் முழுமையாக கருத்தில் கொண்டு தனது கடமைகளை உண்மையுடனும், நேர்மையுடனும், நியாயமாகவும் நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளார்.

புதிதாகப் பதவியேற்ற மாமன்னர், நாட்டின் நல்வாழ்வையும் இறையாண்மையையும் பாதுகாப்பதாகவும் கூறினார்.

“முதலில், என் சகோதர ஆட்சியாளர்கள் என் மீது நம்பிக்கை வைத்து, நாட்டின் தலைவராக பொறுப்பேற்கும் கௌரவத்தை எனக்கு அளித்ததற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இறைவன் அருளால், நான் என் கடமைகளை உண்மையுடனும் நேர்மையுடனும் நிறைவேற்றுவேன், மேலும் நாட்டின் நல்வாழ்வையும் இறையாண்மையையும் பாதுகாக்க சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் முழுமையாக கருத்தில் கொண்டு நியாயமாக ஆட்சி செய்வேன்,” என்று இன்று சனிக்கிழமை (ஜூலை 20) இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற அவரது பதவியேற்பு விழாவில் ஆற்றிய உரையில் மன்னர் கூறினார்.

#TamilSchoolmychoice

மக்களின் சுமையைக் குறைக்கவும், நாட்டை மேலும் முன்னேற்றமடையச் செய்யவும் செழிப்படையச் செய்யவும் அரசாங்கம் தொடர்ந்து பணியாற்றும் என்று சுல்தான் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்தார்.

தனது பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டதற்காக புருணையின் சுல்தான் ஹசனல் போல்கியா, அவரின் துணைவியார் ராஜா இஸ்தெரி பெங்கிரன் அனக் ஹஜா சலேஹா ஆகியோருக்கு மன்னர் நன்றி தெரிவித்தார்.

மேலும் பஹ்ரைன் மன்னர் ஷேக் ஹமத் பின் ஈசா அல் கலிஃபாவின் வருகைக்கும் மன்னர் நன்றி தெரிவித்தார்.

“விழாவில் கலந்து கொண்ட அனைத்து மலாய் ஆட்சியாளர்களுக்கும் அவர்களின் பிரதிநிதிகளுக்கும் எனது மிக உயர்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று இங்கு வருகை தந்த அனைவருக்கும், யாங் தி-பெர்துவான் அகோங்காக எனது பதவியேற்பை முன்னிட்டு வாழ்த்துச் செய்திகளையும் பிரார்த்தனைகளையும் அனுப்பியவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்,” என்று சுல்தான் இப்ராஹிம் கூறினார்.

“இறுதியாக, மலேசியாவை இறைவன் ஆசீர்வதிக்க வேண்டுமென்று பிரார்த்திப்போம், அதனால் நாடு தொடர்ந்து முன்னேறி செழிக்கும், மக்கள் ஒற்றுமையாக, அமைதியாக மற்றும் மகிழ்ச்சியாக வாழ்வார்கள்,” என்று அவர் கூறினார்.

மலேசியாவின் 17வது மன்னராக சுல்தான் இப்ராஹிமின் பதவியேற்பு, இஸ்தானா நெகாராவில் (தேசிய அரண்மனை) மலாய் அரச பாரம்பரியம் மற்றும் மரபுகளில் தோய்ந்த விழாவாக நடைபெற்றது. நாட்டின் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியாக இது அமைந்தது.

சுல்தான் இப்ராஹிம் 2023 அக்டோபர் 27-ஆம் தேதியன்று இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற ஆட்சியாளர்கள் மாநாட்டின் 263-வது சிறப்புக் கூட்டத்தில் மலேசியாவின் 17-வது மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 31 ஜனவரி 2024 அன்று மாமன்னராகப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

மலாய் ஆட்சியாளர்கள், ஆளுநர்கள், வெளிநாட்டு பிரமுகர்கள், தலைவர்கள் உட்பட சுமார் 700 விருந்தினர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர். இது தேசியத் தொலைக்காட்சியில் நேரலையில் ஒளிபரப்பானது. சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கும் இந்த அரியணை அமரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பகாங்கின் அல்-சுல்தான் அப்துல்லா ரியாயத்துதீன் அல்-முஸ்தஃபா பில்லா ஷா நாட்டின் 16-வது மன்னரக ஆட்சி புரிந்தார். அவரின் ஆட்சிக் காலம் ஜனவரி 30 2024 அன்று முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராஹிம், மன்னராகப் பதவியேற்றார்.