சென்னை: அதிமுகவிலிருந்து பிரிந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கட்சி (அமமுக) என்ற தனிக்கட்சி கண்ட டிடிவி தினகரன் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து செயல்பட்டு வந்தார்.
அந்தக் கூட்டணியிலிருந்து விலகுவதாக டிடிவி தினகரன் இன்று அறிவித்தார். அதிமுக-பாஜக இணைந்த கூட்டணி ஏற்பட்டதிலிருந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த ஓ.பன்னீர் செல்வம் அணி, அமமுக கட்சி, ஆகிய தரப்புகள் அதிருப்தி கொண்டிருக்கின்றன.
இதைத் தொடர்ந்து ஏற்கனவே, ஓ.பன்னீர் செல்வம் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்து விட்டார். இன்று விலகியுள்ள டிடிவி தினகரன் இனி பன்னீர் செல்வத்துடன் இணைந்து செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் நாளை வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 5) காலையில் முக்கிய அறிவிப்பு ஒன்றைச் செய்யவிருக்கிறார். அந்த அறிவிப்பு என்னவாக இருக்கும் என்ற பரபரப்பும் அரசியல் வட்டாரங்களில் ஏற்பட்டுள்ளது.
பாஜக கூட்டணியில் இருந்து விலகும் கட்சிகள், தரப்புகள் விஜய்யின் தவெக கட்சியோடு இணைந்து செயல்படுவார்களா அல்லது திமுக கூட்டணியோடு இணைந்து செயல்படுவார்களாக என்ற கேள்வியும் எழுந்துள்ளது.




